பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே
தண்ணேறு பொழிற் றணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

இறைவா உன் அடியாரெல்லாம் உன் பாத மலர் அழகினை – தன் கண்மலர்
அழகை பலவாராக போற்றி பாமாலை புனைந்துள்ளனரே! யாவர்க்கும் அரிய
ஞான விளக்கே என் கண்ணே மெய் வீட்டின் வித்தே – என் கண்மணி ஒளியே
சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே – என் சீவனாகி என்னுள் இருந்து
அருளும் தணிகை மணியே உன்னை சகச நிலையே  அடையும் வழி! என்று
உருகுகிறார் வள்ளல் பெருமான்.

இறைவனை அடைய, சகஜ நிலையே வேண்டும். எப்போதும் சதா சர்வ காலமும் நம் கண்மணி ஒளியை நினைந்து  நினைந்து உணர்ந்து உணர்ந்து இருத்தலே சாகச நிலை. எத்தொழிலை செய்தாலும் ஏதாவஸ்தை பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே.

பிறவிநோய்க்கு மருந்தாய நின்னடியை – பாடல் 3

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது. மிகப்பெரிய நோய்
பிறந்து இறந்து பிறந்து இறந்து போவதுதான். இந்த  பிறவிநோயை
விலக்க ஒரே மருந்து நின் திருவடியே இறைவா நீயே உன் திருவடியை
என்னிரு கண்மணியில் ஒளியாக பதித்துள்ளாய் இது தான் பிறவி
பிணிக்கு மருந்து.
கரும்பினிழிந் தொழுகு மருட்சுவையே முக்கண்
கனிகனிந்த தேனே என் கண்ணே ஞானம் தரும்
புனிதர் புகழ் தணிகை மணியே சீவ சாட்சியே  – பாடல் 4

இனிய நல் கரும்பு சாற்றை விட சுவையான கண்மணி ஒளி
அனுபவமே! முக்கண் கனி கனிந்த தேனே – வலது கண் இடதுகண்
உள்ளே உள்ள அக்னிகலை மூன்றாவது கண். மூன்றும் சேர்ந்து
ஒளிர்ந்தால் மூன்று தீயும் சேர்ந்தால் முத்தி முக்தியின்பம் பேரின்பம்
எல்லாமே என் கண்ணே, ஞானம் தருவது தணிகை மணியே
சீவசாட்சியான கண்மணி ஒளியே.

அன்னை முதலாம் பந்தத் தழுந்தி நாளும் வியிற்றோம்பி
மனமயர்ந்து நாயேன் முன்னைவினையால் படும்பாடெல்லாம் – பாடல் 6
அன்னை முதல் பற்பல உறவுகள் நம்மை சம்சார சாகரத்துள் தள்ளி விடுவர்.
அதனால் உறங்கி களித்தலே வாழ்வு என்றாகி மனம் வெதும்பி துன்பத்தின்
எல்லைக்கே போய் விடுவோம். இவ்வாறு எல்லோரும் அவரவர் செய்த
முன்வினை பயனால் தீராத துன்பம் அடைவர். அதிலிருந்து விடுபட
சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை, நம் கண்மணியை சார்ந்திருந்தாலே
சிறந்த உபாயம்.

உபாயம் இதுவே மதியாகும் அல்லாதவெலாம் விதியே மதியாய் முடிந்து விடும். தன்னை உணரும் கண்மணி ஒளி தவம் செய்தால் முன்னை வினையை  தீர்க்கலாம். நம் உள்ஒளி வழிகாட்டும் ஒளியூட்டும்.

தன்னார்வத்தமர் தணிகை மணியே   – பாடல் 10

நம் கண்மணி ஒளியே – சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை நாம்
பெறவேண்டுமாயின் நமக்கு ஆர்வம் விருப்பு – வைராக்கியம் வேண்டும்.
அவரவர் தன்னார்வத்துடன் உழைப்பது தான் தவம். கடும் முயற்சி வேண்டும்.
தீவிர முயற்சி வேண்டும். அப்படி பட்டவர்க்கே தணிகை மணி கைவல்யப்படும்.

 

எண்ணிலாளப்பரிய பெரிய மோன இன்பமே
அன்பர் தம் இதயத்தோங்கும் தண்ணினால் பொழில் – பாடல் 10

எண்ணி அறிய முடியாத பெரிய, அளவிட முடியாத, எங்கும் நிறைந்த ஒளியை
அருட்பெருஞ்ஜோதியை மோன நிலையிலிருந்தே அதாவது மௌனமான சும்மா இருந்தே அறிய முடியும் அதையும் தூய்மையான அன்பர்கள் தம் இதயத்தில் தான் உணர்வர் . குளிர்ச்சி பொருந்திய நீர் நிறைந்த நம் கண்கள் தாம் இதயம் – இருதயம். இரு உதயம் – வலது கண்ணில் சூரியன் உதயம், இடது கண்ணில் சந்திரன் உதயம். இரு கண்ணுமே இருதயம் என்றனர் ஆன்றோர்.இரு கண் ஒளியை பற்றினவரே இறைவனை காண்பர். அடைவர் –  .

