திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்
இறைவனைப் பற்றிக் கூறுவதே பக்தி இலக்கியம். இறைவனை பற்றிட வழிகாட்டுவதே ஞான நூற்கள். தமிழில் ஞானத்திற்கு பஞ்சமேயில்லை. தமிழ் வாழ்வதே ஞானிகளால் தான். தேவார , திருவாசக, திருமந்திர , திவ்ய பிரபந்தங்கள் சித்தர் பாடல்கள் தமிழின் பொக்கிஷம். காப்பியங்களும் இலக்கண இலக்கியங்களும் கூட இறைவனை தவிர்க்க முடியாது. உண்மையை மறைக்க முடியுமா? மெய்யை – மெய்ப்பொருளை ஒருவன் அறியவில்லை என்றால் அவனுக்கு அறிவு இல்லை என்றே பொருள்.
ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் தூய தமிழில் பாடப்பட்ட , பக்தி சுவை சொட்டச் சொட்ட பாடப்பட்ட உன்னதமான ஞானத்தை விளக்கி பாடப்பட்ட , ஆழ்வார்களின் – இறைவன் அருளில் ஆழ்ந்து அமிழ்ந்து போனவர்களின் அனுபூதியே. கண்ணா என்றாலே , கண்ணனை நினைத்தாலே , கண்ணான கண்ணனை உணர்ந்தாலே ஞான ஊற்று பொங்கி பாயுமே. அனந்தனை – அனந்தசயணனை, பத்மநாபனை , கோவிந்தனை – மகாவிஷ்ணுவை ஸ்ரீராமனை எண்ணித்துதிப்பவர் சேர்வார் வைகுண்டம்.
இறைவனை சைவர்கள் சிவன் என்றனர். வைஷ்ணவர்கள் நாராயணன் என்கின்றனர். இறைவனை முழுமுதற் கடவுளாகவே சைவர்களும் , வைஷ்ணவர்களும், சாக்தர்களும் , கிறிஸ்துவர்களும் , இஸ்லாமியர்களும் , சீக்கியர்களும், ஜைனர்களும் , சௌரம் , காணாபத்யம், கௌமாரம் இன்னும் எல்லோரும் ஆளுக்கொரு பெயர் வைத்து கொண்டாடுகிறார்களே தவிர இவர்கள் எல்லோரும் ஒன்றைத்தான் – ஒளியைத்தான் போற்றி வணங்குகிறார்கள்.
வைஷ்ணவர்கள் எல்லோருக்கும் ஒரு படி மேல். கண் ஆகா இருக்கும் கடவுளை கண்ணன் என்றே போற்றி துதித்தனர். கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்குபவனை – கிருஷ்ணமணியே அவன் உடலாக உருவமாக நிறமாக கருதி வர்ணித்தனர் உண்மை உணர்ந்த ஞானிகள். இறைவனுக்கு வேறு பெயர் எதற்கு – கண் அவன் தானே. கண்ணன் – கண் + அவன். கண்ணாக இருப்பவனே பரமாத்மா. கண்ணே உண்மை . உன் மெய். உன் மெய்யாகிய உடலில் இருக்கும் உண்மையான பொருள் மெய்ப்பொருள்.
கண்ணா , கண்ணே என கதறாத ஞானியரே இல்லை. கண் பெற்ற நாம் பாக்கியசாலிகள் அல்லவா. கண் ஒரு உறுப்பு மட்டுமல்ல. , இதே ஊனக்கண்ணே ஞானக்கண்ணாகவும் மாறும் என்பதை அறிந்தவன் பாக்கியசாலி.
கண்ணே – திருவடி. கண்ணைத்தான் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் அந்த கண்ணனைத்தான் – இரு கண்களைத்தான் இறைவனின் திருவடிகளாக திருப்பாதங்களாக ஞானிகள் பரிபாசையாக கூறி அருளினார்.
ஆழ்வார்கள் ஒருவரான ஸ்ரீஆண்டாள் தாயார் அவர்கள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பாடல்களின் உண்மை ஞான விளக்கங்களை எங்கள் குருநாதர் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “பரம பதம்” என்ற புத்தகத்தில் இருந்து வெளியிடுகிறோம். முழுவதும் படியுங்கள்.
திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்
“மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ” – பாடல் 477
மார்கழி – மார் – கழி. நம் மார்பு கண். கண்ணில் மத்தியில் இருக்கும் மும்மலத்திரை கழிக்க வேண்டும். விலக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆண்டாள் ஞானக்குழந்தை சொல்வது என்ன ? நீராடி மகிழ வேண்டுமாம்!?
