திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது.
திருநாவுக்கரசரை போற்றி “ஆளுடைய அரசு அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.
இறைவன் திருவடியான மெய்ப்பொருளான கண்ணை – கண்ணில் ஒளிரும் ஒளியை பற்றி திருநாவுக்கரசர் பெருமான் தேவாரத்தில் பாடியுள்ள பாடல்களில் சிலவற்றை எங்கள் குரு நாதரின் தேவார விளக்க உரை நூல் “மூவர் உணர்ந்த முக்கண்” என்ற நூலிலிருந்து கொடுக்கிறோம்.
“கண்டே னவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்” – பாடல் 21
கண்டேன் இறைவன் திருப்பாதம். அது நம் கண்களே. நம் கண்களே இறைவன் திருவடி. மெய்ப்பொருள். நம் கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி உணர்ந்து சும்மா இருந்தால் காணலாம் நம் கண்களையே இறைவன் திருவடியையே. பின்னர் இதுவரை நாம் கண்டு அறியாத அற்புத காட்சியெல்லாம் காணலாம்.
“என்கண் பொருந்தும் போதத்துங் கைவிட நான் கடவேனோ” – பாடல் 118
இறைவன் என்கண் பொருந்தி – என் கண்மணி ஒளியாகி துலங்குகிறான் என்பதை அறிந்து ஞான தவம் செய்து எப்போதும் உணர்வோடு , போதத்தோடு இருப்பனேயல்லாது போதமில்லாமல் போவேனோ?
“கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணான யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேன்” – பாடல் 130
இறைவன் நமது கண்ணாக உள்ளான். கண்மணியின் மத்தியில் உள்ளே ஒளியாக உள்ளான். நம் கண்ணிலே கருத்தை வைத்து தவம் செய்க. நம் வாழ்வுக்கே அர்த்தமானவன் இறைவன் என்று அறி. எண்ணான எட்டிரண்டு ஆனவன். எழுத்தான அகார உகாரமானவன். எண்ணும் எழுத்துமாய் ஒன்றாய் மகாரமானவன் ஓம்கார பொருளானவன். ஆகாயமானாய். நம் கண்மணி உள்ளே மும்மலத்திரையானா முப்புரம் எரித்தவன். வேதநாயகன் வேதியன். எல்லோருக்கும் அண்ணன். மூத்தவன். ஆதியான அவன் குடிகொண்ட திருவையாறு சென்று, அவனுக்குள்ளாகி உய்ந்தேனே.
“சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான்” – பாடல் 261
இறைவன் ஜோதியானவன். அவன் அருட்பெரும்ஜோதி. ஒரு சிறு சுடரே நம் கண்மணியில் துலங்குகிறது. அதுவே உந்தன் தூய மலர்ப்பாதம். இதை – அவரவர் கண்னே இறைவன் திருவடி. திருவடியை காண்பான் கடவுளை அடைவான்.
கண்ணிடை மணியார் போலுங் கடவூர்வீ ரட்டனாரே – பாடல் 306
கண்ணிடையே கண்மணி துலக்குவது போல , அந்த கண்மணி ஊரை கடந்து போனால் உள்ளே இருக்கும் வீரட்டனாரை காணலாம்.
“கண்ணினார் கண்ணினுள்ளே ஜோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காடனாரே” – பாடல் 328
கண்ணின் உள்ளே கண்மணியின் உள்ளே ஜோதியாய் நின்ற எந்தையே கண்ணினார் ஆவார். மண்ணினார் மனிதர்களாகிய நாம் மண்ணுலகில் தானே இருக்கிறோம். இட வளமாய் சுற்றி வந்து தானே ஈசனை வணங்குவோம். சுருக்கமாக வலம் வருதல் என்போம். நாமும் நம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்தால் இடக்கலை வலக்கலை ஏகி அது உள்ளே அக்னிகலைக்கு போகும். அங்கே மாமறைகாடனார். யாராலும் எளிதில் போக முடியாது. அடர்ந்த காட்டினுள்ளே மிகப்பெரிய மறைவாக உள்ளே இருக்கிறார் எந்தை ஈசன்.
“கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார்” – பாடல் 347
கண்ணினார் – கண்மணி ஒளியானவர் – கடவுள். கண்ணின் மிக்க நுதலினார். கண்ணை விட , உள் உள்ள, கண்ணில் மிகுந்துள்ள ஒளியானவனே. கண்ணில் ஒளி இருந்தாலே கண். இல்லையேல் அது புண். கண்ணில் கலந்திருப்பவனே கடவுள்.
“பக்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முக்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்” – பாடல் 380
கண்மணி ஒளியான கண்ணுதலானை கண்டு தொழும் பக்தர்கட்க்கு அருள் புரிவான் ஈசன். ஈசனாகும் பக்தரை வெள்ளொளிமேல் யேறி உட்புக வைப்பார். தவத்தால் சித்தம் ஒன்றி போகும். தடுமாறாமல் சிவம் ஒன்றையே நினைக்க நிலைக்க வைப்பார். முத்தீயை முற்ற – மேலும் மேலும் ஓங்கி வளர அருள்புரிவார். இதற்காக ஒரு ஆத்ம சாதகன் ஞான தவம் செய்வோன் ஒழுக்க சீலனாய் பஞ்ச மா பாதகங்கள் புரியாதவனாய் அன்பே நிறைந்தவனாய் இருக்க வேண்டும். நெறி பிறழாதவனாய் வாழ வேண்டும். நேர்மையாய் சத்தியமாய் நெறியாய் ஒழுக்கமாய் வாழும் ஞான தவம் செய்வோரே பெறுவர் இறைவனருளே.
“மெய்யுள்ளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி உகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே” பாடல் – 526
திருநாவுககரசர் பெருமான் நாம் உய்ய வேண்டி ஞானம் பெற வேண்டி இறைவனை அடைய வேண்டி ஞான தவம் எப்படி செய்வது என ஒரு உபாயம் வழி கூறுகிறார். எப்படி? மெய்யுள்ளே விளக்கை ஏற்றி , நம் உடலே மெய். இதில் கண்ணில் மணியாகி ஒளியாகி துலங்குகிறான் என்பதே மெய். இந்த மெய்யான உடலிலே மெய்யான கண்மணி ஒளியே மெய்ப்பொருளாம். இதுவே இறைவன் திருவடி என்கின்றனர் ஞானிகள். ஏற்கனவே நம் கண்ணில் தான் விளக்கு எரிகிறதே பின் எப்படி ஏற்றுவது? இது தான் மிகப்பெரிய ஞான இரகசியம். நம் கண்மணி மத்தியில் ஊசி முனைத் துவாரம் உள்ளே தான் , மெல்லிய , நம் மும்மலமாகிய ஜவ்வினுள்ளே தான் ஒளி துலங்குகிறது. ஆக மறைவாக உள்ளது ஒளி. ஞானசற்குரு மூலம் , தீட்சை மூலம் , அந்த ஒளி , குருவின் அட்சத்திலிருக்கும் தீயால் தொடப்படும். அட்சமாகிய கண் ஒளியால் குரு, சீடன் அட்சதீயை தொடுவதே தூண்டுவதே தீட்சை. தீ + அட்சம்!! இப்படி குருவின் ஞானோபதேசம் ஞானதீட்சை மூலம் நம் மெய்யுள்ளே விளக்கை ஏற்றி! வேண்டளவு உயரத்தூண்டி , குரு மூலம் கண்ணில் உணர்வு பெற்று ஞானத்தவம் செய்வதே , கண்ணில் உணர்வு பெருக பெருக ஒளி தூண்டப்படும். அதனால் ஒளி பெருகி உள்போகும். இது தான் ஞான சாதனை. உள்ளே மூன்றாவது கண்ணான மூன்றாவது ஜோதியான நம் தலை நடு உள்ளே உள்ள அக்னி கலையை பெருகச் செய்யும். இதுவே , முச்சுடரும் ஒன்றான நிலை பெற்றாலே நமக்கு உய்வு. ஞானம். மோட்சம். இறைவனடி சேரலாம்.
