திருவடி பற்றி மாணிக்கவாசகர்

திருவடி பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகர்

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். அதனாலே எமது குரு நாதர் சிவ செல்வராஜ் அய்யா திருவாசகத்துக்கான விளக்க உரைக்கு மணி வாசக மாலை என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

வள்ளல் பெருமான் திருவாசகத்தை பற்றி உயர்வாக சொல்லும் போதே நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். வள்ளல் பெருமான் எந்த திருவடி தவத்தை பற்றி சொன்னார்களோ அதே தவத்தைதான் மாணிக்கவாசகரும் சொன்னார்கள் என்று. அந்த பாடல்களில் சிலவற்றை எங்கள் குரு நாதரின் திருவாசக விளக்க உரையிலிருந்து கொடுக்கிறோம்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க

இறைவனை வாழ்த்தி நமச்சிவாய வாழ்க என்றும், நமச்சிவாய என்னிடம் வா! என்னை நீ அள்ளுக – அள்ளிக்கொள் – சேர்த்துக்கொள் என்பதனையே வாஅழ்க என்றது மணிவாசகம்!

இறைவனே எவ்வுயிர்க்கும் நாதன் – தலைவன், அந்த நாதனுடைய தாள் திருவடி – மெய்ப்பொருள் – நம் கண்கள். நம் கண்களே நம் நாதனாம் இறைவனின் திருவடி அது வாழ்க என்றது மணிவாசகம்!

இறைவன் இமைப்பொழுதும் நீங்காமல் என் நெஞ்சில் – நெஞ்சு என்பது ஐந்தும் சேர்ந்த இடம்! அதவது ஐம்பூதமும் ஒத்து இருக்கும்ம் இடம்! நமது கண்ணிலே தான் இருக்கிறது. கண்ணையே நெஞ்சு என்பதே மணிவாசகம்! அப்படி சதா சர்வ காலமும் என் நெஞ்சிலே, என் கண்ணிலே, மணியிலே ஒளியாக ஒளிரும் தாள் – திருவடி வாழ்க!

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

கோகழி – பெரிய உப்பு ஆறு. அதாவ்து கழிமுகம் என்போமல்லவா? அதாவ்து ஆறு கடலில் கலக்கும் இடம்! இங்கே பெரிய கழிமுகமாக நம்து கண்ணே விளங்குகிறது! கண்ணீர் உப்புதானே! கோ என்றால் இறைவன் – தலைவன்! இறைவன் உள்ளே இருக்கிறார் அதன் அருகே கழிமுகம்! கடலாகிய இறைவனின் முன் உள்ள, ஆறு கடலில் கலக்குமிடம் கழிமுகம்! அதனை ஆண்டு கொண்டிருப்பவந்தான் குருவானவன்! அதுவே நம் கண்மணி அதுவே இறைவன் திருவடி அது வாழ்க என்பதே மணிவாசகம்.

ஆகமம் எல்லாம் – வேதங்கள் ஆகமங்கள் புராண இதிகாசங்கள் எல்லாம் சொல்வது இறைவனைப் பற்றித்தானே எல்லா ஆகமப் பொருளுமாகி  நிற்பவன் இறைவனே! அவன் வேறு எங்கோ தூரத்தில் இல்லை! நமக்கு வெகு அண்மையில்தான்! நம் உடலிலே கண்ணிலே மணியோடு ஒளியாகத்தான் துலங்குகின்றான் அதுவே இறைவன் திருவடி! வாழ்க! என்கிறது மணிவாசகம்!

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

ஏகன் – இறைவன் ஒருவரே! அநேகன் – எல்லா ஜீவராசிகளிடத்தும் உயிராக, அநேக யோனி பேதமாகவும் இறைவன் துலங்குகின்றான்! இப்படி எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே, எல்லாஉயிர்க்கும் உயிராக துலங்குகிறார்! அப்படி அவர் துலங்கும் இடமே அவர் திருவடியாக கருதப்படும். அது நமது கண்களே. அது வாழ்க என்றுரைக்கிறது மணிவாசகமான திருவாசகம்!

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

நம் மனமே அதிவேகமாக செயல்படுவது. நாம், நமக்கெல்லாம் வேந்தனான – அரசனான அந்த இறைவன் திருவடியில் சரணடைந்தால், நம் மனதை கட்டுபடுத்தி, பின் இல்லாமலாக்கி அருள்வான் அத்திருவடி வெல்லட்டும்.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

எண்ணிலா பிறப்பெடுத்து கர்மவினையால் துன்புறும்  நம்மை மீண்டும் பிறவாமல் தடுத்து காப்பது இறைவன் திருவடி – கழல்களே – கண்களேயாகும்!