முக்கட்ஜோதி மணியினிருந்தொளி ரொளியே  பாடல் 16

முக்கண் – சூரியன் சந்திரன் அக்னி. வலது கண் இடது கண் உள் உள்ள மூன்றாவது கண். இம்மூன்று கண்ணினுள்ளும் இருக்கும் ஒளியின் உள் ஒளியே, ஜோதியுட் ஜோதியே

சென்னிமிசை கங்கை வைத்தோ னரிதிற் பெற்ற
செல்வமே யென்புருக்கும் தேனே – பாடல் 20

சென்னிமிசை கங்கை வைத்தோன் – தலையில் கங்கையை சூடிய சிவன் – சென்னி எனத்தான் சொன்னார். தலை என சொல்ல வில்லை சென்னி என்றால் கன்னம். கன்னத்தின் மேல் கண் இருக்கிறது அல்லவா. நம் கண்மணி இருக்கிறது அல்லவா அதில் நீர் இருக்கிறது அல்லவா? நம் கண்மணி ஒளியில் – ஒளிக்குள் ஒளியான சிவம் இருக்கிறது.கண்ணில் உள்ள நீர் தான் கங்கை வற்றாத கங்கை. ஞானிகள் பரிபாசையாக சொன்னது இது. கண்ணில் உள்ளது தான் கங்கை கண்ணினுள் இருப்பவர் சிவம்.

கங்காஸ்நானம் ஆயிற்றா என தீபாவளிக்கு கேட்பார்கள்! புறத்தே காசியில் ஓடும் கங்கை நதியில் குளிப்பது அகத்தே நம் கண்மணியே நினைத்து உணர்ந்து தவம் செய்து ஊற்றெடுக்கும் கண்ணீரில் உடல் நனைவது தான் உண்மையான கங்கா ஸ்நானம்.

கங்கை எங்கு என்று கேட்பாயேல் கேசரியாம் கோசாரத்தின் புருவமையம். அங்கையடா அஷ்டகங்கை என்றனர் சித்தர்கள்.

அதாவது கங்கை தலையில் புருவ மையத்தில்  உள்ளது. புருவ மத்தி எதென்றாக்கால் பரப்பிரம்மான தொரு அண்டவுச்சி. அண்டம் போல் அழகியதாம் கண் மூன்று டையதாம் ஒற்றி கடலேருகே நிற்கும் கரும்பு. புருவமத்தி தான் அண்டவுச்சி. அண்டம் போல் அழகிய வட்டம் 3 வட்டம் கொண்ட கண்ணின் உச்சி என்றால் கண்ணின் மையம் –
மத்திய பகுதி – அது கரும் – பூ – கரும்பு அல்ல.அதாவது கருப்பு பூ அது கண்மலர் தானே புருவ மத்தி என்றாலும் அண்டவுச்சி என்றாலும் கருப்பு என்றாலும் கண் தான்.

ஒவ்வொரு சித்தரும் ஒரு பூட்டை போட்டுள்ளனர். ஒரு சித்தர் பாடிய பரிபாஷை அறிய இன்னொரு சித்தர் பாடல் உதவும் ஞான நூற்கள் பலவும் பயில வேண்டும். அப்போதுதான் உண்மை விளக்கம் ஞான பரிபாசை விளக்கம் அறியலாம்.

வள்ளல் பெருமான் சொன்ன சென்னிமிசை கங்கை வைத்தோன் அரிதிற் பெற்ற செல்வம் என்னவென்றால் நாம் நம் இரு கண்மணி ஒளியை தியானித்தால் நமக்கு முன் முருகன் ஆறுமுக ஜோதி நம் இரு கண் காட்சி கிட்டும். இது ஞான அனுபவம். ஆத்ம அனுபவம்.
கதைக்குப்போய் விடாதீர் அது குழந்தைகளுக்கு கருத்தை கொள்பவனே அறிவுள்ளவன். ஞானம் பெறுவான்.

யென்பெருக்கும் தேனே – நாம் தவம் செய்து நம் கண் ஒளி பெருகி உடல் முழுவதும் எழுபத்தீராயிரம் நாடி நரம்பில் ஒளி ஊடுருவி பரவும். எலும்பும் உருக்கும் தேன் என வள்ளல் பெருமான் அந்த ஆனந்த அனுபவத்தை அனுபவித்து பாடியுள்ளார். வள்ளலார் பாடல் ஒவ்வொன்றும் ஞான அனுபூதியை. இதை எழுதுவதற்கு அறிவு தந்த வள்ளல் பெருமானுக்கு அடியேன் கடமை பட்டுள்ளேன். ஈடில்லா மாபெரும் ஞானி திருவருட்பிரகாச வள்ளலார்  இராமலிங்க சுவாமிகள்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

Share

Leave a comment