திருவடி பற்றி வள்ளலார்
திருவடி பற்றி திருவருட்பாவில் வள்ளலார் / ராமலிங்க அடிகளார்
நான் வெளியிடுகிற அனைத்து ஞான இரகசியங்களும் வள்ளல் பெருமான் அருளால்தான் என்னால வெளியிட முடிகிறது என்ற எங்கள் குரு நாதர் சிவ செல்வராஜ் அய்யாவின் வார்த்தையை நினைவு படுத்தி எங்கள் ஞானகுரு வள்ளல் பெருமான் திருவடி பற்றி திருவருட்பாவில் பாடியிருப்பதை கொடுக்கிறோம்.
வள்ளல் பெருமானை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்லும் பலருக்கு வள்ளலார் திருவருட்பா முழுக்க என்ன பாடி அருளியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை அப்படி தெரியாமல் இருப்பவர்களுக்கு இங்கு எங்கள் குரு நாதரின் திருவருட்பா விளக்க உரையிலிருந்து எடுத்து கொடுக்க போகும் பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
திருவடி தவம் என்றால் என்ன என்று தெரியாதவர்களை நாங்கள் நேரிலும் இணையத்திலும் பலரை சந்திக்கிறோம். ஐயோ, இவர்களுக்கு எல்லாம் இதுகூட தெரியவில்லையே என்று எள்ளி நகையாடுவதற்க்காக அல்ல இந்த பதிவு. எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு. ஆம், எங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எந்த வித பாகுபாடு இல்லை மேலும் இவர்கள் பக்குவமானவர்கள், பக்குவமில்லாதவர்கள் என்று எந்த வித பாகுபாடும் இல்லாமல் சொல்கிறோம் வள்ளல் பெருமானையோ அல்லது சித்தர்களை நம்பி எங்கள் தளத்திற்கு வருபவர்கள் எல்லாரையும் படித்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
திருவருட்பா மூன்றாம் திருமுறை யில், திருவடி புகழ்ச்சி என்ற பகுதியில் இருக்கும் பாடல்.
இறைவனின் திருவடியின் பெருமையை – மகிமையை தன்மையை சொல்வதாகும் இத்திருவடி புகழ்ச்சி! முதலில் இறைவனின் திருவடியை பணிய வேண்டும்! சரணடைய வேண்டும்! பின்னரே திருமுடி தரிசனம்! இறைவன் திருவடி எது? என தெரிய வேண்டுமா? இறைவனடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்! பணிவு – கனிவு – அன்பு – பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய திருவடி எப்படி பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
தரும்இணை மலர்ப் பூம்பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
சாட்சியாகிய பூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
சமரசமுறும் பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
தமக்குள் உயிராம் பூம்பதம்
தவாத சாந்தப்பதம் – சாந்தமே – அமைதியே உருவான இரு கண்மணியின் உள்ளே திருவடி! துவாத சாந்தப்பதம் – நம் சிர நடுவில் உச்சியில் விளங்கும் ஒளிநிலை! அனுபவத்தில் அறியும் ஸ்தானம்! தரும்இணை மலர்ப் பூம்பதம் – இருகண்மணி உள் நடு , சிர நடு உச்சி ஆக இருபதத்திற்க்கும்நம்மை அழைத்து செல்லும் இணையான இரண்டு தாமரை மலர் போன்ற பதமான இரு கண்மணிகள்.
சகலர் – மும்மலம் உள்ள சராசரி மனிதர்! பிரளயாகலர் – இரு மலம் உள்ளவர்! விஞ்ஞானகலர் – ஒரு மலம் உள்ளவர்
சாதனை செய்து வர வர மும்மலங்கள் ஒவ்வொன்றாக போய்விடும். மலமற்ற நிலையே இறைநிலை! இதய சாட்சியாக பூம்பதம் – இதய சாட்சியாக நம் மனசாட்சியாக இறைவனே உள்ளிருந்து நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். அப்படி சாட்சியாக இறைவன் இருப்பது – பூப்போன்ற திருவடி – கண்மலர்.
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில் – குறைவில்லாத நிலையில் அணு நிலையம், தானே உருவையும் துலங்குகின்றது. பூம்பதங்களில்! சமரசமுறும் பூம்பதம் – எல்லா அணுவிற்க்கும் அனுவாகவவும், எல்லாவற்றிலும் தானேயாயும் சமமாக இலங்கும் பூம்பதம். மலர்ப்பாதம் – திருவடி – கண்மணி!