எம்பாவாய் – என் பாவை – என் கண்மணிப் பாவை. என் பாவையை – கண்மணியை எண்ணி தவம் செய்தால் கண்ணீர் பெருகி வரும். அந்தக் கண்ணீரில் நீராட வேண்டும். இது தான் மார்கழி நீராடல். நீங்களும் நீராடி கண்ணன் அருள் பெறலாம்.
“ஆவாவென் றாராய்ந்து அருளேயோ ரெம்பாவாய்” – பாடல் 481
ஆவாவென்றாராய்ந்து – “அ” – வா – என்று ஆராய்ந்து! அவாகிய எட்டை , எட்டெழுத்தானவனை கண்ணனை “வா” என்று அழைத்து அருள் பெற வேண்டும். எப்படி? தகுந்த ஆச்சாரியனை பணிந்து ஞான உபதேசம் , ஞான தீட்சை பெற்று ஞான தவம் செய்து நம் கண்ணன் அருளை நாம் பெறலாம். “அ” விலிருக்கும் கண்மணி ஒளியை “வா” காட்சி தா, அருள்தா என வெளிப்பட செய்து ஞானம் பெறலாம். கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்தால் கிட்டும் கண்ணன் அருள்.
“மணிக்கதவம் தாள் திறவாய்” – பாடல் 482
கண்மணி ஊசி துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மும்மலமே கதவு போல் பூட்டிக் கொண்டுள்ளது. அந்த மணியின் மத்தியிலுள்ள கதவு – திரை திறந்தாலல்லவா கண்ணன் காட்சி கிட்டும். எனவே உங்கள் மணிக்கதவு திறக்க ஒளியை பெருக்க தவம் செய்.
“நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்” – பாடல் 489
மணிக்கதவம் எப்போது திறக்கும்? அதற்கு முதலில் நாம் தயாராக வேண்டும். நீராடி பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை எண்ணி தவத்தை ஆரம்பிக்க வேண்டும். கண்ணை மூடி செய்வதல்ல தவம்?! நிலை கதவு – இங்கே இமைகள். மூடிக்கிடைக்கும் இமைகள் முதலில் திறக்கட்டும். பின் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட அந்த கண்ணீரில் நீராடி நம் வினை தீர மணிக்கதவம் திறக்கணும். தவம் செய்க. தவம் செய்க.
“செம்பொற் கழலடிச் செல்வா” – பாடல் 490
நாம் தவம் செய்யும் போது கண்கள் சிவந்து வெள்ளை விழி சிவப்பாகும். கண்ணாகிய திருவடிகளில் தோன்றும் ஒளி அந்தி மாலை சூரியனைப் போல தங்க ஜோதி போல காணும். இறைவனை செம்பொற் ஜோதி என்றே கூறினார். அந்த திருவடியே நமக்கு சகல செல்வங்களும் அருளும்.
“தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவர்” – பாடல் 504
தழல் உமிழ் சக்கரம் – நெருப்பை கக்குகின்ற சக்கராயுதம். நமது வலது கண்ணே சக்கரமாம். கண்ணில் மணியில் ஒளி – நெருப்பு உள்ளதல்லவா. தவம் செய்தால் ஒளி வெளியே வரும். அதைத்தான் தழல் உமிழ் என்றது. வலக்கையில் சக்கரம் கொண்ட வேங்கடவர். வலது கண் ஒளியை உமிழும். இடது கண் ஒலியை உமிழும். வலது கண் சக்கரம் இடது கண் சங்காகும். ஞானம்.
“வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புக என்னை” – பாடல் 506
ரொம்ப தெளிவாகவே இப்பாடல் கூறுகிறது. வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கில் – ஒளியில் புக நாம் தவம் மேற்கொள்ள வேண்டும். நம் வலது கண் விளக்கு தான் ஒளி தான் நாம் உள் புக வேண்டிய இடம். இடது கண் தான் வேங்கடவன் இருக்கும் இடம்.
“கண்ண புரநகர் வாமனன் என்கைப் பற்றித்
தன்னொடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே” – பாடல் 535
கண்ண புரநகர் – கண்ணாகிய நகரின் உள்ளே உள்ள ஒளியான வாமனன், சிறு ஜோதி. என் கைப்பற்றி – நமக்கு கை கண். அதுவே இறைவனின் கால் – திருவடி. நம் கைப்பற்றி தன்னொடும் – இறைவனோடு – கண்மணி ஒளியோடு ஞான தவம் நாம் நினைந்து உணர்ந்து நெகிழும் போது ஒளி தோன்றி நம்மை சேர்த்துக் கொள்ளும். இதைத்தான் நீ கூடிவிடு கோவிந்தனோடு என்கிறாள். கண்ணே – கண்ணபுரம் – உள் ஒளியே – கண்ணன். மனம் புறத்தே அலையாமல் அகத்தே கண்ணனோடு சேர வேண்டும். சேர்ந்தே இருக்க வேண்டும்.
