திருவடி பற்றி சுந்தரர் பெருமான்

பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில்  எழாம் திருமுறை சுந்தரர் பெருமானால் அருளப்பட்டது.

வன்தொண்டர் என்று போற்றப்படும் சுந்தரர் பெருமானை போற்றி “ஆளுடை நம்பிகள் அருண்மாலை” என்ற தலைப்பில் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் பாடி உள்ளார்கள்.

இறைவன் திருவடியான மெய்ப்பொருளான கண்ணை – கண்ணில் ஒளிரும் ஒளியை பற்றி சுந்தரர் பெருமான் தேவாரத்தில் பாடியுள்ள பாடல்களில் சிலவற்றை எங்கள் குரு நாதரின் தேவார விளக்க உரை நூல் “மூவர் உணர்ந்த முக்கண்” என்ற நூலிலிருந்து கொடுக்கிறோம்.

“கண்ணாய் ஏழுலகும் கருத்தாய் அருந்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே” – பாடல் 243

ஏழுலக உயிர்களுக்கெல்லாம் கண்ணாய் மணியாய் ஒளியானவன். அதில் கருத்தை வைத்து நினைப்பவர் ஞானத்தவம் செய்பவர் மோட்சம் பெறுவார். நம் வாழ்வில் அர்த்தமே கண்மணி ஒளியை உணர்வதில்லை தான் உள்ளது. தமிழ் வேதங்கள் இனிமையான பாடல்களால் ஞானிகள் நமக்கு தந்ததும் அதன் ஜீவனாய் மெய்ப்பொருளாய் துலங்குவதும் பரமாய பரஞ்சுடரே

“இமையோர் நாயகனே இறைவா என்னிடர்த் துணையே” – பாடல் 260

ஞான தவம் செய்வோர் கண் இமைக்காமல் விழித்திருப்பதால் அவர்களே இமையோர் – தேவர்கள். ஞானிகளின் நாயகனே. இறைவா , எனக்கு இடரான என் மும்மலத்திரை அகற்றும் என் துணையே.

“பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள் மனத்திடர் வாரமே
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீயன்றே ” – பாடல் 294

ஞானிகள் சித்தர்கள் பாடல்களைப் பாடும்போது தான் தமிழின் இனிமையை உணரலாம். பலத்தை சாப்பிட்டாலே அதன் சுவை தெரியும். பாட்டில் தமிழ் போல் , பழத்தின் சுவை போல் நம் கண்ணிடை மணியொப்பாய் – கண்மணி ஒளியாய் – துளங்குபவன் இறைவன். ஞான தவம் இயற்றும் அடியார் மனத்திலே எந்த துன்பமும் சலனமும் வராமல் காப்பான் விண்ணிடை குருகாவூர் வெள்ளடை கடவுள் நீயன்றோ!

“சிலைத்து நோக்கும் வெள்ளேறு செந்தழல்” – பாடல் 362

நாம் ஞான தவம் செய்யும் போது சிலை போல் இருக்க வேண்டும். ஆடாதீர் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் என வள்ளலாரும் கூறுகிறார். கல் சிலை போல் இருந்து கண்மணியை எண்ணி பார்த்து உணர்ந்து இருக்க வேண்டும். அப்போது வெள்ளை ஒளியும் அதன் மேல் செவ்வொளியும் காணும். இதைத் தான் வெள்ளை காளை மீது சிவன் அமர்ந்து இருந்தார் என்பதாம். அனுபவம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பெருமான் அவர்கள் , சிவன்பால் தீராக்காதல் கொண்ட தீவிர மெய்யடியார்கள் அனைவருக்கும் அடியேன் என தன்னை, அடியார்க்கும் அடியார் எனக்கூறி பாடியருள்கிறார். நாமனைவரும் இங்ஙனம் ஞானிகளை சித்தர்களை முனிவர்களை இறைஅடியார்களை போற்றி வணங்கி வாழ்ந்தால் நன்மைகள் பயக்கும். நாதன் திருவடி பேறு கிட்டும். மரணமிலா பெருவாழ்வில் வாழலாம். இறைவனையே தோழராக பெற்ற வன்தொண்டர் , தம்புரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரே எல்லா அடியார்களையும் போற்றி வணங்கினாரென்றால் மெய்யடியார் மகிமையை என்னவென்று சொல்வது. பாடுங்கள் பணியுங்கள் நாமும் கடைத்தேறலாம்.

“மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே ” – பாடல் 531

உண்மையாகவே , என் மெய்யாகிய உடலிலே வந்து என்னை , என் உயிராக என்னுள் இருந்து ஆண்டுகொண்டிருப்பவனே , உண்மையானவனே , என்றும் இருப்பவனே , அழிவில்லாது எங்கும் எப்போதும் துலங்கும் ஜோதியே, தங்க ஜோதியே , உண்மையை குரு மூலம் உணர்ந்த மெய்யர்களுக்கு சத்தியமான , நேர்மையானவர்களுக்கு அவர்கள் உடம்பில் மெய்யில் – கடத்தில் கண்களாக மெய்ப்பொருளாக துலங்குகிறான் இறைவன். அவனே நம்மை ஆண்டு கொண்டு இருப்பவன். நம் கடத்தினுள் இருப்பவன். நம் முக்கண்ணாக துலங்குபவன். உன் முக்கண்ணை அறி! உணர! விழி! விழித்திரு முக்கண்ணனை காணலாம். உன்னுள்ளும் இருக்கிறான்.

“தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்” – பாடல் 532

நம் சிர நாடு உள் , சிவனே நம் சீவனாக ஒளியாக விளங்குகிறார். அந்த ஒளியுள்ள விளக்கு தூண்டாதே என்றும் துலங்கும் ஜோதி. நம் கண்மணி ஜோதியை பற்றி தவம் செய்து உட்புகுந்து சிர நடு உள் விளங்கும் தூண்டாமணி விளக்கை தூண்டுவதே ஞான தவம்.
ஒளியால் விழி ஒளியால் உள் ஒளியை தூண்ட தூண்ட சிரஸிலுள்ள ஒளி உடல் முழுவதும் வியாபிக்கும். ஊன உடலே ஒளி உடலாகும். ஒளி பெருகினால் மும்மலத்திரை மாயும். ஞானம் பிறக்கும். இங்ஙனம் ஞானத்தவம் செய்வோர் , இறைவன் திருவடியை தொழுவோர் துயரெல்லாம் தீர்த்து அருள்வான் அந்த சிவனே.

“மெய்யினை மெய்யின் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக்குக் கெல்லாம் பொய்யனை” – பாடல் 591

மெய்யன் – இறைவன் – ஒளி ஒன்றே மெய். மற்றது எல்லாம் பொய் – மாயை – மாறுவது. மாறுதலுக்கு உட்பட்டது. இறைவனாகிய ஒளி ஒன்று தான் ஆதி நீதி என்றும் உள்ளது. மாறாதது உண்மை சத்தியம். நம் மெய்யினுள் நின்றதால் மெய்யன். நம் மெய்யாகிய உடலினுள் இருக்கும் மெய்யனை ஒளியை சிவத்தை கண்டு உணர்பவர்களே மெய்யர்கள். மெய்யடியார்கள். உலகிலே பொய்யில் புரட்டிலே மூழ்கி திளைப்பவர்கள் காண முடியாது. இறைவனை உணரவும் மாட்டார்கள். பாவிகளான அவர்கள் கண்களை மும்மலத்திரை மறைப்பதால் கடவுள் இல்லை என்பான். நாத்திகம் பேசுவான். நம்பினவர்க்கு அருள் புரியவருவான் நடராஜன். நம்பாத பேர்களுக்கு உயிரை எடுக்க வருவான் எமதர்மராஜன். இது தான் உண்மை. சத்தியம். நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு. நல்லவர்க்கு ஆண்டவனே காப்பு.

“உணர்வுபெற் றேன் உய்யுங் காரணந் தன்னால் ” – பாடல் 595

உணர்வு பெற்றேன்! என் கண்மணியில் உணர்வு பெற்றேன். அருளினான் சிவன். நான் உய்ய வேண்டும் அல்லவா!? அதனால் தான் உணர்வின் மூர்த்தியான சிவம் தன்னை உணர எனக்கு உணர்வு தந்தார்.