தருபரம் சூக்குமம் தூலம் – தற்பரம் + சூக்குமம் + தூலம் மூவகை நிலை நம் உடல்! இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்பதம். இம்மூன்று நிலையிலும் உயிராகிய பதம் நம் திருவடி! பரமான – மேலான தெய்வம் பராபரமாக நம் நடுவில் கண்மணி நடுவில் சிர நடுவில் உள்ளில் ஒளியாக துலங்குகிறது!
இந்த ஒரு தவம் போதும் எல்லாருக்கும் வழி காட்டும் என சொல்லும் வள்ளல் பெருமானின் அற்புதமான பாடல்!
எத்தனையோ முறை எப்படி எப்படியோ நேரிலும், இணையத்திலும் பலமுறை சொல்லிவிட்டோம் இந்த ஒரு தவம் (திருவடி – பதம்) போதும் எல்லாருக்கும் அருளும் எனவும் மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தவம் எல்லாம் தேவை என்ற அவசியமே கிடையாது. இந்த ஒரே தவம் போதும் என்றும்.
மற்றபடி பல இடங்களில் சொல்லி தருவதை போல இது முதல் பயிற்ச்சி இதை முடித்தால்தான் அடுத்த பயிற்ச்சி அதற்கு அடுத்தது இதை விட உயர் நிலை பயிற்ச்சி என்று எல்லாம் இந்த ஞான தவத்தில் (திருவடி தவத்தில்) கிடையாது! இதை வள்ளல் பெருமான் பாடலிலேயே புரிந்து கொள்ள முடியும்! யார் யார் எல்லாம் இந்த தவத்தை செய்தார்கள் என்றும் மேலும் செய்யும் இந்த ஒரே திருவடி தவத்திற்கு ஏற்ப நல்ல நிலையை அடைய முடியும் என்றும் சொல்லும் பாடல்.
வான இந்திரர் ஆதி எண்திசை காவலர்கள்
மாதவத் திறனாம் பதம்
மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந்தரர் வான
வாசிகள் வழுத்தும் பதம்
மணியுரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர்
சித்தர் மாமுனிவர் ஏத்தும் பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யஷர்கள்
மதித்து வரம் ஏற்கும் பதம்
வான இந்திரராதி எண்திசை காவலர்கள் – அஷ்டதிக் பாலர்கள்! இந்திரன் முதலான அஷ்டதிக் பாலர்கள்! மாதவத் திறனாம் பதம் – யாராயிருந்தாலும் மாதவம் செய்து அதற்க்கு தகுந்த படி அருள் பெறலாம்! திருவடி அருளும்! யாருக்கும் அருளும் திருவடி. மதியிரவி ஆதிசுரர் அசுரர் – சந்திரன் சூரியன் முதலான தேவர்களும்! அசுரர்களும்! அந்தரர்வான வாசிகள் – அந்தரத்திலே இருப்பவர்கள் அதாவது விண்ணிலும் மண்ணிலும் அல்லாது ஆவியாக அந்தரத்திலே இருப்பவர்! அந்தரர்! வானவாசிகள் விண்ணுலகத்திளிருப்பவர்கள் இப்படி எல்லாரும் வணங்கும் திருவடி ! பரமாத்மா! இறைவன்!
மணியுரகர், கருடர், கந்தர்வர், விஞ்சையர், சித்தர், மாமுனிவர் என எல்லாரும் போற்றும் பரம்பொருள் இறைவன்! மாநிருதர், பைசாசர், கிம்புருடர், யஷர்கள் என்பாரும் பரமாத்மாவை எண்ணிதவம் செய்து அருள்பெற உதவும் திருவடி!
இந்த பதம் என்ற திருவடியை கண்தான் என்று எப்படி சொல்கிறோம் என சிலருக்கு சந்தேகம் இருந்தால் இந்த பாடலில் தீர்ந்து விடும்!
ராமலிங்க அடிகளாருக்கு வள்ளலார் என்ற பெயர் வந்ததன் முழு முதல் காரணம் ஞானத்தை வெட்ட வெளிச்சமாக சொன்னதால்தான் என்றால் அது மிகையாகாது! ஆம், பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உள்ளதை உள்ளபடி சொன்னதால்தான் திரு அருட் பிரகாச வள்ளலார் என்று பெயர் பெற்றார்!