இந்த உபாயம் , வழிமுறை , ஞானம் பெற விழி என சொல்லி தருவது , முக்கண்ணனை உணர உன் முக்கண் ஒளியை பெருகச் செய்ய , கண்ணை திறந்து விழி விழி என விழித்திருக்க தீட்சை மூலம் உணர்வு ஊட்டுவதே உபாயமாம். அருள்வது ஞான சற்குருவாம். இதை அறிந்தவன் மட்டுமே ஞான சற்குரு. அவனே உய்வான். குரு உபதேசம் பெறாதவன் வாழ்க்கை முழுமை அடையாது. ஞானம் கிட்டாது. மாத பிதாவை பெற்றவன் எவனும் குருவை பெறாவிடின் கடவுளை அறிய மாட்டான். ஞானம் பெற முடியாது.
ஞானஉபதேசம் பெறாதவன் தன் புலன்கள் வழி மனம் போன போக்கில் போவான். உருப்படவே மாட்டான். உலகிலே மாயையிலே சிக்கி மன்னாவான். மீண்டும் மீண்டும் வினைகளை செய்து பாழ் நரகிலே வீழ்வான். அத்தனைக்கும் ஆசைப்பட்டு காமம் மிகுந்து கெட்டு சீரழிவான். ஒருக்காலும் உண்மை அறிய மாட்டான்.
ஐவரை அகத்தே வைத்தீர். தீயாக இருக்கிறார் அகத்தே என்பதை உணராதவரை ஞானம் இல்லை. மூவாசையை விட்டாலே முக்தி. ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் என்கிறார் திருமந்திரத்திலே திருமூலர்.
“ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலகமூர்த்தி” –பாடல் 732
உணர்வு பெருகி தான் ஊத்தை – மும்மலத்தை கழிக்க முடியும். ஞான சற்குரு தீட்சை மூலமே உணர்வு கிட்டும். பின் ஞான தவம் மூலமே உணர்வு பெருகும். உலக மூர்த்தி தான் உணர்வின் மூர்த்தி.
“தம்மையும் நோக்கிக் கண்டு
செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மண்றே ” – பாடல் 737
இரு கண்மணி ஒளி மூலம் உணர்ந்து உள்ளே விழித்து நோக்கி ஞான தவம் செய்தால் காணலாம் நம்மை. நம் ஜீவனை – சிவனை. கண்டு அந்த செம்மையான ஒளியிலேயே நிலைத்து நின்றால் நம் சீவனாகி நின்ற சிவனை காணலாம். சிவகதி வீடு பேறு மோட்சம் கிட்டும். ஞானியாவான்.
“கண்ணு ளானைகண் டீர்கட வூரரே” – பாடல் 1443
கண்ணில் மணியில் உள்ளவனை காணவேண்டிய ஊர் நம் உடலாகிய கடவூரே! கடவூரில் கண்ணில் காணலாம் கடவுளை.
“கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே” – பாடல் 1513
இறைவன் கண்ணில் பாவையாக அதனுள் ஒளியானவன். நான் தான் அவன். அவன் – சிவன். சிவன் தான் என் சீவனாக உள்ளே நம் தலை உள்ளே நடுவில் ஒளியாக துலங்குகிறான். காணுங்கள். கண்ணால் தானே காணமுடியும். பாவையை – கண்ணில் பாவை பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவை என்று பாடி உருகினார். ஆண்டாள் திருப்பாவை என்று பாடி உருகினார். பாவையை பாடாத ஞானிகளே இல்லை. உன் கண்ணில் பாவையன்றோ இறைவன். உன் கண்ணை பார். உன்னை அறி.
“தன் பக்தர்க்குக் கண்காட்டிக் கண்ணில் நின்ற மணியொக்கும்” – பாடல் 1558
ஞான தவம் செய்யும் பக்தர்கட்கு ஆன்ம சாதகர்களுக்கு இறைவன் அவர் அவர் கண்ணை காட்டி கண்ணில் மணியாக இருக்கிறேன் என்று உணர்த்துவார்.
“கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான் காண்” – பாடல் 2167
கரியுருவான கண்டத்தில் கண்ணில் உள்ளான் காண.
“கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே” – பாடல் 2171
கண்ணார்க் காண்பவர்களுக்கு ஓர் காட்சியானவனும் சிவனே. அவனே. காளத்தியில் கோயில் கொண்டு உள்ளான். அவன் என் கண்ணில் மணியில் ஒளியாகவல்லவா இருக்கின்றான். உணருங்கள்.