நீயும் உய்ய வேண்டுமானால் கண்ணில் மணியில் உணர்வு பெறு. தக்க ஆச்சாரியன் மூலமாக. உணர்வு பெற்று தவம் செய். உணர்வு பெருகி ஒளி பெருகி உட்புகுந்து சிவத்தோடு சேர முக்தியின்பம் கிட்டும். உணர்வின் மூர்த்தி வழி காட்டுவார்.

“கண்ணின்ஒளி கனகக்சுனை வயிரம் மவை சொரிய” – பாடல் 798

ஞானத்தவம் செய்யச் செய்யச் நம் கண் ஒளி நம்முன் தங்கநீர் சுனையில் வைரம் சொரிந்தது போல தங்கஜோதியும் வெள்ளை ஒளியும் காணும் என்பதாம்.

“ஊனை உற்றுயி ராயினீர் ஒளி மூன்றுமாய்” – பாடல் 894

நம் ஊன் உடலை விட்டு நீங்கா உள் ஒளியானவர், நம் உயிராக உடலோடு இருப்பவர்.இருக்கண்ணிலும் , உயிராகவும் ஆக மூன்று ஒளியாக மூன்று கண்ணாக திகழ்கிறார் அந்த முக்கண்ணன்.

“படலமென் கண் மறைப்பித்தாய்
உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே” – பாடல் 902

தெளிவாக அழகாக கூறிவிட்டார் சுந்தரமூர்த்தி நாயனார். நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்து கொண்டு ஒரு மெல்லிய திரை படலம் உள்ளது. அது தான் மும்மலத்திரை. அது மறைத்தாலே ஒளி உள் போகும்.ஞானம் பெறலாம். இறைவன் நம் தலை நடுவே உள்ளிருந்து நமக்கு உணர்த்துகிறான்.நான் உள்ளே இருக்கிறேன் வெளியே போகாதே நோக்காதே என்று தக்கலை பீர் முகமதுவும் கண் படலம் பற்றி கூறுகிறார்.

“இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்
உடையுடையான் எனையுடையான் உளோம் போகீர் என்றானே” — பாடல் 903

இடையறியேன் – இடையிலே – கண்மணி நடுவிலே உள்ளே அதன் இடையிலே உள்ள மும்மலத்திரை ! தலை – நம்தலை நடுஉள் ஒளி. போக அடைய அவன் திருவடியாகிய கண்ணே சரணமென்பேன். உடையாக சிவனுக்கு உள்ளது நம் மும்மலத்திரையே. சிவனே சீவனான எனை உடையவன்.உள்ளே உள்ளோம் உள்ளே வருக என்றழைக்கிறார் சிவன். வெளியே போகாதீர் என்றான்.

“கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமானார் உளோம் போகீர்” – பாடல் 907

சிவமே நம் கண்மணி ஒளியாகி உள் நிற்க கண்மணி முன்னே மும்மலத்திரையால் மறைப்பித்தாய் உன்னை? நீ இங்கிருப்பது எனக்கு தெரியாதே. உன்னை எண்ணி ஞானத்தவம் செய்து திரை மறைப்பு நீங்கினாலே சிவனை காணலாம். ஞான தவம் செய். ஞான தானம் செய்.

“நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டாரைவர் காக்கிலும் ” – பாடல் 978

ஞானத்தவம் செய்து, இறைவா நீ கோயில் கொண்டிருக்கும் என் கண்மணியான உன்னையே நோக்குவேன். கண்டுகொண்ட இடம் கண். அங்கே ஐம்பூதமும் உள்ளது. அவைகள் காப்பதை விட உன்னை – கண்மணி ஜோதியான சிவத்தை – நோக்க காக்கின்றாய் என்னை எப்போதும். உன்னை நோக்காது வேறு நல்லன எதுவும் இல்லை. வேறெதையும் நோக்காதும் என் புத்தி தடுமாறாமலும் என்னை காக்கின்றாய். புலன் வழி மனம் போகாமல் கண் ஒளி காட்டி உன்னையே நோக்க வைத்து என்னை நீ காக்கின்றாய். உன்னையே நீ உற்றுப்பார்.

Share

Leave a comment