யார் பெறுவார் ஒளி உடல்?

ஆன்மீகத்தில் மேலான நிலை உடலை விட்டு உயிர் பிரியாமல் ஊன உடலையே நமது உள் இருக்கும் இறைவன் அருளால் ஒளி உடலாக ஓங்க பெறுவது.  மரணமில்லா பெரு வாழ்வு என்பர் இதை.

வள்ளல் பெருமான் தான் பெற்ற இப்பெரும் நிலையினை, திறத்தினை  திருவருட்பாவில் பல பாடல்களில் பறைசாற்றி உள்ளார்கள். எல்லாம் வல்ல இறைவனனே தனக்கு இத்தேகத்தினை வழங்கினார் என்று பாடி பரவுகிறார்.

 ‘என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே !”

சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே !”

சாகாதவனே சன்மார்க்கி!  எனவும் பறைசாற்றி  சுத்த சமரச சத்திய சன்மார்க்க சங்கத்தினை ஏற்படுத்தி உலக மக்கள் அனைவரும் சன்மார்க்கத்தில் சாறுங்கள் அனைவரும் “மரணமில்லா பெரு வாழ்வு” பெறலாம் என்று அழைக்கிறார்.

சன்மார்க்க சங்கம் பல ஊர்களில் நிறுவி உள்ள அன்பர்கள் இன்னும் யாரும் ஒளி உடல் அடைய வில்லையே என்று பலருக்கு கேள்வி எழுகிறது ? அப்படி எனில் இந்த ஒளி உடல் பெற என்ன செய்ய வேண்டும்.

எங்கள் குருநாதர் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமான் அருளால் எழுதியுள்ள புத்தகங்களில் இதற்கு விடை கூறி உள்ளார்கள்.  வள்ளல் பெருமானே எங்கள் குருநாதரின் மூலமாக இதை உலகோருக்கு தெரிவிக்கிறார்கள்.

இறைவன் பேரொளி – நாம் ஆத்மாக்கள் சிற்றொளி! சிற்றொளியாகிய நம் ஆன்ம ஜோதியை தவம் செய்து சூட்சுமமான கண்மணி ஒளியை பெருக்கி அக்னி கலையான ஆத்ம ஜோதியுடன் இணைத்தால் பெரும் ஜோதியாகும். இவ்வாறு தொடர்ந்து தவம் மேற்கொண்டால் ஒளி – ஆன்ம ஒளி மேலும் மேலும் வியாபித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி பல்கி பெருகி ஒளி உடலாகும். அப்போது தான் நாமும் பேரோளியாவோம். அப்படி பேரோளியாகியே நாம் பேரொளியான இறைவனிடம் இரண்டறக் கலக்க முடியும். நான் அவனாவது அச்சமயமே. நமது ஊன உடல் ஒளி உடலாகும் நிலை இதுதான்.

இறைவன் வகுத்த சட்டத்தில் ஓட்டை கிடையாது. இங்கே யாராயினும் சரி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் பட்டம். அப்பழுக்கில்லாத , தூய்மையான ஆன்மாவே அன்பால் மட்டுமே ஆண்டவனை அடைய முடியும்.

அதாவது ஆன்மாவின் வினைகள் (மும்மலங்கள்) எப்போது முற்றிலும் நீங்குகின்றதோ அப்போது தான் ஒளி உடல் பெற ஆன்மா தகுதி பெறுகிறது.

பல மகான்கள் தங்கள் உயிரை  ஆதாரத்தில் ஒடுங்க செய்து விடுவதால் புற செயல் அற்று சமாதியில் முழ்கி விடுகிறார்கள். இது ஒன்றும் மேலான நிலை இல்லை என்கிறார் வள்ளலார். “சமாதி பழக்கம் பழக்கம் அல்ல. சகஜ பழக்கமே பழக்கம் ”  என வள்ளல் பெருமான் கூறி உள்ளார்கள்.

