கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – இதன் பொருள் என்ன?

இந்த பரிபாசயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.

இது மிக தவறானது. இறைவனை கண்ணுற்றவர்கள் பேசமாட்டார்கள் எணின் எப்படி திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இறைவனை பற்றி பாடல்கள் இயற்றி , இறைவனை அடையும் வழிகளை பற்றி மக்களிடம் கூறினர்!

இறைவனை கண்ட ஞானிகள் திருவருட்பா , திருமந்திரம் , திருவாசகம், திவ்யபிரபந்தம் படைத்து தங்கள் கண்ட இறைவனை பற்றியும் , அடைந்த அனுபவங்களையும் அனைவரும் அறிய பாடல்களாக படைத்தனர்.

இதனால் மேற் கூரிய பொருள் சரியானது அல்ல? இதன் உண்மை பொருள் இதுவே?

அதாவது – “கண்டவர் விண்டிலர்” – காண்பது நம் கண்கள் அது பேசாது. “விண்டவர் கண்டிலர்” – பேசுவது நம் வாய் அது காணாது. மிக எளிய நேரடியான உண்மை பொருள் இதுவே. சிறிது சிந்தனை செய்தால் அறியலாம்.

அதாவது இறைவனை கண்ட கண்களால் “இறைவனை கண்டேன்” என்று கூற இயலாது.

“இறைவனை கண்டேன்” என்று கூறும் வாயால் இறைவனை காண இயலாது.

நம்மை சிந்திக்க செய்யவே சித்தர்கள் பரிபாசையாக பலவற்றை கூறி வைத்தனர்.

இதனை இரகசியம் என்று மறைப்பது தான் பாவம்.

தாங்கள் இறைவனை கண்டதை உணர்த்தும் சில ஞானிகள் பாடல்கள்:

“கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டேன்” – அருட்பெருஞ்சோதி அடைவு திருவருட்பா திருவருட் பிரகாச வள்ளலார்

“இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன்” – திருவருட்பா 3051 

“கண்டே னவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்” – திருநாவுக்கரசர் பெருமான்

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் 
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் 
என்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்

மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடலில் பேயாழ்வார், தான் இறைவனை கண்ட பாங்கினை விவரிக்கிறார்.

இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன் கண்டேன் என்று கதறுகிறார் பேயாழ்வார்! ஆஹா என்ன அழகு! என்ன அழகு அதை எப்படி கூறுவேன்? இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா? எம்பெருமானின் அழகிய திருமேனியை கண்டேன். ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம் பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன். கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன் என்கிறார் பேயாழ்வார்.

எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.

– ஞான சற்குரு சிவ செல்வராஜ்

Share

Leave a comment