சன்மார்க்கத்துக்கு சாதனங்கள் ஒன்றும் வேண்டாமா?
சன்மார்க்கத்துக்கு தவம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள்! ஆனால் நீங்கள் தவம் செய்ய சொல்கிறிர்களே என்று எங்களை சந்திக்கும் பல வள்ளலார் பக்தர்கள் கேட்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதில்.
அவர்கள் எதை வைத்து இதை கேட்கிறார்கள் என்று பார்த்தால் உரை நடை பகுதியில் சன்மார்க்க சாதனம் என்ற தலைப்பில்
“சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஒர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதை கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லா உயிரையையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்து கொள்ளுதல் வேண்டும் இதுவே சாதனம்” என்கிறார்.
மேலே உள்ள பத்தியில் (Paragraph) முதல் வரியில் இருப்பதை பார்த்து கொண்டுதான் இவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்.
மேலும் பெருமான் “ஏதாவது ஒர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதை கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும்” என்கிறார். மூச்சுபயிற்ச்சி, குண்டலினி யோகம், வாசி யோகம் அது இதுன்னு நாம செய்ய தேவை இல்லை என்கிறார்.
இதுவரை சரியாக படித்து வரும் நாம் கடைசி வரிகளை சரியாக படிக்காமல் விட்டு விடுகிறோம். ஆம், அடுத்த வரியில் வேறு ஒன்றை சொல்கிறார் அதை பெரும்பாலானோர் கவனிக்க தவறி விடுகிறோம். அப்படி முழுவதும் படிக்காமல் தான் வள்ளல் பெருமான் எதுவும் சொல்லவில்லை என்று நினைத்து விடுகிறோம். அது என்ன வெனில்
ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லா உயிரையையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்து கொள்ளுதல் வேண்டும் இதுவே சாதனம் என்கிறார்.
சாதனமே வேண்டாம் என்று சொன்ன வள்ளல் பெருமான் இதுவே சாதனம் என்று ஒன்று சொல்கிறார். அதாவது உன் உயிரைப் போல் எல்லா உயிரையும் பார் என்கிறார்.
இதை நீங்கள் செய்கிறிர்களா என்று அந்த அன்பர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் சற்றும் தயங்காமல் நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார்கள்.
எப்படி நீங்கள் எல்லா உயிரையையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் சாதனத்தை செய்கிறிர்கள் என்று கேட்டால்?
நாங்கள் எப்படி சாப்பிடுகிறோமோ அதே போல் எங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உணவு கொடுக்கிறோம், உடை கொடுக்கிறோம் மற்றும் மருந்தும் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.
இது போலவேதான் இன்று நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயமாக நல்ல செயல்தான் அவரவர்களால் முடிந்த வரை செய்ய வேண்டியதுதான். ஆனால் இந்த இடத்தில் சன்மார்க்க சாதனமாக வள்ளல் பெருமான் சொன்னது இதுவல்ல.
மீண்டும் ஒரு முறை இதை படித்து கொள்ளுங்கள் “ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லா உயிரையையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்து கொள்ளுதல் வேண்டும்”
நாம் உணவு சாப்பிடுவது, மருந்து உட் கொள்வது எல்லாம் நமது உடம்பை சரியாக வைத்திருப்பதற்க்கும் மற்றும் நமது உடம்பில் நல்ல படியாக உயிர் தங்குவதற்க்கும் உதவி செய்யுமே தவிர “நமது உயிரை ஒரு போதும் பார்க்க உதாவது” நம்மோட நிலைமையே இவ்வாறு இருக்க அடுத்தவர்களுக்கு உணவு கொடுப்பது, மருந்து கொடுப்பது இவையெல்லாம் அவர்கள் உடம்பை நல்ல படியாக வைத்திருப்பதற்க்கு உதவி செய்யுமே தவிர அவர்களுடைய உயிரை எல்லாம் நம்முடைய உயிரை போல் எல்லாம் உணர முடியாது அல்லது தன்னுயிரைப் போல் பிற உயிர்களையும் பார்க்க உதவாது.
