திருவடி பற்றி திருமூலர்

திருவடி பற்றி திருமூலர் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக திருமந்திரத்தில் சொல்கிறார் என்றும் மேலும் எவ்வளவு அழகாக ஞானத்தையும் அதற்க்கான பாதையையும் சொல்கிறார் என்பதே இந்த பதிவு.

மேலும் எங்கள் சபை அன்பர்கள் பலதடைவைகள் நேரிலோ அல்லது வலைத்தளங்களிலோ சிலருடன் ஆனிமீகம் பற்றி பேசும் போது அவர்கள் நீங்கள் வள்ளலார் சொன்ன சன்மார்கத்தை பின்பற்றுகிறீர்கள் நாங்கள் எங்கள் இடத்தில் சொல்லி தருகின்ற சன்மார்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதை எங்கள் அன்பர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள். இது மிகவும் தவறான கருத்து. ஆம், வள்ளல் பெருமான் எந்த சன்மார்கத்தை பின்பற்றி உச்ச நிலை அடைந்து அதை நமக்கும் சொன்னாரோ அதே சன்மார்கத்தைதான் திருமூலரும் மற்றும் எல்லா சித்தர்களும் சொன்னார்கள் என்பதையும் இந்த “திருவடி பற்றி திருமூலர்” என்ற பதிவில் சொல்கிறோம்.

திருமந்திரத்தில் முதல் பாடலாக இங்கே வைக்க விரும்புவது 138 வது பாடல்தான்

பாடல் – 138

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

இறைவன் திருவடியே நமது கண்கள்!

இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்

விளக்கம்

“திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”

மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்!

இதைத்தான் இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறோம்.

முன்னதாக திருவள்ளுவர் திருவடி பற்றி சொன்னதை பதிந்திருக்கிறோம். இனி திருமூலர் மட்டுமல்ல வள்ளலார், திருஞான சம்பந்தர், போகர் என்று எல்லா சித்தர்களின் திருவடி பணிந்து திருவடி பற்றிய பதிவுகளை ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். திருவள்ளுவர் மட்டுமா திருவடியை வெவ்வெறு விதமாக சொல்லியிருக்கிறார். திருமூலரும்தான்!

இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில். இந்த இணையடியிலே எல்லாமே அடங்கிவிடும் என்ற அற்புதமான பாடல்.

திருமந்திரத்தில் உள்ள முக்கியமான பாடல் இது. மந்திரம், மருந்து, தானம் மற்றும் தூய்மையான நெறி எது என்று உள்ளடக்கிய பாடல். ஆம், இறைவனை அடையும் பாதையில் மந்திரம், தந்திரம், தானம் மற்றும் தூய்நெறி எல்லாமே இந்த இணையடி யாகிய திருவடி தான் என்று சொல்லும் பாடல்.

“மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே”

திருவடியே கதி, திருவடியே சிவலோகம் மற்றும் திருவடியே சரணாகதி என்று சென்ற பாடலில் உள்ள பாடலை பார்த்தோம். மேலும் தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இதுதான் என்று சொல்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை இந்த திருவடியை பிடித்தால் மட்டும் போதும் அதை உணர்த்துவதற்க்கு தான் திரும்ப திரும்ப பதிவு.

மேலும் சித்தர்கள் பாடல் என்றாலே புரிந்து கொள்ள மிக கடினமாக இருக்கும் என்ற மேலோட்டமான கருத்தை மறுக்கும் பாடல். இறைவனை அடையும் பாதையை எந்த வித கடினமும் இல்லாமல் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய அளவில் இருக்கும் பாடல்.

இந்த பாடலில் திருவடி தான் மருந்து என்று கூட சொல்லவில்லை மாமருந்து என்று சொல்கிறார். இந்த மருந்தே நம்முடைய பிறவி பிணியை தீர்க்கும் மருந்து. நீங்கள திருவருட்பாவை படித்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயமாக வள்ளலாரும், திருமூலரும் மிகவும் ஒத்து போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். (பாடலில்)

திருவருட்பா மூன்றாம் திருமுறை – நல்ல மருந்து என்ற தலைப்பில் உள்ள ஒரிரு வரிகள்.

“சஞ்சலம் தீர்க்கும் மருந்து – எங்கும்
தானேதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து – சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து!”

விளக்கம்:

அடியார்களின் மன சஞ்சலங்களை தீர்க்கும் மருந்து!
உலகெங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஜோதி மருந்து!
அஞ்சாதே என அடியார்களுக்கு அபயம் நல்கும் மருந்து!
சத்து – சித்து ஆனந்தமாக விளங்கும் மருந்து! சத்தான ஒளியை தியானிக்க சித்துக்கள் கூடிவரும் பின் பேரானந்த நிலை கூடும்!

