ஞான பதிவுகள்

ஞான உபதேசம்

இறைவன் யார்? பரம்பொருள் – பரஞ்ஜோதி  – அருட்பெருஞ்சோதி – எங்கும் நிறைந்தவன் – எல்லாம் வல்லவன் – ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் !

எங்கும் துலங்கும் ஒளியான அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவன் நம் உடலில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன?! எங்கும் இருப்பது போல் மனித உடலிலும் அந்த பேரொளியான இறைவன் சிற்றொளியாகவே நம் உயிராகவே நின்றிலங்குகிறார்! இது சத்தியம்!உண்மை!  முதலில் இதை ஒருவன் அறியனும், நம்பணும் , உணரணும்! அவனே சம்சார சாகரத்தில் இருந்து காப்பாற்ற படுவான்! வேறு யார்? கடவுள் தானைய்யா காப்பாற்றுவார்!

கடவுள் யார்? குருதான்! “குரு பிரம்மா குரு விஷ்னு  குரு மகேஸ்வரா குரு சாத் சாத் பரப்பிரம்மா ! இதற்க்கு மேல் விளக்கம் வேணுமா? குருவே சாட்சத் பரப்பிரம்மாம்?! குருவே தெய்வமாம்! தெய்வத்தை அடைந்தவர் தானே நமக்கு தெய்வத்தை காட்ட முடியும்?! பின் என்ன செத்து போனவனா இறைவனை காப்பற்ற முடியும்? சற்றாவது சிந்திக்க மாட்டிர்களா?

நீ யார்? அந்த பேரொளியின் அம்சமான சின்ன ஒளி! அது தான் உன் உயிர்!  நீ ஒரு ஜீவான்மா? எங்கே இருக்கிறது உன் உயிர்? அறியவேண்டாமா? நமக்கு உடல் தந்தது கண் கண்ட தெய்வமான தாயும் தந்தையும்! நமக்கு உயிரை  தந்தது கண்ணிலே கண்ட ஒளியான தெய்வமே என்று அறிவது தான் ஞானம்!  ஒவ்வொரு தாயின் கருவிலும் முதலில் பிண்ட உற்பத்தியே!  மூன்று மாதங்களுக்கு பின்னரே இறைவனால் உயிரால் வளர்கிறது சிசு! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளக்கிறான் இறைவன்! சரியாக  270 நாட்கள் 1 மாதம் 27 நட்சத்திரங்களான 27 நாளே ஆக 10 மாதம் 270 நாட்களே! இதுவே வைத்தியர்கள் சித்தர்கள் கணக்கு! முடிந்ததும் கன்னிக்குடம் உடையும் குழந்தை பிறக்கும்! உயிர் எதன் வழி போய் எங்கு இருக்கும் உடலில்? உச்சி வழியே போய், உச்சிக்கு கீழே  அண்ணாக்குக்கு மேல நம் தலை மத்தியில் இருக்கிறது! பிறந்த குழந்தையின் உச்சி மிக மிக மென்மையாக இருப்பதை காணலாம்!

நம் உடல் நம் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குதான்! சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!
எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்! மறுக்க முடியாத உண்மை!  அவரவர் கையால் அவரவர் எட்டு ஜாண் தான்! “எண்சாண்  உடலுக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை !

நம்  உடலில் சிரசு – தலை தான் முக்கியம் அங்கே தான் , மத்தியில் தான் இறைவன் நம் உயிரை பத்திரமாக வைத்துள்ளான் . சிரசை ஏன் முக்கியம் என்கிறார்கள் ? நாம் வாழ்வதே பஞ்சேந்திரியங்களால் தானே ! மெய் வாய் கண் மூக்கு செவி , இவைகள் செயல்பட்டுத்தானே நாம் வாழ்கிறோம் ! கழுத்துக்கு கீழே கர்மேந்திரியமே ! ழுத்துக்குமேலே , தலையே ஞானேந்திரியமான மெய் வாய் கண் மூக்கு செவி உள்ள கேந்திரமாம் !

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது , கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது , ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது , தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி ! எக்குறையும்மின்றி நாம் பிறந்தால் மற்றும் போதாது ! ஞானக் கல்வி சாகாக்கல்வி கற்க வேண்டும் ! தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கணை திறக்கப்பெற்றுக்கொள்வது நலம் என வள்ளலார் கூறுகிறார் . மாத பிதாவை பெற்ற மனிதன் குருவை பெட்டராகவேண்டும் இல்லையேல் மரணம்தான் ! குருவை பெற்றவனே தீட்சை பெறுவான் தவம் செய்வான் ஞானம் பெறுவான் தெய்வத்தைக் காண்பான் ! ஆக தலையே , பஞ்சேந்திரியமும் தலையிலேயே
இருப்பதால் இதுதான் பிரதானம் ! ஆக , நம் உடலில் முக்கியமான தலையின் உள் மத்தியிலே தான் நம் உயிர் இருக்கின்றது ! ஏ மனிதா நீ உயிர் உள்ளவன்.