“என்புரு கிஇன வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாது ஊழல் கின்றேன்” – பாடல் 548
வைகுந்தம் என்பதோர் தோணி. வைகுந்தம் கைலாயம் என்பது எல்லாம் தோணியே. சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதா? சம்பந்தப்படுத்தி பார்ப்பதே புத்திசாலித்தனம். யூகித்து சிந்தித்து பொருள் காண்பதே அறிவுள்ளவன் செயல். ஒரு ஞானி பாடலை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் , மற்றொரு ஞானி பாடலே உதவியாகும். ஒரு சித்தன் சொன்ன பரிபாஷை விளக்கம் இன்னொரு சித்தர் பாடலிலே வரும். ஏன்னெனில் எல்லா சித்தரும் எல்லாம் வல்ல ஒரே இறைவனைப் பற்றியே கூறுகின்றனர். இறைவன் இருக்கும் இடத்தை பற்றி விட்டதனால் தான் அவர்களால் கூற முடிந்தது.
“தோணி போல காணுமடா அந்த வீடு” என பாடுகிறார் ஒரு சித்தர். நம் உடலில் இறைவன் இருக்கும் இடம் தோணி போல இருக்கிறதாம்.எப்படி? நமது கண்கள் தானே தோணி போல இருக்கிறது. இப்போது பாருங்கள் வைகுந்தம் என்பதோர் தோணி! கண்ணே! வைஷ்ணவர்கள் வைகுந்தமென்பர். சைவர்கள் கைலாயம் என்பர். இரண்டுமே கண்ணையே குறிக்கும். கண்ணின் மணியில் ஒளியாகத்தானே கண்ணன் – சிவம் இருக்கிறது. வைகுந்ததில் கண்ணன் , கைலாயத்தில் சிவம் ஆக கண்ணில் தான் சிவனும் விஷ்ணுவும். அரியும் சிவனும் ஒண்ணு என அறியாதவன் வாயிலே மண். வாயிலே மண் செத்த போது தானே. செத்துப் போவான். ஒரே கடவுள் வெவ்வேறு வடிவத்தில் பெயரில் விளங்குகிறார் என அறிந்தவர்களே ஞானிகள்.
தோணி என்பது கண்ணையே குறிக்கும். பரிபாஷை. சீர்காழி ஊரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் திருநாமம் தோணியப்பர். தோணியிலே இருக்கும் அப்பன். கண்ணிலே மணி ஒளியான கடவுள்.
தோணியிலே ஏறி – கண்ணில் ஏறி மணி ஒளியை அடைந்தாலே, பிறவியாகிய பெரிய கடலை தாண்டி போவது என்றனர் ஞானியர். அந்த முயற்சியிலே ஊனுருகி , எலும்பும் உருகுமே. கண்கள் தூக்கமின்மை போன்ற உடல் துன்பங்களும் தாண்டி தான் நம் கண்மணியை வைகுந்தநாதனை அடைய முடியும்.
“பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்
பொருகயற் கண்ணினை துஞ்சா” – பாடல் 549
இறைவனை – செம்பொற் ஜோதியை – கண்ணனை அவன் பொன்னடியை – திருவடியை காணும் ஆசையால் இரவும் பகலும் விடாது , தூங்காமல் , உடம்பும் சோர்ந்து போகும்படி ஞானதவம் செய்ய வேண்டும்.
“தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்” – பாடல் 607
தீமுகத்து – நம் கண்மணியில் ஒளி. முகத்தில் முகத்துக்கு முகமான கண்ணில் தீ. படுக்கை நாகணை கண்மணி மத்தியிலுள்ள திரை நாகத்தின் விஷம் போல நம் மும்மலத்திரை. திருவரங்கர் – திருவாகிய ஒளி அரங்கத்தில் – உள்ளே இருக்கிறார்.
“கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப் புரளவோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே” – பாடல் 612
என் கை-கண். கைப்பொருள்கள் மும்மலத்திரை. ஞான தவத்தால் ஒளிபெருகி ஏற்கனவே இம்மும்மலத்திரையை கைக்கொண்டு விட்டார் இறைவன். கண்ணீர் பெருகி கால் வழிந்தோடிட கண்மணியில் திரு அரங்கத்திலே ஒளிர்கிறது செல்வம். எப்பொருளுக்கும் எட்டாதது, யாருக்கும் கிட்டாதவர். நான்கு வேத சொற் பொருள். எட்டாக – என் மெய்ப்பொருளாக என்னை ஆட்கொண்டு நின்றாரே. என் மெய்யிலே – உடலிலே உள்ள மெய்ப்பொருளாக அழியாப் பொருளாக உள்ளது ஒளியான இறைவன் மட்டுமே.
“கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே” – பாடல் 615
கண்ணிலே ஞாலம் இருப்பதை கோடித்து காட்டி, நம்மை கன்னியான ஜீவாத்மாவை சேர்த்துக் கொள்வான். நம் கை – கண்ணைப் பிடிப்பான் கண்ணன். அவன் ஜீவர்களாகிய பெண்களை ஆளும் பரமாத்மா. புருஷோத்தமன். அவன் இருப்பது நம் கண்ணாகிய அந்தரங்கத்திலே கண்மணி மத்தியில் உள்ளே ஒளியாக. அவன் உலகிலே இருக்கும் ஊர் பேரும் ஸ்ரீரங்கமே. அரங்கமே. அந்த அரங்கத்திலே கண்மணி உள்ளே இருப்பதால் அவன் பெயரும் அரங்கன். கண்ணாலம் செய்து ஞானம் அருள்வான்.
“செங்கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச்
சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா” – பாடல் 620
சிவப்புகச்சு கொண்டு கண்ணாடை ஆர்த்துச் – ஞானதவம் – கண்ணில் மணியை உணர்ந்து செய்கையில் கண் சிவந்து கண்ணில் சிவப்பு ஆடை போர்த்தியது போல காணும். சாதாரண மனிதரை காண நாணி பார்க்கமாட்டார்கள். தவம் செய்வோர் மற்றவரை ஏறிட்டு பார்க்க மாட்டார்கள். கொங்கை தலம் – நம் குவிந்திருக்கும் கண்ணே. தவம் செய்வோர் கண்மணியை எண்ணியே நினைத்தே பார்பர். கண்மணி ஊசிமுனை வாசலினுள் உள்ள ஒளியான கோவிந்தனுக்கு அல்லாது வேறு யாரும் வாசலில் போக முடியாது. ஒளி ஒன்றே உட்புகும்.
“கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்
பழகி கிடப் பேனை” – பாடல் 627
கண்ணன் என்னும் கருந்தெய்வம் – கண்மணி ஒளியான கண்ணன் – ஒளியான தெய்வம் தவம் புரிவோருக்கு அடிக்கடி காட்சி கொடுப்பதால் அதைப் பார்த்து பார்த்து பழகி அந்த ஆனந்தத்திலேயே மூழ்கி கிடப்பார்கள். கண்மணி கருப்பு ஆனதால் கருந்தெய்வம் என்றார். அந்த கருந்தெய்வம் தான் கண்ணன். நீலவண்ணன்.
“கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ
அவன் மார் வணிந்த வனமாலை” – பாடல் – 629
கடைக்கண் – கண் கடைசி – இரு கண்களும் உள்ளே போய் சேரும் கடைசி இடம் அதுவே கடைக்கண். அது சிறை கோலாம். கடைக்கண்ணால் பார்த்தல் நாம் அவன் அடியாராவோம். பக்தி சிறையில் அகப்படுவோம். நெஞ்சு என்பது கண். ஊடுருவ என்றால் கண்மணி வாசல் வழி உள் புகும் என்பதாம். அவன்மார் அணிந்த வனமாலை. இரண்டு நீள மாலை – நாடி உள்ளே ஒன்றாகும். அதையே வனமாலை உருவகிக்கப்பட்டது.
“கோவிந்தற்கோர் குற்றவல் இம்மைப் பிறவி
செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தான் என்” – பாடல் – 635
கோவிந்தன் – கண்ணபிரானுக்கு பிறந்த இப்பிறவியிலேயே தொண்டு செய்யாமல் இனி வேறு என்ன தவந்தான் செய்து என்ன பயன்?!
நம் கண்மணி ஒளியை பற்றி தவம் செய்தும், கண்ணனைப் பற்றி உலகுக்கு உரைத்து எல்லோரையும் அவன் அடியாராக்கிட வேண்டும். பிறந்த இப்பிறவியிலேயே செய்து விட வேண்டும். இப்பிறவி தப்பினால் இப்பிறவி வாய்க்குமோ! யாரறிவார். அதனால் இன்றே இக்கணமே ஒளிக்கண்ணனை பிடி.
ஞான தானம் செய்க. ஞான தவம் செய்க.