அவலத் தழுங்கள்
ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய்
உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம் பெருமான் உனை மறந்தேன்
அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே
மரமண்டை என்று திட்டுகிறோம்மல்லவா? மரம் போல் செயலற்று அறிவில்லாமல் இருப்பவன்! உண்மையறியாமல் எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்பவன்! முட்டாள் தான் வாதம் செய்வான்! அறிவுள்ளவன் அமைதியாயிருப்பான்! நிறைகுடம் தழும்பாதல்லவா? அன்பே இல்லாதவன் இவர்களை கண்டால் என் நெஞ்சம் நடுங்குமே என்கிறார் வள்ளலார்! இறைவனை மறந்ததால் இறைவனிடம் பாராட்டாததினால் இறையுணர்வு பெறாததினால் தான் துன்பமெலாம்! கண்மணி ஒளியே தியாக மணி. ஒற்றியூர் அரசரே தியாகேசர் சிவம்.
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பவள் அன்னை
என்பார்கள் அலவலியில்லா கொழுது நேர் சிறுகுழவிக்கும்
கொடுப்பாள் – பாடல் 4
அழுத பிள்ளைக்கு பால் உணவு கொடுப்பாள் தாய்! அழமுடியா சிறுபிள்ளைக்கும் பால் நினைந்து ஊட்டுவாள் தாய்! இது உலகில் உள்ள தாய் இயல்பு! இந்த உலகத்தையே படைத்த தாய் அதைவிட பெரிய தயாபரன் அல்லவா? பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உள்ளூறும் அமுதம் தருபவன். அவனே எவ்வுயிர்க்கும் தாய்!
காயம் என்பது ஆகாயம் என்றறியேன் – பாடல் 8
காயமாகிய நமது உடம்பு ஆகாயம் என்பதை அறியேன்! “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்பதை பார்க்க! அண்டத்தில் உள்ளது அனைத்தும் ஆகாயத்தில் பரவெளியில் உள்ளது! அதுபோலவே பிண்டமாகிய உடலும் பரவெளியே பரமாகிய ஒளியின் ஒரு சிறு துளி துலங்குவதால் இதுவும் ஆகாயமே! காயமும்-உடலும் ஆகாயமே. இதிலும் சூரியன் சந்திரன் கடல் எல்லாம் உள்ளதல்லவா? ஞான விளக்கம் என்பது இதுதான்.
கண்ணன் விசுவரூபம் எடுத்தார் பிரபஞ்சமே தெரிந்தது என பாரதம் கூறுகிறது! கண்ணன் வாயை திறந்தான் உலகமே தெரிந்தது என பாகவதம் கூறுகிறது. கண்ணன் – கண் அவன் – கண் ஒளியே கடவுள் நிலை! பிரபஞ்சமே அதனுள் தானே! எல்லாமாயும் எல்லாவற்றினுள்ளும் இருப்பவன் தான் இறைவன்!