 உன் உயிர் எங்கிருக்கிறது ? மனிதனில் சிரசின் உள் மத்தியில் ! ” உச்சிக்கு கீழ் ஆடியோ ண்ணாக்குக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே “ என்பதுவே சித்தர் வேத வாக்கியம் உண்மை ஞான இரகசியம் ! உச்சிக்கு கீழே நம் சிரசின் உள் நடுவிலே வைத்தான் விளக்கு இறைவன் ! விளக்கு என்றால் தீ உண்டு தானே ! அது நித்தம் எரியுதாம்! அணையாவிலக்கு ! ஜீவன் அழிவதில்லை யல்லவா ?ஆக நம் உயிர் ,தீயாக அக்னி சொரூபமாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது . சித்தர் வாக்கே ஆதாரம் .

நம் உயிர் ஒளிதான் என்பதை இன்னும் ஒரு விதத்தில் நிரூபிக்கலாம் . ஒரு உயிர் போன , இறந்து போன , பிணத்துக்கும்  நமக்கும்  உள்ள வித்தியாசம் தான் உயிரின் தன்மை என அறிந்து கொள்ளலாமல்லவா ? பிணம் போட்டது போட்டபடி மரக்கட்டைபோல் கிடக்கும் எவ்வித உணர்ச்சியும் இருக்காது . உயிர் உள்ள நாம் செயல்படுகிறோம் அசைகிறோம் உணர்வோடு உள்ளோம் . அப்படியாயின் உயிர் இருந்தாலே உணர்ச்சி இருக்கும்! அடுத்து பிணத்தை தொட்டால் உடல் ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் . நம் உடலை தொட்டால் லேசாக கதகதப்பாக சூடாக இருக்கிறதல்லவா ? இதுவே உயிரின் தன்மை! உயிர் போன உடலில் சூடு இருக்காது. உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கும்!  சூடு இருக்கிறது என்றால் தீ- நெருப்பு அக்னி ஒளி இருக்கிறது என்று தானேஅர்த்தம்?!  ஆக உயிரின்தன்மை ஒளி! புரிகிறதா?”கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா” என எவரிடமாவது திட்டு வாங்கியிருக்கிறீர்களா?இல்லாவிட்டால், நீங்கள் பிரேதம், உயிர் இல்லாத மரக்கட்டை என்று அர்த்தம்! சூடு இருந்தால்,உயிராகிய ஒளி இருந்தால் சொரணை – உணர்ச்சி இருக்கும் செயல்படுவீர்கள்! இதுவே நிரூபணம்!உயிர் -ஒளிதான்! இருப்பதால் தான் உணர்வு!

நமக்கு உயிர் இருக்கிறது! நம் தலை உள்மத்தியில் ஒளியாக இருக்கிறது! ஞான ரகசியம்!உள்ளே இருப்பதை  காண்பது எப்படி? அடைய வழி என்ன? அறிய வேண்டாமா?அறிந்தால் தானே சாதிக்க முடியும்? 

நம் தலையில் பஞ்சேந்திரியங்கள் இருக்கிறது! அவை செயம்படுவதால் தான் நம் வாழ்வு!பஞ்சேந்திரியங்கள் செயல்பட அதற்க்கு ஆற்றல், சக்தி வேண்டுமே! உயிர் ஆற்றலால் ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. ஐம்புலன்களுக்கும் உயிர் சக்தி ஒரே சீராக இருக்க வேண்டுமானால்  உயிரிலிருந்து வரவேண்டுமானால் அவற்றின் மத்தியில் இருந்தால் தானே முடியும்?! அதனால் தான் படைத்த இறைவன் தலையின் உள்
மத்தியில் உயிரை வைத்தான்! இதிலிருந்தும் நம் தலையின் மத்தியின் உள்ளே தான் ஒளியாக நம் உயிர்  விளங்குகிறது என புரிகிறதல்லவா?

நாம் எப்படி அறிவது? உள்ளே இருப்பது தெரிய வேண்டுமே?  தெரிந்தால் தானே வழி அறிந்து போக முடியும்? தலையில் உள்ளே ஒளி-உயிர் இருப்பது தலையின் வெளியே எங்காவது தெரிகிறதா? தலையிலுள்ள ஐம்புலன்களில் கண்ணில் ஒளி தெரிகிறதல்லவா? கண்ணில் ஒளி இருப்பதால் தானே, பார்வை சக்தி, பார்க்கும் ஆற்றல் உள்ளதால் தானே நம்மால் பார்க்க முடிகிறது?! கண்ணில் ஒளி இல்லாதவன் குருடன்! கண்ணில் தெரியும் ஒளி எது என பார்த்தால் நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே ஜீவ ஒளியே என அறியலாம்!  ஆகஉயிர் உள்ளே இருக்குது – கண்ணில் தெரியுது.

