புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும்

இன்று சில யோக நிறுவனங்கள் – ஆன்மீக சொற்பொழிவாளர்கள் – மெத்த படித்தவர்கள் – குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம் இல்லை என்பவர்களுக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் இறை சட்டமாக கூறியுள்ளதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

வள்ளல் பெருமான் புலால் உண்பதை எதிர்த்ததை போல் வேறு எதையும் எதிர்த்ததில்லை. கொல்ல நெறியே குருவருள் நெறி என்றும் , புலால் உணவை தவிர்க்க வேண்டும் சைவ உணவை உண்பவனே அறிவு (ஞானம்) பெறுவான் என்றும் இறை அருளால் உணர்ந்து கூறுகிறார்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
       கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
        எழுப்புகின்ற உருவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
         கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
        ஞானி எனக் கூறொ ணாதே – திருவருட்பா

ஒருவர் ஆண் பனை மரத்தை பெண் பனை மரமாக்கி , இறந்தவரை எழுப்பும் ஆற்றல் பெற்றிருந்தாலும் அவர் உயிர் தங்கிய உடம்பை – புலாலை உண்பவர் ஆயின் அவன் ஞானி அல்ல. கருவிலே பிறந்து பிறந்து மாளும் நெறிக்கு அவர் ஆட்படுவது உறுதி. யாராயினும் சரி , புலால் உண்பவன் ஞானம் பெற மாட்டான். இது சத்தியம். அது மட்டுமல்ல , புலால் உண்பவன் மரணமடைவான். மீண்டும் பிறப்பான். இது அந்த சிவத்தின் சட்டம். இதற்கு மேல் ஒரு சட்டம் எங்கும் இல்லை.

[இறந்தவர்களை எழுப்பும் ஆற்றல் பெற்றவர்களுக்கே இக்கதி எனில் “நீ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஞானத்திற்கும் புலால் உணவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்பவர்களின் கதி என்ன?]

நமது உள் உள்ள இறையை – “கட + உள்” காண முதல் படி புலால் தவிர்ப்பதே. இதை உணர்த்தவே சத்திய ஞான சபையின் வாசலில் வள்ளல் பெருமான் தன் கைப்பட பொரித்து உள்ள வாசகம் “புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும்”.

சைவ உணவு மட்டும் உட்கொண்டு , ஒழுக்கத்தோடு சன்மார்க்க நெறியில் வாழ்பவர்கள் அகவினத்தார் என்றும் அவர்களே இறை அருள் பெறுவார்கள் என்றும் புலால் உண்பவர்கள் புறவினத்தார் என்றும் அவர்கள் இறை அருள் சிறிதும் பெற மாட்டார்கள் விதி வழியே அவர்கள் வாழ்க்கை அமையும் என்றும் தெளிவு படுத்துகிறார்.

‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள்  எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறவினத்தார்!”  என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.

இதனையே திருவள்ளுவர் பெருமானும்
“கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”  என திருவள்ளுவர் கூற்றும் மெய்ப்பிக்கும்.”

யார் பெரியவன்? சைவ உணவு உண்பவனே. சைவ உணவே சன்மார்க்க உணவு. அதிலே வருவது தான் சன்மார்க்க உணர்வு.

நாம் யார் சொல்லை பின்பற்ற வேண்டும்? இறைவனை அடைந்த மரணமில்லா பெறு வாழ்வு பெற்ற ஞானியையா அல்லது வினை வழி உட்பட்டு இறந்து போகும் சாதாரண மனிதரையா?

வெந்ததை தின்று இறந்து ஒழியும் அறிவு கெட்ட மனிதர்களின் பேச்சை கேட்பீர்களா அல்லது இறவா நிலை அடைந்த உன்னத ஞானியின் சொல்லை கேட்பீர்களா!? நீங்களே முடிவு செய்யுங்கள்!

சரி மரத்திற்கும் உயிர் உள்ளதே ? அது உயிர் கொலை இல்லையா என்பவர்களுக்கு வள்ளல் பெருமானே “ஜீவ காருண்ய ஒழுக்கம்” என்ற நூலில் பதில் கூறிஉள்ளார். அறிய இந்த லிங்கை பார்க்கவும்.

புலால் உண்டால் இறைவனை அடைய முடியாது என்றால் கண்ணப்ப நாயனார் எப்படி இறைவனை அடைந்தார் என்று கேளிவி எழுப்புபவர்கள்  இந்த லிங்கை பார்க்கவும் 

Share

1 Comment

  • saravanakumar
    Posted August 26, 2016 7:12 am 0Likes

    Nice

Leave a comment