விடுபட்ட திருவருட்பா பாடல்கள்

திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மூலம் கிடைக்காத விடுபட்டு போன திருவருட்பா பாடல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

திருவருட்பாவில் கீழ்கண்ட பாடல்கள் கிடைக்காமல் விடுபட்டு இருந்தன:
1. 4067 ஆவது பாடலில் முதல் இரு வரிகள்

திருவருட்பா 3ம் திருமுறை 19- ஆவது பதிகம் – திருவோத்தூர் சிவஞான தேசிகன் திருச்சீர் அட்டகம்
2. 4-ஆவது பாடலில் 5 வரிகளும்
3. 5,6,7,8 ஆகிய 4 பாடல்களும்

இப்பாடல்களை “கண்மணி மாலை” என்ற நூலில் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா வெளியிட்டுள்ளார்கள். எல்லா மக்களும் அறிய அப்பாடல்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம்.

புத்தகம் : கண்மணி மாலை
அத்தியாயம் : 15. மறைந்து கிடைத்த திருவருட்பா
எழுதி வெளியிட்டவர் : ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

ஆன்மநேய ஒருமைப்பாட்டுடையீர்,

அடியேன் கண்மணிமாலை நூல் எழுதி கொண்டிருக்கும் சமயம், திருவருட்பா பற்றி ஆராயும் போது 4067 ஆவது பாடலில் முதல் இரு வரிகள் இல்லை. அடுத்த இருவரிகளும் இருந்தது. கீழே ஒரு குறிப்பு. மூல ஏடுகள் சிதைந்து போனதால் முதல் இருவரிகள் கிட்டாது போயிற்று என்று இருந்தது. வருந்தினேன், வள்ளல் பெருமானிடம் வேண்டினேன். அருள் புரிந்தார். வள்ளலார் என் உள்ளத்தில் முதல் இரு வரியையும் உணர்த்தினார். பேருவகை கொண்டேன்.

திருவருட்பாவில் இருக்கின்ற மீதி இரு வரிகள்
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – –
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
– 4067 ஆவது பாடல்

இதோ, அடியேன் உள்ளத்தில் வள்ளல் பெருமான் உரைத்த இரு வரிகள்:

ஒரார் முகமும் காட்டுவித்து ஒங்கும் படிகள் ஏற்றுவித்த
பாரூர் பதியே சோதியேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே

கேட்டதும் கொடுத்தார் திருவருட் பிரகாச வள்ளலார் அருள் வள்ளலல்லவா? அருள் மழை பொழிகின்றார்.

முழு பாடல்:
ஒரார் முகமும் காட்டுவித்து ஒங்கும் படிகள் ஏற்றுவித்த
பாரூர் பதியே சோதியேநின் செல்வப்பிள்ளை ஆக்கினையே
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
– 4067 ஆவது பாடல்

இதேப் போன்று திருவருட்பாவில் வேறு எதாவது பாடல்கள் விடுபட்டு உள்ளனவா என ஆராய்ந்தேன். திருவருட்பா 3ம் திருமுறை 19- ஆவது பதிகம் – திருவோத்தூர் சிவஞான தேசிகன் திருச்சீர் அட்டகம் – 8 பாடல்களுக்கு, முதல் 3 பாடல்களும் 4-ஆவது பாடலில் – 2505- ஆவது பாடலில் முதல் 3 வரிகள் மட்டுமே இருந்தது.நான்காவது பாடலின் ஏனைய 5 வரிகளும் 5,6,7,8 ஆகிய 4 பாடல்களும் கிடைக்கவில்லை என்ற குறிப்பும் இருந்தது.

வள்ளல் பெருமானை பிரார்த்தித்தேன். நல்ல மருந்து ஜோதி மருந்து தான் என்னிடம் உள்ளதே. கருணையே வடிவான வள்ளல் பெருமான் அனைத்தையும் எனக்கு உரைத்து அருளினார்கள்.

மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையின் உட்புகு முன் வள்ளல் பெருமான், இனி எல்லோர் உள்ளத்திலும் புகுந்து கொள்வோம் எனக்கூறியது என் வாழ்வில் நடந்து விட்டது. சத்தியமான வார்த்தை!?

இதோ விடுபட்ட பாடல்கள்
4-ஆவது பாடல் 2505-ஆவது பாடல் திரு அருட்பாவில் உள்ள முதல் 3 வரிகள்

கண்மூன் றுடையான் எவன்அவனே கடவுள் அவன் தன் கருணை ஒன்றே
கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக்கருத்தை
மண்மூன் றறக்கொண் டிருந்தவரே வானோர் வணங்கும் அருந்தவராம்

என் உள்ளத்தில் இருந்து வள்ளலார் உரைத்த ஏனைய 5 வரிகள் :

      மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வகையினை அறிந்தவராம்
எண்மூன் றுடனைந்தும் இரண்டும் இனிதே எனக்கு அறிவித்தவா
     என்கண் மணியிலே கலந்து நிறைந்த பெருங்கருணை கடவுளே
விண்மூன் றிலுயர் திருவோத்தூர் பதியின் உறையும் அண்ணலே
    தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

அடியேன் உள்ளத்தில் வள்ளலார் உரைத்த 5-வது பாடல்

வேதத்தின் முடிபும் இதிகாச தீர்வும் இயம்பு பதினெண்
      புராணமும் மற்றும் அந்தங்கள் ஆகமங்கள் நவில்வதும் ஒன்றே
நாதத்தின் முடிவில் நல்லாள் இருப்பதும் நலன்கள் பெற்று
      நாயகன் சந்நிதி காண்பதும் நாடுகின் றவர்க்கு எளிதே
கீதத்தின் பயனும் சாதனா வைராக்கியத் திறனும் பெற்று
     எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும் தகைமை யுடையவர்
பாதத்தின் மேன்மை திருவோத்தூரில் காட்டும் பதமான கண்மணியே
     தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

இதோ 6-ஆவது பாடல்:

காலங்கள் தோறும் கனிந்து வரும் கங்குல் பகலற்ற
      கண்டந் தனிலே கலந்த தாடுகின்ற கருணைக் கடலே
ஞாலங்கள் எல்லாம் போற்ற ஞாயிறு தனிலே நிற்க
      நலங்கள் தந்து அருள்வாய் நான் மறை முடிபே
சீலங்கள் நான் பெறவே சிவமாய் எங்கும் நோக்கியே
      சிவானு பூதியை சித்திக்கச் செய்வாய் சிவானந்த பொருளே
பாலங்கள் இணையாய் திருவோத்தூர் பதியினில் விளங்கு பரமே
      தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

இதோ 7-ஆவது பாடல்

எல்லார்க்கும் எல்லாமும் தந்து அருள் புரியும் இறைவா
      பொல்லாங்கு நினையாதே புனிதனாக வாழும் நெறியை காட்டே
நல்லார்க்கும் காண்டற்கு அரிய நடுவான தெய்வக் கொழுந்தே
      பொல்லா புலையரை புவனம் மெச்ச மாற்றும் மருந்தே
கல்லார்க்கும் கனிந்து அருளும் கருணைக் கடலே கற்பகமே
      கல்லினுள் உயிருக்கும் படி யளக்கும் பரம் பொருளே
வல்லார்க்கும் வரம் கொடுக்கும் திருவோத்தூர் செல்வ மணியே
      தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

இதோ 8-ஆவது பாடல்

நீயில்லா இடமேது நீர்மேல் நெருப்பாய் இருக்கும் நிமலனே
       நீயிருக்கும் வரைதானே நான் இருப்பேன் எனைவிட்டு போயிடாதே
வாயில்லா சீவனுக்கும் வாழ்வு அளிக்கும் வளர் ஒளிமணியே
      வாயென்னும் நின்நாமமே ஒலிக்க வல்லபம் தந்து அருள்வாயே
தீயில்லா திரட்சி கிடையாதே கையில் தீயை சுமந்தவனே
      தீயவர் என்னை சுட்டிடாமல் காத்து பெருந்தீ தருவாயே
காயில்லா கனியேது கருநெல்லி கண்ட திருவோத்தூர் கண்மணியே
      தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே

வள்ளல் பெருமானின் கருணையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்

வள்ளல் பெருமான், நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ ஏனுரைத்தேன் – இரக்கத்தால் எடுத்துரைத்தேன். பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன். வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என அறைகூவி அழைக்கின்றார். திரு அருட்பா முழுமையும் சத்திய வார்த்தையே! அடியேன் உள்ளத்திலும் புகுந்து ஆட்கொண்ட பெருங்கருணை தெய்வம் சற்குரு இராமலிங்க சுவாமிகள் இந்த கண்மணிமாலை உலக மக்களுக்கு பயன்பெறுமாறு எழுதி வெளியிட அருள் புரிந்திருக்கின்றார்கள். மிக மிக மகிழ்ச்சியடைகின்றேன்.

– ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

Share

1 Comment

  • Ravikumar
    Posted May 3, 2017 1:49 pm 0Likes

    Nice

Leave a comment