திருமந்திர பாடலில் திருமூலர் திருவடி தான் மாமருந்து என்று சொல்கிறார். திருவருட்பாவில் எங்கள் திருவருட் பிரகாச வள்ளலார் அந்த திருவடியான மருந்து என்ன என்ன செய்யும் எப்படி எல்லாம் இருக்கும் என்று சொல்கிறார்!

திருமூலர் மந்திரம், மருந்து, தானம், சுந்தரம் மற்றும் தூய்மையான நெறி இது அனைத்துமே திருவடி தான் என்று சொல்கிறார். வள்ளலார் இந்த திருவடியான மருந்தே உலகத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் சச்சிதானந்த மருந்து என்று சொல்கிறார்.

இன்னும் என்ன சொல்ல வேண்டும் இந்த திருவடி பற்றி?

ஆனாலும் அடுத்த பாடலும் திருவடிதான்!

திருவடி பற்றி அதாவது மெய்பொருள் பற்றி இங்கு நாங்கள் பதிந்து கொண்டிருப்பது இறைவனை காட்ட கூடிய பாதையில் எவ்வளவு முக்கியமானது மேலும் இதை தெரிந்து கொள்வதற்க்கே மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். மேலும் இது எவ்வளவு முக்கியம் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் வெட்ட வெளிச்சமாக சொல்கிறார்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று சொல்லியவர் அவ்வையார் தான். அதே வாக்கியத்தை மாறாமல் திருமூலரமும் சொல்கிறார் என்பதை இந்த பாடலில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதனினும் திருமூலர் ஒரு படி மேலே சென்று அரிதான இந்த மானிட பிறவியை பெற்றும் கூட இந்த திருவடியை (அ) மெய்பொருளை தெரிந்து கொள்ளாதவர்களை சாடுகிறார்.

அந்த பாடல் – திருமந்திரம் 2090

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”

விளக்கம் – “மந்திர மணி மாலை” என்னும் புத்தகத்தில் இருந்து

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்றும், பல்லாயிரம் ஆண்டு தவம் செய்யினும் கிட்டாத இறைவனடியை, தேடியும் காணொணாத கடவுளை இவ்வளவு எளிதாக அடைய வழிகாட்டியும் உணராதவர்களை ஈனப்பிறவிகள் மிருகங்கள் பிராணிகள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் திருமூலர். மனித உடல் கொண்ட மிருகங்கள் செய்த பாவம், உண்மை உணராது போய் விடுகின்றனர். இறைவனடி சேரும், பேரின்பம் பெறும் வாய்ப்பை இழந்தவராவர்? நல்ல மனிதன் – உத்தமன் – ஞானி – சித்தன்  என்று நல்ல பெயர் எடுக்காமல் மனித மிருகமாகவே மரிக்கின்றனர்! ஏ, மனிதா நீ ஏன் பிறந்தாய்? வாழவா? சாகவா? வாழ்வின் பொருள் அறிய வேண்டாமா? வினை தீர்க்க பாடுபட்டாயானால் வேண்டிய வரம் தந்து ஆட்கொள்வான் இறைவன்!

அடுத்தடுத்த பதிவுகளில் திருமூலரும் சத்திய ஞான சபையின் ஜோதி தரிசனத்தை சொல்கிறார் என்பதும் மேலும்  இந்த ஞான தவத்தை திருமூலர் எந்த அளவு வெட்ட வெளிச்சமாக சொல்கிறார் என்பதையும் சேர்த்து.

இந்த இணைய தளம் முழுக்க இருக்கும் விடயம் இதுதான். திருவடி (அ) தாள் பற்றி திருமூலர் திருமந்திரத்தில் எவ்வளவு முக்கியமாக சொல்கிறார் எனும் பாடல். இந்த ஒரே தவம் போதும் எல்லாருக்கும் இறைவனை காட்டும் என்று சொல்லும் பாடல். இந்த ஞானதவத்திற்க்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்லும் அற்புதமான பாடல். மேலும் இந்த பாடலுக்கான எங்கள் குரு நாதரின் விளக்கம்

திருமந்திர பாடல் – 2113

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

விளக்கம்:

மனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு! மெய்தாள் ஒன்றுண்டு! மெய்ந்நெறி ஒன்றுண்டு!

இறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்!

மெய்த்தவம் – உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய்! இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே! அதனுள் ஒளியே! இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்!

மெய்த்தாள் – மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு! அதுவே நம் உயிர் நிலை! அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது!

மெய்நெறி – மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம்! உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம்! அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன்! ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று? வாருங்கள் காண விரும்பினால்? வேண்டுங்கள் பெற விரும்பினால்! கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக! வருக!

Share

Leave a comment