காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!

திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று
நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே.
– திருமந்திரம்

அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது
திகைப்பு தான் மேலிடுகிறது! ஆச்சர்யம்! அதிசயமாகிறது!
சிங்கத்தின் கண் பார்த்திருக்கிறீர்களா? நெருப்பு துண்டம் போலல்லவா இருக்கும்!
நாம் தவம் செய்து நம் இரு கண்களையும் அங்ஙனம் அக்னி நிரம்பிய கண்ணாக
பெறும்போது உள்போய் பெறும்போது உள்போய் மூன்றாவது கண்ணும் துலங்கும்.
சிங்கத்தின் கண்போல் மூன்று கண் ஜோதிமயமானது பெறுவோம்!

விதி – வினைப்படி நம் மனம் செயல்பட்டு ஊரார் நகைக்கும்படி நம் செயல் அமையும்! அப்படி அமைய நம் நெஞ்சில் வாழும் நரி போன்று வஞ்சக குணம் கொண்ட மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அந்தக்கரணம் நான்குண்டு!

நம் நெஞ்சத்தில் ஐந்து யானைக்குட்டி போன்ற பலமிக்க ஐம்பூதங்களும் உண்டு! வகை வகையாக
விதம் விதமாக பல அனுபவங்களை தருவது இந்த ஐந்து யானைக்குட்டியாகும்! நமக்கு ஞானம்
பெற பகை காமம்! காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! “காம உட்பகைவனும் கோபம் எனும் கொடியன் கனலோப மூடன்” இப்படி நமது துர்குணங்களே நம் பகைவர்கள் என்று வள்ளலார் கூறுகிறார். இத்துர்குணங்கள் குரு அருளாலே தீட்சை பெற்று தவம் செய்யச் செய்ய தானே விலகும் இதுவே சத்தியம்! பலம் மிக்க இப்பகைவரோடு நாம் போராடி வெற்றி பெறமுடியாது! இறைவன் திருவடியை சரணடைத்தாலே தப்பிக்கலாம்! வேறுவழியே கிடையாது!

இந்த காமம் நம் நெஞ்சில் உருவாகிறது? ஆண்பால் பெண்பால் என இருபிரிவாக எண்ணுவதால் தான்! நாம் அனைவருமே ஒரே இனம்! நம் இனம் “ஜீவாத்மா”! என்று அறிபவர் நெஞ்சில் காமம் தோன்றாது !நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே. அனைவரும் பெண்ணினமே! நாம் அடைய வேண்டியது ஒரே ஆணான பரமாத்மாவையே! அவரே புருஷோத்தமன் ஆவார்!

மனிதன் பிறப்பு இறப்பு என்ற மாயையில் வினைப்பயனால் சிக்கி ஆண் பெண் என ஜீவமயக்கம் கொண்டு மேலும் மேலும் வினையாற்றி சம்சார சாகரத்தில் சிக்கி மூழ்கிவிடுகிறான்! சம்சார சாகரத்தில் மூழ்கமால் இருக்க இறைவன் திருவடியை சரணடைந்தால் அந்த இறைவன் நம்மை கைபிடித்து கரை சேர்ப்பார்! நமக்கு பகை நம் நெஞ்சமே! நம் நெஞ்சு எது? பலர் மார்பை நெஞ்சு என்பர்! தவறு! ஐந்தும் சேர்ந்த இடமே நெஞ்சு? ஐம்பூதங்களுள் ஒன்று சேர்ந்திருக்கும், வினையான மெல்லிய படலம் மூடியிருக்கும் நம் கண்ணே நம் நெஞ்சு!? நெஞ்சில் கொஞ்சமாவது ஈரமிருக்க, என இரக்கமே இல்லாத மனிதனைப் பார்த்து கேட்கிறோமல்லவா? ஈரம் எங்கே இருக்கிறது? கண்ணில்தானே! கருணை, அன்பு இரக்கம் எல்லாம் கண்ணீர் பெருகி உருகுவதால், கண் ஈரமாவதால் தானே பிறக்கிறது?! கண்ணே உள்ளம் நெஞ்சு என்பதும் பரிபாஷை!

“கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று” என்பது தான் ஞான நிலை! பல்லாயிரம் விதமாக மெய்ப்பொருள் விளக்கம் இங்கே கூறியாயிற்று! பரிபாஷை ரகசியம் எல்லாம் வெளிப்படுத்தியாச்சு? புரிந்து கோள் மானிடா! எதை சொல்லணுமோஅதை மட்டும் சொல்லுகிறேன்! எழுதுகிறேன்! யோகம் கர்மம் மிக மிக கடினம் ஆபத்து மிகுந்தது! பக்தி ஆரம்பம் ஞானம் முடிவு இவை மட்டும் போதும்! வினைபோகமே தேகமாக உருவான மனிதனே வினையறுத்து விமோசனம்
பேற விமலன், ஈசன் திருவடியை சரணடை!

சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிக! உணர்க ! ஞானம் பெறுவாய்!

Share

Leave a comment