தெய்வமணிமாலை
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந் தோங்க அருள் கொடுத்து
மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான
உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்
ஊர்ந்தோங்கி யெவ்வுயிர்க்கும்
உறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாளெந்த நாள்
தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
கோட்டத்தில் அருள் வழங்கும் சண்முக தெய்வத்தை போற்றி
பிராத்தித்து வேண்டிய பாடல்கள்.புறத்தில் சென்னையில் கந்தகோட்ட முருகனை பாடியது. இதன்
அகப்பொருள் நம் சென்னியில் அமைந்துள்ள கோட்டம் கண்
என்பதாகும். கோட்டம் என்றால் கோயில். தெய்வம் இருப்பது கோயிலிலே
தானே! தெய்வம் சண்முகம் அதாவது ஆறுமுகம். இருகண்கள் தான் ஆறுமுகம்.1 கண் 3 வட்டம் 3 முகம் 2 கண்ணும் சேர்ந்து 6 முகம். ஆறுமுகமான
பொருள் – மெய்ப்பொருள் தெய்வமணி – தெய்வம் இருக்கும் மணி கண்மணியே, நீர் கண்ணில் இருப்பதால் தண்முகம். கண்மணியில் உள் ஒளி இருப்பதால் உண்முகம் -உள்முகம் துய்யமணி – கண்மணி தூய்மையானது. திருவாகிய தெய்வம் – ஒளி முகத்துக்கு முகமாக கண்மணியில் உள்ளே ஒளியாக இருக்கிறது. ஒளி ஓங்கி வருமல்லவா? அதைத்தான் வள்ளலார் ஓங்கி ஓங்கி ஓங்க என்று பலவாறாக பாடியுள்ளார்.”கண்மணியுள் உள்ள ஒளி ஓங்கி வளர அருள்புரி இறைவா! “ஒளி ஓங்கி
வளர வளர எல்லாம் கிடைக்கும்!‘ஓங்கு மயில் ஊர்ந் தோங்கி மயில்’ என்றால் ஒளி.பலவர்ண ஒளி, அது
ஊர்ந்து ஊர்ந்து கண்மணி ஒளியை உள்ளே கொஞ்சங் கொஞ்சமாக கொண்டு சென்று – அக்னிகலையுடன் சேரும். தியான அனுபவ நிலையை கூறுகிறார் வள்ளலார். 9 வயதில் பாடிய பாடல் இது! பிறவி ஞானி வள்ளலார் என்பதற்க்கு இப்பாடல் ஒன்றே சாட்சி.
‘செங்கமல மலரோங்கு’ நம் கண்மணி தவத்தால் சிவமாக்கும் தாமரை மலர் – கமலம். மலர் என்றால் கண்மலர் சிவந்த கண்ணே செங்கமலமலர்!
கண்ணில் மணியில் உள்ளில் இருக்கும் ஒளியான கந்தனை – சண்முகனை – இரு கண்மணி ஒளியை தியானிக்க அவ்வொளி உள்ளே ஊர்ந்து சென்று அக்னியை 3வது கண்ணை அடையும் இதுவே தியான அனுபவம்.
‘துரிசறு சுயஞ்சோதியே ‘ பாடல் 5
துரிசு என்றால் நம் பாவ புண்ணியமான கர்மவினை. அது நாம்
இறைவனை அடைய தடையாக இருக்கிறது. நாம் தியானம் செய்து
நம் கண்மணியிலுள்ள சுயம் ஜோதியை ஓங்கி வளர செய்தால் நம்
துரிசு அற்றுப்போகும். வினை இல்லாது போனாலே முக்தி.
‘அலையிலா சிவ ஞான வாரியே – பாடல் 7
வாரி என்றால் கடல். கடலில் அலை உண்டு அலையில்லா
கடல் சிவம் விளங்கும் ஒளி பொருந்திய நமது கண்ணே. ஒளி
மிகுந்தால் ஞானமே
‘திருமலரடி ‘ பாடல் 8
திருவாகிய இறைவன் – ஒளி மலராகிய கண்மலரில் உள்ள அதுவே
அடி – திருவடி – இறைவன் திருவடி எனப்படும்.
‘உத்தமர் ‘ பாடல் 8
உள்+ தமர் – உத்தமர், கண்மணியின் மத்தியில் உள் உள்ள துவாரம்
தமர் என்றால் ஓட்டை – துவரம். கண்மணியின் மத்தியில் உள்ள
சிறு துவாரம் அடைபட்டு ள்ளது. உள்ளே ஒளி – சிவம் இருக்கிறது.
உள் – தாமரை உள்துவாரத்தை அறிந்தவரே உத்தமர்.
நாம் பிரமம் – பாடல் 11
நாம் கடவுள் பிரமமே நம்முள்ளும் நம் கண்மணியுள்ளும் ஒளியாக
திகழ்கிறது. பிரம்மத்தின் ஒரு அணு அ ளவு – பேரொளியின் ஒரு
சிறு ஒளி நம்மில் நம் உயிராக உள்ளது.