சமாதி கூடி இருந்தால் போதாது. அதற்கும் மேல் நிலையே இந்த சாயுச்சிய நிலை. ஒளி உடலாகும் நிலை. சமாதி நிலை ஞானத்தில் ஒரு படியே. இன்னும் போக வேண்டிய நிலை நிறைய உள்ளது. சமாதி அனுபவம் கை கூட வேண்டும். அதே சமயம் உணர்வோடும் இருக்க வேண்டும். சமாதியில் முழ்கி விட கூடாது.

இங்ஙனம் நம் நாட்டில் இறைவனை அடையும் முயற்சியில் தோல்வியுற்று சமாதி பெற்றவர்களும் கோடான கோடி பேர்கள். அவர்கள் எல்லாம் மீண்டும் பிறக்க வேண்டும். இறைவனை இரண்டற கலப்பது வரை பிறவி தொடரும்.

நம் பிறப்பிற்கும் , இறப்பிற்கும் காரணமாக அமைவது நாம் பல பிறப்புகளாக செய்த , இப்பிறப்பில் செய்து கொண்டிருக்கும் வினை தான். வினையினை கர்மம் என்பர். இது பிராப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்று உண்டு.

ஒவ்வொருவருக்கும் வரும் நல்லது கெட்டதுக்கு அவர் அவரே பொறுப்பு. வேறு யாரும் கிடையாது.

பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” என்று சித்தர் பெருமக்களும் கூறி உள்ளனர். இது தானே உண்மை.

அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது.

இதுவே இறைநியதி.

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு,கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.

இப்பிராரத்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.

பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது  புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.

நம் வினைகள் முற்றும் நீங்கினால் மட்டுமே ஒளி உடல் பெற தகுதி உடையவர் ஆகிறோம்..

பேருபதேசத்தில் வள்ளல் பெருமான் உங்கள் குறைகளான வினைகளை இறைவன் திருவடியில் சமர்பியுங்கள் என்கிறார். இறைவன் திருவடியை பற்றியே எங்கள் இணையத்தளத்தில் முழுவதும் விளக்கி உள்ளோம்.

தவத்தின் மூலம் கண்மணியில் தோன்றும் ஞான ஒளியினால் தான் வினை திரைகள் சிறிது சிறிதாகா கரையும். இறைவன் திருவடியை (கண்மணி ஒளியை) பற்றினால் தான் ஞான ஒளி பெருகும்.

தவத்தின் ஆற்றல் பெருக பெருக சஞ்சித வினையும் நமக்கு வந்து நீங்கும். தவம் செய்பவருக்கே சஞ்சிதம் வந்து தீரும்.

வினைகளில் அளவினை பொருத்து , தவத்தின் தன்மையினை பொருத்து இப்பிறப்பினிலே சிலருக்கு கை கூடும்.

இந்த பிறவியில் கிட்டாமல் போனாலும் செய்த தவத்தின் , ஞான தானத்தின் பலன் அடுத்த பிறவியில் நிச்சயம் கை கொடுக்கும்.

ஒரு பிறவியில் செய்த தவம் , தானம் அடுத்த பிறவிகளில் கை கொடுக்கும் என்பது எப்படி எனின் :

வள்ளல் பெருமான் முந்தைய பிறப்பினில் செய்த தவத்தின் பலன் அவர் 3 மாத குழந்தையாக இருக்கும் போதே இறைவன் அவருக்கு சிதம்பர ரகசியத்தை தெரிவித்தார். ஒன்பதாம் அகவையில் குமார கடவுள் அருளால் ஓதாமல் உணரும் வரம் பெற்றார். மேலும் இப்பிறப்பிலும் அவர் தொடர்ந்து செய்த சாதனையால் ஒளி உடல் பெற்று சாகா  வரம் பெற்று , இறைவன் செல்லபிள்ளை ஆகி சன்மார்கத்தினை இன்றும் நடத்துகிறார்.

மாணிக்க வாசக பெருந்தகை பல பிறவி எடுத்து முடிவில் இறைவன் பொன்னடிகளை கண்டதால் வீடு பேறு பெற்றேன் என்கிறார்.