உள்ளே உள்ள ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் உயிர்ஸ்தானத்தில் இருந்து கண் வரை ஒரு வழி இருந்தால் தானே தெரியும்?! இதுவே உண்மை! உயிருக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே மாபெரும் உண்மை தேவ இரகசியம்! சத்தியம்!தெரிந்து கொள்ளுங்கள்!!

இதுவரை இவ்வுலகில் யாருமே சொல்லாத ஞான ரகசியம் இது!! வாலையின் அருளால் வள்ளல் பெருமான் மற்றும் சித்தர்கள் அருளாசியால் அடியேன் அனைத்து பரிபாஷைகளையும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்! உலகமே ஞானம் பெற வேண்டும்! ஜாதி மத இன மொழி நாடு பேதமற்ற
சமரச சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்ற ஆவாவினால் தான்! படியுங்கள்,!தெளியுங்கள், உணருங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள் இது தான் ஞானம் என்று! ஞானப்பதை என்று ! இவ்வழி விழி வழி விழித்திருந்து
ஆத்ம சாதனை செய்தால் ஞானம் பெறலாம் என்று! உன்னை நீ அறியலாம்! உன்னை  படைத்தவனை அடையலாம் என்று!!

நம் உடலில் தலையில் ஐம்புலன்களில் கண்ணில் மட்டுமே துலங்குகிறது ஒளி! ஆனால் ஒளியான உயிர் இருப்பதோ! தலை உள் நடுவில் ! உள் ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் ஒருவழி இருக்குமல்லவா? அவ்வழியே உள் போய் விட வேண்டியது தானே! போங்கள்!

எப்படி போவது? மெய் என சிரசில் சொல்லப்படுவது மூளை மூடியிருக்கிறது! வாய் திறந்து இருக்கிறது  ஒளி ஒன்று தெரியவில்லை! மூக்கு திறந்து இருக்கிறது அங்கும் ஒளி   தெரிய வில்லை! செவி திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரியவில்லை ! கண் அடைத்திருக்கிறது இமைகள் இமைகள் தான் மூடுகிறது ஆனால் அங்கே தான் ஒளி தெரிகிறது!? இது என்ன விந்தை?இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இரண்டு கண்கள் உள்ளதே, இருகண்ணிலும் ஒளி தெரிகிறதே தலையின் உள் ஒரு உயிர்தானே இருக்கிறது? இரு ஒளி இரு கண்களில் தெரிகிறதே! அப்படியானால் இரண்டு உயிர் உள்ளதா நமக்கு? இது அடுத்த ஞான ரகசியம்! நமக்கு இரு கண்கள் இருப்பினும் நாம் பார்ப்பது ஒரு பொருளை தானே !  அப்படியாயின் இரண்டு கண்ணும் ஒன்றுதானே! இருப்பது ஒரு உயிர் ஒளிதானே!  ஆக ஒரே உயிரான ஒளிதான் இரு கண்ணிலும் தோற்றம்? எப்படி? நம் கண் எப்படி இருக்கிறது தெரியுமா?

நம் தலை உள் மத்தியிலுள்ள உயிர் ஒளி இருக்கும் இடத்திலிருந்து இரு கண்களுக்கும் இரு குழல் போன்ற நரம்புகள் வந்து சேருகிறது!? ஆங்கில வி  – V  வடிவில் உள்ளது! விரிந்து வந்து இரு கண்களிலும் இரு நரம்புகள்
சேருகின்றன!  உள் ஒளி இரு நாடி வழி வெளியே இரு கண்ணிலும் துலங்குகிறது?! புரிகிறதா? உயிர் ஒன்றே! இரு கண்களின் செயலும் ஒன்றை சேர்வதே! ஒன்றை பார்ப்பதே! அந்த ஒன்று உயிரே!

நாம் தவம் செய்வது எப்படியெனில், இரு கண்களில் துலங்கும் ஒளியை உள்முகமாக ஆதம  ஸ்தானத்தில் கொண்டு சேர்ப்பது தான்!? முடியுமா? கண்டிப்பாக முடியும்! எல்லோராலும் முடியும்! எப்படி?வேத புராண இதிகாசங்கள் பைபிள் குர் ஆன் மற்றும் சித்தர்கள் ஞானிகள் வள்ளலார் எல்லோரும் உரைப்பது இந்த ஒரே ஞான வழியை பற்றித்தான், கணணைப்  பற்றித்தான்,  கண்மணி ஒளியை பற்றித்தான்!  உலக பற்றை
விட்டால் தான், மனதை கண்மணி ஒளியில் நிறுத்தித்தான், குரு தீட்சையால் உன் கண் ஒளியை உணர்வை தூண்டித்தான், தவம் செய்து அடைய முடியும் என்று உறுதியாக கூறுகிறார்கள்!

