சொல்லும் பொருளுமாய் நிறைந்த
சுகமே யன்பர் துதி துணையே
புல்லும் புகழ்சேர் நற்றணிகைப்
பொறுப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலு நின்னாமம்
அந்தோ நினைந்துன்  னாளாகேன்
கல்லும் பொருவா வன்மத்தாற்
கலங்கா நின்றேன் கடையேன்

சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே இறைவன் நம் மெய்யிலே
உள்ள பொருளாக விளங்குகிறான். மெய்ப்பொருள் அது நம் கண்மணி ஒளியே.
எந்த சொல்லை சொன்னாலும் அது அந்த பரம்பொருளையே குறிக்கும்.
ஓசை ஒளியானவன் அவனல்லவா? “சொற்கள் அனைத்தும் பொருள்
உடைத்தனவே ” என்பது தொல்காப்பிய சூத்திரம். “ஓர் உருவம் ஒருநாமம்
இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி தெள்ளேணம் கொட்டோமே” என
மணிவாசக பெருந்தகை திருவாசம் கூறுகிறது. எந்த சொல்லையும்
பகுத்து பார்த்தால் அது பொருளையே – மெய்ப்பொருளையே இறைவனையே
குறிக்கும்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

வள்ளுவ பெருந்தகை கூறியதும் இதுதானே, இதைத்தானே வள்ளலாரும் சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே என்றார். நிறைந்த – ஒளி நிறைந்த. அது தானே சுகம் அல்லது பகலும் நின் நாமம் நினைந்து இரவு பகலாக எப்போதும் நின் நாமம் – இறைவா உன்னை – நினைந்து உருக வேண்டும்
என வேண்டுகிறார் வள்ளலார்.

மணியே யடியேன் கண்மணியே
மருந்தே யன்பர் மகிழ்ந் தணியும்
அணியே தணிகை யரசே தெள்
ளமுதே யென்ற னாருயிரே – பாடல் 3

மணியே என்றன் கண்மணியே அதுவே என் பிறவிப்பிணிக்கு மருந்தே அன்பர்கள்  மகிழ்ந்து அணியும் அணியே கண்மணி மாலையே! தணிகை அரசே- என் குறை தவிர்ந்த நிலையில் என் கண்மணியில் உள்ள ஒளியே – அரசே! எனக்கு பேரின்பம் தரும் தெள்ளமுதே திகட்டாதே அமுதே நீயே என் ஆருயிர் ஆக விளங்குகிறோய்.

மணியே மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கழகே அணுகாதவருக்கு பிணியே,பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே என அபிராமி பட்டர் கூறுகிறார்.

என் கண்ணே தணிகைக் கற்பகமே – பாடல் 6

நம் கண்ணே – தணிகைமலை ஆண்டவன் இருப்பிடம். ஒளியின் உறைவிடம்
அதை அடைந்தால் கற்பக விருட்சம் போல் நமக்கு வேண்டியது எல்லாம் தரும்.

 

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

Share

Leave a comment