“ஒருகா லு மையாளோர் பாக னுமாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம்” – பாடல் 2233
இருகாலில் – இரு திருவடிகளில் வலது பாகம் சிவன் இடது பாகம் உமை. இடது கால் சக்தியுடையது. நமக்கு கருவானவன் சீவன் சிவன். அவன் உலகுக்கு முன்பாகவே நம் உடலில் முன்பாக கண்ணாகவே தோன்றுகிறான். அவனே கரு. குரு. அருவுருவான ஜோதி.
“நெற்றி மேல் கண் தோன்றும்” – பாடல் 2271
தவம் மேலிட்டால் இரு கண்ணும் ஒளி மிகுந்து உட்புகுந்து தலை நடு உள் விளங்கும் சீவன் சிவனாகி பிரகாசிக்கும். தவம் மேலும் மேலும் சிறக்க , தலை நடு உள் விளங்கும் அக்னி , சிவனை போல நம் நெற்றியிலும் , வெளியிலும் மூன்றாவது கண்ணாக துலங்கும். சித்தர்களும் , ஞானிகளும் நெற்றி கண் பெற்றவர்களே. மூவர் உணர்ந்த – முக்கண் உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் நம் நாட்டில் ஏராளம்.
“கள்ள விழி விழிப்பார் காணா” – பாடல் 2439
கள்ள மனம் கொண்டவர் , வஞ்ச மனம் கொண்டவர், காம மனம் கொண்டவர் , இப்படி கேடு கேட்ட மனிதர் மனம் கள்ளத்தனம் உள்ள மனம் அவன் கண்ணிலே தெரியும். அகத்தின் அழகு முகத்திலே. ஒருவனுடைய கண் அவன் நல்லவனா கெட்டவனா என்றும் என்ன நினைக்கின்றான் என்றும் காட்டி கொடுத்து விடும். இப்படி கள்ள விழி திருட்டு முழி உடையோர் சலன கண்ணுடையோர் கடவுளை காண முடியாது.
கடவுளை காண வேண்டுமானால் கண் அசையாது விழி இமைக்காது விழித்திரு. ஆடாமல் அசையாமலிரு. சும்மா இரு. காணலாம் கண்ணிலே கடவுளை. கருணையை.
“ஒரு மணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதையத்தி னுச்சியை” – பாடல் 2547
கண்மணியே இதுவே உலகுக்கு உறுதியாம். ஏன் சிவமே சீவனாகி ஒளியாக துலங்குவதால் தான். எங்கே உதயமாகிறதோ சூரிய சந்திரன் அதன் உச்சி. வலது கண்ணிலே சூரியன் உதயம் அதன் உச்சி என்பது கண்மணி மதி அங்கே ஒளியாக துலங்குகிறது சிவம். அது போலவே இடது கண்ணிலே சந்திரோதயம் அதன் உச்சி கண்மணி மத்தி ஒளியாக துலங்குகிறது சக்தி சிவத்தின் பாதி. அறியுங்கள் உறுதி கிட்டும். ஞானம்.
“கண்ணவன் கான் கண்ணொளி சேர் காட்சி யான்காண்” – பாடல் 2605
இறைவன் – நம் கண்ணவன் – கண்மணி ஒளி. அவனை ஞான தவம் செய்து காண்க. ஞான தவத்தால் கண்மணி ஒளி பெருகி காணாத காட்சியெல்லாம் காணலாம் காண்க.
“பாரில் வாழ் உயிர்கட் கெல்லாங் கண்ணவனே” – பாடல் 2691
இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் கண்ணாய் அதன் உள் ஒளியாய் துலங்குபவன் இறைவனே.
“கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானை
குருமணியை அருமணியை அடைந்தவர்கட் கமுதொப்பானை திருமணியை” – பாடல் 2768
நம் கண்ணின் கருமணி தங்கமலை போன்றது. தங்க ஜோதி உள்ளது. அதுவே குருமணியாம். திருமணியாம். அந்த அருமையான மணியை அடைந்தவர் அமுதம் சாப்பிடுவார்.
திருச்சிற்றம்பலம்.