தவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்?
“கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக மலைவறு
சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற” – திருவருட்பா திருவருட் புகழ்ச்சி ஆறாம் திருமுறை
கலை – ஒளி கலை! கண்ணை மூடி கொண்டு தியானம் செய்பவர் ஞானம் பெறார்! ஏன்? கண்ணை மூடி கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலப்பல காட்சிகளை காட்டும். உடனே , ஆஹா எனக்குப் பல அற்புதக் காட்சிகள் காண கிடைக்கின்றது நானே ஞானம் பெற்றவன் , நானே பெரியவன் என , ஏமாந்து இறுமார்ந்து பிதற்றுவான். கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான். மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும். அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமார்ந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான். அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர்நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போகட்டும் என்று கூறுகிறார்.
கண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகிறார்களே என்ற வேதனையால் தான் இதை கூறுகிறார். இறைவன் நிலை , நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும். இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்க்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது. திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி பெற தங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள். உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம் பெற வழி காட்டுவார் வள்ளலார்.
கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண்ணை திறந்து தவம் செய்தால் தான் உள் ஒளி பெருகும். வினை திரை கரையும். கண்மூடினால் வினையில் ஒன்றான மாயை அதிகமாகும்.
கண் திறந்து செய்யும் ஞான தவம் மேலிட்டால் இரு கண்ணும் ஒளி மிகுந்து உட்புகுந்து தலை நடு உள் விளங்கும் சீவன் சிவனாகி பிரகாசிக்கும். தவம் மேலும் மேலும் சிறக்க , தலை நடு உள் விளங்கும் அக்னி , சிவனை போல நம் நெற்றியிலும் , வெளியிலும் மூன்றாவது கண்ணாக துலங்கும். சித்தர்களும் , ஞானிகளும் நெற்றி கண் பெற்றவர்களே. மூவர் உணர்ந்த – முக்கண் உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் நம் நாட்டில் ஏராளம்.
வள்ளலார் மட்டும் அல்ல இறைவனை அடைந்த எல்லா ஞானிகளும் கண் திறந்து தான் தவம் செய்து இறைவனை அடைந்தனர்.