நாளை யேகியே வணங்குவது மெனத்தினம்
நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ
உயர்திருத் தணிகேசன்
தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல்
தணந்திடல் தனையிந்த
வேளை யென்றறி வுற்றிலம் என் செய்வோம்
விளம்பரும் விடையோமே
ஒவ்வொரு நாளும் நாளைக்கு போய் இறைவனை வணங்கலாம்
என்று கூறியே நாள் பலவாக கழிக்கின்றோம்! இந்த உயிர் தாங்கிய உடல்
சில்லென குளிர்ந்து போகும் காலம் என்று? என யாரும் யாரும் அறிய
மாட்டோமே!
ஊளை நெஞ்சமே – ஊழ் – நாம் செய்த பற்பல பிறவிகளிலும்
செய்த கர்மவினையே ஊழ்வினை!
அது எங்கே இருக்கிறது? ஊளை நெஞ்சமே – நெஞ்சத்தில் இருக்கிறது. நெஞ்சுதான் அஞ்சும் சேர்ந்த கண்! கண்மணி மத்தியினுள் ஒளி உள்ளது. உள் உள்ள ஜோதியை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய மறைப்பே – ஜவ்வே – திரையே – ஊழ்!
ஊழ் அகல வேண்டுமாயின் உள்ஜோதி சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும்.
தணிகை ஈசன் – கண் மணி திருவடியை பற்றினால் – உள் உள்ள தீ பற்றி
எரிந்தால் ஊழ் இல்லாது மறைந்து விடும். தவம் செய்தால் கிட்டும் பலன்
இது!
விடையி லேறிய சிவ பரஞ் சுடருளே
விளங்கிய வொளிக் குன்றே – பாடல் 2
விடையிலேறிய சிவபரஞ்சுடர் – விடை – நந்தி நம் தீ – ஆத்ம ஜோதி
அதன் மேல் இருப்பதே அருட்பெருஞ்ஜோதியாகிய சிவம் – ஒளி – பேரொளி.
அந்த சிவஜோதிக்குள் உள்ள ஒளி மலையே தணிகை மலை – நம் கண்மலை
கண்மணி ஒளி.
ஊழும் நீக்குறும் தணிகையெம் மண்ணலே
உயர் திருவருட் டேனே – பாடல் 6
ஊழும் நீங்கும் – நாம் செய்த ஊழ் வினையாவும்
நம் தணிகையான கண்மணியுள் ஒளிரும் உயர்வான பெருஞ்சோதியின்
வடிவமே தேன் போன்று இன்பம் தரும் முத்தியின்பம் தரும் தெய்வமே
– உன்னை பற்றிட நீங்குமே!
நன்று நின்றிருச் சித்தமென் பாக்கியம்
நற்றிணிகை யிற் தேவே – பாடல் 8
தெய்வமே என் நல்ல தணிகையான கண்மணியில் துலங்கும்
ஜோதியே! எல்லாம் நல்லதாக நடக்கும் எப்படி? திருவடியே
சரணம் என்றிருந்தால்! இறை சித்தம் – இறைவன் ஆக்கினைப்படி
எல்லாம் சிறப்பாக நடக்கும் அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்
திருவடியே கதி என இருப்பதே பெருநிலை.
தணிகையங் கடவுளே சரவணபவ கோவே – பாடல் 9
நம் குற்றங்கள் வினைகள் யாவும் தணியும் இடம் இல்லாதது ஆகும் இடம்
நம் கண்மணி! அங்குள்ளே ஒளிர்விட்டு பிரகாசிப்பவன் முருகன். அவன் தான்
சரவண பவ தெய்வம்.
ச் + அ = ச
ர் + அ =ர
வ் + அ = வ
ண் + அ = ண
ப் + அ = ப
வ் + அ = வ
சரவண பவ ஆறு எழுத்திலும் மறைந்து நிற்பது ‘அ’ என்பதே.
இந்த அ தான் கண்ணினுள் மணிஒளி. எட்டு என்றதமிழ் எண்.
வலது கண் சரவண பவ தெய்வம் – அ. தெய்வம் , ஆறு – அ .
தெய்வம். ஆறுமுகம். ஒரு கண் 3 வட்டம் 2 கண் 6 வட்டம்.
இருகண்ணும் தான் ஆறுமுகம் எனப்பட்டது. இரு கண்ணும் காணும்
– ஆறுமுகங்காணும். சிவ ஜோதியின் முன் வருவது இந்த அகர ஜோதி
தவம் செய்வார் காணும் முதல் அனுபவம்.
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை