திருஅருட்பா முதல் திருமுறை

குறை நேர்ந்த பத்து

வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு
வள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா
திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவி யேன் யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

வானாகி நின்ற ஒளியில் பிறந்த நம் கண்மணி ஒளி கண்டு
இறைவனை பற்றி யார்க்கும் கூறாமல் இருப்பது மாபெரும் குற்றம்
இறைவனைக் பற்றி கூறாமல் பெண்ணாசை கொண்டு திரிகின்றோம்
அதனால் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறோம். இந்த உடலை வளர்க்க
பலபாவமும் செய்து வாழ்கிறோம். இப்படி உடல்பசி உள்ளப்பசி
கொண்டு உள்ளம் தடுமாறி அலையும் மனிதா! நான் ஏன் பிறந்தேன்
என்று சிந்திப்பாயாக!

மேருவில்லான் தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே – பாடல் 4

சிவன் மேருமலையை வில்லாக கொண்ட வனல்லவா  அவன் மகன் முருகன் தான் தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளி, அதாவது நம் கண்மணியிலுள்ள – நம் உடலிலுள்ள நமக்கு ஞானம் தரக்கூடிய ஒளி.

பாவியேன் உடற்சுமையை பலரும் கூடி இடுகாட்டில்
வைக்குங்கால் என்செய்வேன் – பாடல் 6
நாம் தணிகை மலையான நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால்
மரணம் இல்லை. இல்லையேல் உயிர் பிரியும். ஊரெலாங்கூடி பிணமென்று
பெயரிட்டு சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ கொண்டு சேர்ப்பார். இது தேவையா?
இதற்கா பிறந்தோம்? பிறந்தது சாகவா? சிந்தியுங்கள். சாகாதிருக்க வழி
தணிகை மலையை சார்வதே!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

What do you think?