பந்தமற நினையெணா – பாடல் 18
நமது பந்தம் அறவேண்டுமாயின் இறைவனை எண்ண வேண்டும்.
எட்டும் இரண்டும் என்ன வேண்டும். நினைக்க வேண்டும்.நினைந்து
எண்ணி தவம் புரிந்தால் நம் பந்தமாகிய கர்மவினை இல்லாது
போகும்.
‘நின்னடிச்சீர் மகிழ்கல்வி – பாடல் 22
நின்னடி – இறைவன் திருவடி – நம் இரு கண்கள் – சீர் – இறைவன் நமக்கு
கொடுத்த சீர் ஒளி . கண்களில் ஒளி இருப்பதை அறிவது அதை ஒங்க செய்வதாகிய கல்வி – சாகா கல்வியை கற்க வேண்டும் . இதுவே மகிழ்ச்சியை – பேரின்பத்தைதரும் சாகாகலையாகும் .
நம் மனமானது பொன்னாசை , மண்ணாசை , பெண்ணாசை கொண்டு அலைகிறது . அது எப்படி இருக்கிறது என்றால் பேய்பிடித்து கல்குடித்து தடியால் அடிபட்டு பைத்தியம் பிடித்த குரங்கு போல் என்கிறார் பாடல் 23-ல்
பிரணவா கார சின்மய விமல சொரூபம் – பாடல் 24
பிரணவம் – ஓம் – அ . உ . ம . ஆகும் . அ – வலது கண் உ – இடது கண் . இரண்டு கண்ணும் உள் முகமாக சேரும் இடம் அக்னி ம . ஆகும் . மூன்றும் சேர்ந்தால் ஓங்கார நாதம் கேட்கும் . சின்மயம் – சின் முத்திரை வைத்தால் அறியலாம் . சின்முத்திரை வைப்பதே கண்ணை குறிப்பால் உணர்த்தத்தான் . ஆள்காட்டிவிரலால் கட்டைவிரலின் மத்தியில் உள்ள கோடை தொட்டு இருப்பதே சின்முத்திரை . கட்டைவிரல் நுனியிலிருந்து
முதல் வரி வரை உள்ள அளவே நம் கண் அளவு . இரு விரலும் தொட்டிருக்கும்போது பார்த்தால் தெரியும் வட்டம் கண்போன்றிருக்கும் . எல்லாமே சூட்சமம் விமலம் என்றால் மலம் இல்லாதது சுத்தம் ஒளி ஒன்றுதான் .
பிரம்மன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ – பாடல் 27
நாம் நம் கண்மணி ஒளியை தவம் செய்து ஒங்கச் செய்தால் நம் வினைகள் இல்லாது போகும் . வினைகள் தானே பிறப்புக்கு ஆதாரம் ! வினைகள் இல்லையெனில் பிரம்மன் இனி எப்படி படைக்க முடியும் ?
நின் பதத்தியான முண்டாயில் பாடல் 28
இறைவா உன் பதம் – பாதம் – திருவடி தியானம் இருக்குமானால் எல்லா செல்வமும் பெற்று இவ்வுலகிலும் வாழ்வாங்கு வாழலாம் .
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவிலாத முருகனே -பாடல் 30
நாம் முக்தி பெற வேண்டி இரு கண் ஒளியை தியானம் செய்யும்போது முதலில் வருவது முதல்காட்சி சண்முகம் இரு கண்கள் . நம் இரு கண்களையும் நம்முன் காணலாம் .முருகன்தான் முதலில் காட்சி தருவான் ! முருகு என்றால் அழகு – இளமை அது நம்கண்தானே ! கண்தானே அழகு ! கண் தானே என்றும் இளமையானது !
வள்ளலே என்னிருகண்மணியே ஏன் இன்பமே – பாடல் 31
வள்ளலே – இறைவனே என் இரு கண்மணியே – ஏன் இரு கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனே எனக்கு பேரின்பம் தருபவன் . நம் இரு கண்மணியில் உள்ள ஒளியை ஒங்கச் செய்தாலே பேரின்பம் கிட்டும் .
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாலகனாயிருந்தபோது பாடிய ஒப்பற்ற பாடல்கள் இது !
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . திருவருட்பா 6000 பாடல்களும் எப்படியிருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் . முழுக்க முழுக்க ஞானம் . பிறவி ஞானி வள்ளலார் .
9 வயது பாலகன் பாடிய பாடல்களா இவை என நம்மை மலைக்க வைக்கிறது ? வள்ளலே -இறைவனே வள்ளலாரானார் ! பரிபூரணமாக அருட்பெருஞ்ஜோதி உறைந்த உருவமே வள்ளல் இராமலிங்கர் !
ஆன்மீக செம்மல் ஞான சற்குரு
சிவசெல்வராஜ்
நூல்: திருவருட்பாமாலை