ஏன் எனில் நாம் இன்னும் நம்முடைய உயிரையே உணர வில்லையே! நம்முடைய உயிரையே பார்க்காம அவங்க உயிரை தன்னுயிரைப் போல் பார்க்க உணர முடியுமா?
நாம் நமக்குள் கடந்து நம்முடைய உயிரை எப்பொழுது பார்க்கிறோமோ அப்பொழுதுதான் நாம் பிற உயிர்களையும் நம்முடைய உயிர்களை போல் பார்க்க முடியும். இதை தவிர நான் என்னை போலத்தான் மற்றவர்களையும் பார்க்கிறேன் என்று சொல்வது எல்லாம் கற்பனையே தவிர உண்மையல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
இதற்க்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம்
ஒரு இடத்தில் நிறைய பெட்டியில் “அர்மிகோ ” பழம் போட்டு வைத்திருக்கிறார்கள். என் கையிலும் ஒரு பெட்டி கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். என் கையில் வைத்திருக்கிற “அர்மிகோ ” பழம்தான் எல்லா பெட்டியிலும் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ள சொன்னால் முதலில் நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நான் என் பெட்டியில் இருப்பது என்ன வென்று பாக்க வேண்டும்?
அதனுள் பார்த்தால் தான் மற்றதையும் பார்க்க முடியும்! இப்படி செய்தால் மட்டுமே இதுதான் அது (அ) அதுதான் இது என்று உணர முடியும்.
“அர்மிகோ” பழம் என்று படிக்கும் போது இந்த பழம் எந்த நிறத்தில் இருக்கும் எந்த வடிவத்தில் இருக்கும் எந்த ஊரில் விளையும் இது வரை நாம் பார்த்தது இல்லையே என்று தோன்றினால் அது மிக சரி. இதே போல “தன்னுயிரைப் போல்” என்று படிக்கும் போதே நமக்கு நம் உயிர் எந்த தன்மையில் இருக்கும், நமது உடம்பில் உயிர் எங்கு இருக்கும் என்று தோன்ற வேண்டும் அப்படி தோன்றினால் மட்டுமே வள்ளலார் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும்.
இதுநாள் வரை நாம் நமது உடம்பைதான் நாம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். நமக்குள் “கட”ந்து நம் “உள்” பார்த்தால் நம் உயிரான கடவுளை பார்க்கலாம் உணரலாம்.
இதுவரை நாம் பார்த்தது என்னவெனில் நம் உயிரை நாம் பார்த்தால்தான் பிற உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்க முடியும் என்பதுதான். அந்த வரிகளில் வள்ளல் பெருமான் இன்னும் நுணுக்கமாக தன்னுயிரை போல பார்க்கும் உணர்வை வருவித்து கொள்ளுதல் வேண்டும் என்கிறார்.
இப்படி நமது உயிரை பார்ப்பதற்க்கு வேறு சாதனம் எதுவும் வேண்டாம் அதாவது அந்த யோகம் இந்த யோகம் என்று எதுவும் வேண்டாம் சும்மா இருந்தால் போதும் என்று திருஅருட்பிரகாச வள்ளலார் சொல்கிறார். ஆம், அவரவர் உடம்பில் உயிர் இயல்பாக இருக்கிறது அதற்க்காக நாம் புதுசு புதுசா எதுவும் செய்ய வேண்டாம். நாம் இயல்பாக இருந்து கொண்டே நம்முடைய உயிரை பார்க்கா முடியும். இதைத்தான் சும்மா இருங்கள் போதும் என்று சொன்னார்கள். மேலும் பல சித்தர்களும் சும்மா இரு என்றே சொன்னார்கள்.
“இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றென்று வருமோ அறியேன்
எங்கோவே துன்றுமல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்” – திரு அருட்பிரகாச வள்ளலார்
இந்த சும்மா இருப்பதைத்தான் ஞான தவம் என்றும் திருவடி தவம் என்றும் சொல்கிறார்கள். இதுதான் இந்த இணையதளம் முழுவதும் விளக்கப்பட்டிருக்கிறது. அல்லது எங்களது சத்சங்கத்தில் கலந்து கொண்டாலும் எமது அன்பர்கள் விளக்கமாக சொல்வார்கள்.