அது எப்படி இருக்கிறது தெரியுமா?

பிஞ்சாக – இளசாக – பாப்பா என சொல்வோமல்லவா? நம் கண்மணிதான் அப்படி உள்ளது. அங்கே தான் தண்ணீர் அருவியென பெய்து கொண்டே இருக்கும் தவம் செய்யும் போது! அது வெல்லட்டும் வெற்றி கிட்டட்டும்.

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்

இதற்கான விளக்கங்களை இங்கு போடவில்லை. பதிவின் நீளம் கருதி தவிற்க்கபடுகிறது. ஆனால் புத்தகத்தில் உள்ளது.  மற்றபடி இங்கு குறிப்பிட விரும்புவது எந்தையடி, சிவன் சேவடி, நிமல னடி, மன்ன னடி என்று திரும்ப திரும்ப இறைவன் திருவடி பற்றி மட்டுமே மாணிக்கவாசகர் பாடுவதை மனதில் நிறுத்தி வைத்து கொள்ளவும். இறைவன அடையும் பாதையில் இந்த இறைவன் திருவடி எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தவே மாணிக்கவாசகர் இத்தனை முறை பாடினார்.

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

என் கண் உள்ளே ஒளியாக துலங்கும் இறைவன் தன கருணையால் “கண் காட்ட” நயன தீட்சை, சட்சு தீட்சை, திருவடி தீட்சை, ஞான தீட்சை வழங்கிட வந்த திறத்தை என்னென்பேன்! எண்ணியறிய முடியாத, மனோவாக்கு காயத்திற்கு அப்பாற்பட்ட பேரழகு திருவடிகள் இறங்கி வந்ததே! விண்ணிலும் மண்ணிலும் எங்குமாய் நிறைந்து விளங்கும் ஒளியானவனே! அளவிட முடியாத எல்லையில்லா வின்வெளி எங்கும் வெட்டவெளி எங்கும் இப்பிரபெஞ்சமெங்கும் விரிந்து பரந்து இருப்பவனே!

நீ எனக்கு வழங்கிய பெரிய அரிய சீர் – உன் திருவடி என் கண்கள்! கர்ம வினைகளால் பிறந்த அடியேன் உன் மகிமையை கூற முடியாமல் வார்த்தையின்றி பரிதவிக்கிறேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

மெய்யே – சத்தியமே – நித்தியமே இறைவன் என்றும் நிலையானவன் !

இறைவா உன் பொன்னடிகள் – என் ஒளி பொருந்திய கண்களை கண்டு வீடு பேறு அடைந்தேன்! இது சத்தியமே! எனது மெய்யிலே – உடலிலே உள்ள மெய் – – கண் ஒளி – இறைவனே! நன் உய்வடைய, முக்தியடைய, பேரின்பம் பெற என் உள்ளத்தில் ஓங்காரமாய் அ – கார, உ – கார, ம – கராமாய் முச்சுடராய் முளைத்தெழுந்த ஜோதியாய் ஓங்கி நிற்பவனே! உள்ளமாகிய – கண்களில் ஒளி விட்டு பிரகாசிப்பவனே!

மெய்யா – இறைவா நீ மட்டுமே உண்மையானவன் என்றுமுள்ளவன்! விமலா – மலம் இல்லாதவன் விமலன்! தர்ம தேவதையான விடை – காளையை வாகனமாக கொண்டவன்! வெள்ளொளியின் மேல் அமர்ந்த செவ்வொளியே சிவம்வெள்ளொளியே – வெள்ளை காளையாக சொல்லபட்டது. நான்கு வேதங்களும் ஐயா என இறைவா உன்னைத் தானே போற்றி புகழ்கின்றன! உன்னை அடையும் மார்கத்தை தானே சொல்கிறது! நீ எப்படி இருக்கிறாய்?

ஆழ்ந்து – இரு கண் வழி  உள்ளே உள்ளே தூரத்தில் ஆழ்ந்து போகையில் மிக மிக நுண்ணிய ஒளியாய் எங்குமாய் சுடர்வீசி ஒளிர்பவனே நீ! இறைவன்! தவம் செய்து அகமுகமாய் போகும்போது நாம் காணும் ஆத்மஜோதியே, பரமாத்மாவின் அனுபிரம்மமான ஒளித்துளிகள்!!

திருவடி பற்றி சிவபுராணத்தில் உள்ள சில பாடல்களுக்கு மட்டுமே இங்கு விளக்கம் கொடுக்க பட்டுள்ளது . திருவாசகத்தில் இருக்கும் வேறு சில பாடல்களுக்கு கூடியி விரைவில் வேறு பகுதியில் விளக்கம் தரப்படும்.

8—————————————————————2

Share

Leave a comment