திருஞான சம்பந்தர் பெருமான் சிறு குழந்தையாக இருக்கும் பொது அம்பாள் அருளினால் அமுதம் உண்டார். இது அவர் முற்பிறப்பில் செய்த ஞான சாதனையின் பலனே.

திருநாவுகரசர் பெருமான் மிகுந்த வினையினை பெற்று இருந்ததால் பல இன்னல்களுக்கு ஆளாகி முடிவில் வைராக்கியத்துடன் செய்த தவத்தால் தனது முதிர்ந்த வயதில் இறைவனை அடைந்தார்.

விட்ட குறை தொட்ட குறை என்று ஆன்றோர் இதனையே கூறுவர்.

வினைகள் நீங்க நீங்க , ஆன்மஒளி பெருக பெருக நம்மிடம் உண்மை அன்பு வெளிப்படும்.  உண்மை அன்பினை கொண்டே இறை வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளல் பெருமானார்.

ஆகா  எப்போது நம் வினைகள் முற்றிலும் (100%) நீங்குகின்றதோ அதன் பின் அன்பால் மட்டுமே இறைவனை நாம் அடைவோம்இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல.

இறைவன் திருவடியை பற்றி நாம் செய்யும் தவமே வினைகள் நீங்க ஒளி உடல் பெற வழி.

இறைவன் திருவடியை பற்ற நமக்கு தேவை   ஒழுக்கம்!அன்பு! பக்தி! பரோபகாரம்!  இதுதான் சன்மார்க்கம்!!

இவைகளே நம்மை ஒரு நல்ல குருவுடன் சேர்க்கும்.

ஆகவே திருவடி தவம் என்னும் இந்த தவம் செய்ய முதலில் சுத்த சைவ உணவு உட்கொண்டு , ஒழுக்கத்தோடு வாழ்ந்து வள்ளலாரை குருவாக கொண்டு , மனித உருவில் உள்ள ஞான சற்குருவின் மூலம் விழி திறக்க பெற்று விழித்திருந்து தவம் செய்யுங்கள்.

எல்லோருக்கும் இறைவன் அருள்வான்.

‘சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

 நித்த வடிவும் நிறைந்தோங்கு -சித்தெனும்ஓர் 

 ஞான வடிவும் இங்கே நான்பெற்றேன் எங்கெங்கும

 தானவிளை யாட்டியற்றத் தான்”

                                                                –    திருவருட்பா     

‘ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க 

 ஞான அமுதெனக்கு நல்கியதே – வானப்  

பொருட்பெருஞ் ஜோதிப்  பொதுவில் விளங்கும்  

அருட்பெருஞ் ஜோதி அது”    

                                                                –    திருவருட்பா

காற்றாலே  புவியாலே ககனமத  னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே  பிணியாலே  கொலைக்கருவி  யாலே

கோளாலே பிறஇயற்றும்  கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்யளிக்க  வேண்டுமென்றேன்  விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர்  உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி  இறைவனைச்சார் வீரே

                                                                            –    திருவருட்பா

பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவனெனை  உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்

எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்

துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே

                                                                             –    திருவருட்பா

கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன் 

அற்புத   ச்சிற் றம்பலத்தில் அன்புவைத்தேன் ஐயாவே

                                                                             –    திருவருட்பா 

ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி

ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே 

                                                                              – திருவருட்பா                 

                                              எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!   

Share

5 Comments

  • Sivanaath
    Posted July 5, 2015 8:47 am 0Likes

    Reading the above information is a gift presented by the God

  • Senthil nathan
    Posted July 28, 2015 10:08 am 0Likes

    பிடித்திருக்கிறதுComment

  • dr.a.duraisamy
    Posted December 30, 2015 7:29 am 0Likes

    It is Good

  • subramanian
    Posted January 26, 2016 2:37 pm 0Likes

    அருமை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணைப்பார்வையில் எல்லாம் இனிதே

  • gunasekar
    Posted February 13, 2016 1:42 am 0Likes

    Very nice information to reach the spark soul and body.

Leave a comment