ஆம், எல்லாரும் இறைவன் அருள் பெற வேண்டி இறைவன் திருவடி (அ) பதம் (அ) தாள் இதுதான் என வெட்ட வெளிச்சமாக திருவருட்பா முழுவதும் அள்ளி தெளித்தார் எங்கள் அருள் வள்ளல் ஆன வெள்ளாடை துறவி.
இங்கு நாங்கள் எங்கள் ஞான குருவான வள்ளல் பெருமானை உயர்த்தி துதிபாடவில்லை உண்மையைத்தான் சொல்கிறோம் சொல்வதோடு மட்டும் அல்லாமல் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் பகர்ந்ததை எங்கள் குருவின் ஆசியோடு இங்கு பதிகிறோம்.
இதுவரை பார்த்த 2 பாடல்களிலும் திருவடி பற்றியும் அந்த திருவடியை யார் யார் எல்லாம் பற்றினார்கள் என்பதை பார்த்தோம். இப்பொழுது பார்க்க போகும் பாடலில் திருவடி (பதம்) இதுதான் என சொல்லும் பாடல்.
என் அறிவெனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய்
இருந்த செங்கமலப் பதம்
என் அன்பெனும் பதம் என் அன்பிற்க்கு வித்தாய்
இசைந்த கோகனகப் பதம்
என் தவமெனும் பதம் என் மெய்த்தவப் பயனாய்
இயைந்த செஞ் சலசப்பதம்
என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு
இனிய நல்விருந்தாம் பதம்
என் அறிவெனும் பதம் – நமக்கு அறிவு, தூய அறிவு துலங்குவது திருவடியிலிருந்த்துதான்!
என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம் – அறிவு புற அறிவு, ஆன்ம அறிவு என இரு வகைப்படும்! கண்மணியின் முன், வினைதொகுதியிலிருந்து பெறும் அறிவு துன்பத்தை தரும் புற அறிவு! உள்ளே ஆன்மாவிலிருந்து துலங்கும் அறிவு ஆன்ம அறிவாகும். அங்கனம் புற அறிவுக்கு உள் உள்ள அறிவினுக்கு அறிவாய் விளங்குவது திருவடியே! இறைவனே! உள்ளிருந்து அறிவிப்பவன் பரம்பொருளே! அந்த அழகிய திருவடி சிவந்த தாமரை போன்றது!
என் அன்பெனும் பதம் – கண்மணி முன்னிருந்து வரும் அன்பு.
என் அன்பிற்க்கு வித்தாய் இசைந்த கோ கனகப் பதம் – கண்ணிலிருந்து வரும் அன்பு உள் இருக்கும் ஒளி தங்கமயமான தங்க ஜோதியிலிருந்து வரும் கருணையின் வெளிப்பாடே! நாம் காட்டும் அன்பிற்கு வித்தாய் ஆதாரமாய் இருப்பது. கண்மணி உள்ளிருக்கும் – இரு உதயத்தினுள் பொங்கி பிரவாகமாக விளங்கும் தங்க ஜோதியின் இரக்கமே, கருணையே வடிவான திருவடியேயாகும்!
என் தவமெனும் பதம் – நாம் தவம் செய்ய வேண்டிய திருவடி! என் மெய்த்தவப் பயனாய் இயைந்த செஞ் சலசப்பதம் – என்னுடைய மெயில் உடலில் கண்மணியில் ஒளியாக இருக்கும் திருவடியை எண்ணி தவம் செய்ததன் பயனாய் என்னுள் உணரப் பெற்ற திருவடி! அது சிவந்த ஒளி! ஆடும் திருவடி! மேய்த்தவம் செய்வாரே அறிவர் திருவடியை!
என் இரு கண்மணியானபதம் – நமது இரு கண்மணிகளாக உள்ளதே திருவடி! இறைவன்! பரம்பொருள்! என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – எனது இரு கண்மணிகளின் உள் ஒளியாக துலங்கி உள்சென்று அமுதம் வழங்கும், எனக்கு விருந்தளிப்பதும் இந்த திருவடியே!
இதற்க்கு மேல் கொடுக்கலாம் என்றால் நிறைய பாடல்களை கொடுக்க முடியும் ஆனால் தற்பொழுது இது போதும் என்று கருதுகிறோம்! வள்ளல் பெருமான் திருவருட்பா முழுக்க முழுக்க பாடியிருப்பது இந்த பதம் என்னும் திருவடி தவத்தை பற்றித்தான். படித்து புரிந்து கொள்க.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!