உருவ வழிபாடு சிறந்ததா? அருவ வழிபாடு சிறந்ததா?
“ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் , பின் உருவம் கரைந்து அருவமாகும்” என்றார் வள்ளல்பெருமான். கந்த கோட்டத்து முருகனை , தணிகை வேலவனை வணங்கிய பின் திருவொற்றியூர் தியாகராசரே , வடிவுடை அம்மனே கதி என இருந்த திருவருட் பிரகாச வள்ளலார் , சென்னையை விட்டு வடலூர் வந்து அங்கிருந்து சிதம்பரம் நடராஜரே கதி என்றானார். அதுவரை வள்ளலார் உள்ளத்திலே இருந்த உருவங்கள் கரைந்தது ஒளியில். அருட்பெரும் ஜோதியாகிய ஆண்டவரை கண்டார். அவரும் ஒளியானார். ஜோதியிலே கலந்தார். கரைந்தார். இது தான் வளர்ச்சி.
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி” எனக் கண்ட திருஞான சம்பந்தர் தான், முடிவில் தான் மட்டும் ஜோதியில் கலக்காமல் தன் திருமணத்திற்கு வந்த அனைவரோடும் கூண்டோடு கைலாசம் ஆனார். அனைவரோடும் ஜோதியில் கலந்தார். எப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஞான நிலை. யாருக்கு கிட்டும் இப்பாக்கியம். இறுதியான உறுதியான பக்தியே, அதனால் வரும் தவமே ஞானம் பெற ஏதுவாகும். பக்தி இல்லாமல் ஞானம் இல்லை.
“உருவராகியும் அருவினராகியும் உருஅரு வினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரே யாம் என்றும் இயலும்ஐ வர்கள் என்றும்
எருவராய் உரைத் துழல்வதென உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே”
-6-ம் திருமுறை -திருவருட்பா
எல்லாம் வல்ல ஒரே கடவுளே – அருட்பெரும் ஜோதி ஆண்டவரே உருவமாகவும், அருவமாகவும் இருக்கிறார் என்றும் இதை அறியாதவர் , உணராதவரே இது தான் சிறந்தது, அது தான் சிறந்தது என்று கூறுவர் என்றும் மேல் கண்ட பாடலில் விளக்கி உள்ளார்.
பாமரனும் பக்தி செய்து ஞானம் பெற வழிகாட்டினார் சித்தர் பெருமக்கள். எவ்வளவு கருணை உள்ளம் நம் சித்தர்களுக்கு.
அது மட்டுமா, நான் தான் அதை செய்தேன் இதை செய்தேன் என அகங்கரிக்காமல் , தன் பெயரை மறைத்து ஆண்டவன் பெயர் சொல்லி , ஆண்டவன் உருவத்திலேயே இருந்து அருள் புரிந்து வருகிறார்கள் பர் பல ஊர் கோயில்களிலும்!!? திருப்பதியே கொங்கணர் , திருவண்ணாமலையே இடைக்காடர் இப்படி பல கோயில்களும் சித்தர்கள் உறையும் புண்ணிய தலங்களே. அருள் மழை பொழியும் அற்புத ஆலயங்களே. அதனால் தான் ஒளவையார் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று செந்தமிழில் செப்பினார்கள்.
கோயிலுக்கு போகாதே என்று யாரையும் தடுக்காதீர். “எம்மத நிலையிலும் நின் அருளே துலங்க கண்டேன்” என வள்ளலார் பாடுகின்றார். இதை முதலில் உணருங்கள். இதை உணர்ந்தவன் தான் சமரச சன்மார்க்கி .
முதலில் புறத்திலே ஆலயத்திலே கடவுளை தொழும் பாமர மனிதன், குருவருளால் தீட்சை பெற்று , சித்தர் அருளால் , ‘அ’ விலே லயம் கொண்டு தன் கடத்துள் உள்ளே கடவுளை காண்பான். சத்தியம். புறத்திலே ஆலயம் , அகத்திலே ‘அ’ விலே லயம். இது தான் கடவுள். உன்னுள் இருக்குமிடம் விதம் அறிந்து கொள். உணர்ந்து கொள். நீயும் வா. இறைவன் திருவடி நிழலிலே என்று நம்மையும் அழைக்கிறார்கள் ஞானிகள்.
இது தான் நமது பண்பாடு. கலாச்சாரம். ஞானம். வறட்டு வேதாந்தம் பேசாமல் அடிப்படையிலிருந்து வளரனும். குழந்தைக்கு முதலில் உருவத்தை காட்டி உண்மையாக ஒழுக்கமாக நடக்க கற்று கொடுங்கள்.
பய பக்தியே ஒழுக்கத்தின் அடையாளம். வளர , வளர உருவம் பெயர் புராணம், கற்றால் கேட்டால் உணர்ந்தால் தானே , அருவத்தில் தானே வந்து நிற்பான். இது தான் முறை என்றே ஆன்றோர்கள் வாழ்க்கை முறையை வகுத்து வைத்தார்கள். இதுவே இந்திய பண்பாடு. சனாதன தர்மம். மனிதன் மனிதனாக வாழும் வாழ்க்கை நெறி . இது மதமல்ல. மார்க்கமல்ல. எந்த ஜாதிக்கும் உரியதல்ல. உயர்ந்த ஞானம்.
உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. உலகுக்கு இறைவன் ஒருவரே. அவரை அடையும் வழியும் விழியாக வழி ஒன்று தான். விழித்திரு. விழிப்புணர்வோடு இரு. வாலையை பார்க்க விழியில் உணர்வோடு இரு. கன்னியாகுமரியில் சிலை வடிவாக துலங்குகிறாள். பால சௌந்தரி தியாக சௌந்தரி என இரு தோழியருடன் தனித்தே தவக் கோலம் கொண்ட வாலைக்குமரியாக ஆறு வயது குழந்தையாக காட்சி தருகிறாள். மூக்குத்தி ஒளி விச முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரையிலே. வா. வந்து பார். வரம் பெற்று செல். வாழ்வாய். மனம் அடங்க பணிவோம் மாதா – கன்னி – குமரியை.
வள்ளல் பெருமானின் உபதேசம் இது தான். எல்லா சன்மார்கியும் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டிய உபதேசம்:
“தியானம் செய்ய வேண்டுமாயின் ஏதாவது ஒரு உருவத்தை தியானிக்க வேண்டும். அருவமாக தியானிக்க கூடாது. பின் உருவம் கரைந்து அருவமாகும். துவைதமாக இருப்பது தானே அத்வைதமாகும்.”
“எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து கொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாகும்.”