குருவேண்டும்! கண்டிப்பாக குருவை ஞான சற்குருவை பெற்றேயாக வேண்டும்!?அவரால் தான் உங்கள் கண்களில் உணர்வை தீட்சையாக கொடுக்க முடியும்!?ஞானம் பெற்ற ஒளியுடல் பெற்ற ஒரு சித்தானோ ஞானியோ தான் குருவான ஒருவர் மூலமாக உங்களுக்கு ஞான தீட்சை வழங்க  முடியும்?! அப்படிப்பட்டவர் தான் “ஞான சற் குரு!”  எல்லோரும் குருவல்ல!? எல்லோரும் தீட்சை கொடுக்க முடியாது?! நல்ல ஒருகுருவை அல்ல, நல்ல ஒரு ஞான சற்குருவை தேர்ந்தெடுத்து ஞான உபதேசம் ஞான தீட்சை பெற்று விழித்து இருந்து விழிப்புணர்வுடன் இருந்து ஞான சாதனை செய்யுங்கள்! மரணமிலா பெருவாழ்வு பெறலாம்!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! “இப்போது யாம் இங்கு இருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்”என்று மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்
திருக்காப்பீட்டுக் கொள்ளும் முன் கூறியருளினார்கள்!  இதன் அர்த்தம் என்ன?யார் தீட்சை பெற ஞான சர்குருவிடம் வருகிறாரோ, அவர் கண்வழி, தீட்சை மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன்! இரு பிறப்பாளன்!  மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார் ! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கி அருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுக்குள் பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான சற்குருவை சரண் அடைக !

குருவருள் இன்றி திருவருள் கிட்டாது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே, குருவின் மகத்துவம் பேசுவதே, குருவை நினைப்பதே குருவுக்கு தொண்டு செய்வதே, குருவே கதி என்று இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்!

ஞான சற்குருவிடம்  ஞான தீட்சை மூலம் கண்ணில் உணர்வை பெற்று நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் அருவியாக கொட்டும்! கண்மணி உணர்வு மேலிட மேலிட கடுப்புணர்வு பெருகி அதனால் கண் ஒளி பெருகும்! கண் ஒளி பெருகினால் எங்கு போகும்? எங்கே போக முடியும்?! உள்ளே தானே ஓட்டை நாடி போகிறது?  அவ்வழியே அக்குகை  வழியே ஒளி உள் சென்று உள் மத்திய பகுதியான நம் ஜீவஸ்தானத்தை அடையும்! இரு கண்ணும் உள்ளே போய், போய் முடியும் ஒரே இடத்தில் நம் ஜீவஸ்தானத்தில் போய் ஒன்று சேரும்! வலது கண் சூரிய சக்தி – இடது கண் சந்திர சக்தி – உள் உள்ள ஜீவஸ்தானம் அக்னி சக்தி  மூன்று தீயும் சேரும்போது பெரு நெருப்பாகும்! அற்புத ஆற்றல் வெளிப்படும்! வலைத்தாயின் இருப்பிடம் அது தான்! நம் ஆத்மஸ்தானம் அதுதான்!அப்போது தான் நாம் நம் ஆத்ம சொரூபத்தை  – ஒளியை – நம் சூக்கும சரீரத்தை ஒளியுடலை வாலையை  தரிசிக்கலாம், அமுதம் தருவாள் வாலை! ஞானம் துலங்கும்!

சரி நம் கண் தான் அடைத்திருக்கிறதே?! எப்படிப்போகும் ஒளி உள்ளே! ஞான சற்குருவிடம் தீட்சை மூலம் நம் கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கிறோம்! விழி விழி  என விழித்திருந்து தவம் செய்தால் கண்ணில் கடுப்பு ஏறி ஒளி பெருகும்! ஒளி பெருகி பெருகி வழி திறக்கும்?! எப்படி தெரியுமா ? அதற்க்கு முன் நம் கண்ணை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! நம் கண் எப்படி இருக்கிறது? வெள்ளை விழி அதன் மத்தியில் கருவிழி அதன் மத்தியில் கண்மணி அதன் மத்தியில் ஊசி முனை அளவு ஓட்டை-துவாரம்! அந்த கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு ஓட்டையை ஒரு மெல்லிய ஜவ்வு அடைந்துள்ளது! ! இதை நமக்கு வள்ளல் பெருமான் அழகாக சிறப்பாக காட்டியுள்ளார்கள்!?நம் கண் அமைப்பே தவ நிலை உணர்த்தவே வள்ளல் பெருமான் கண்ணாடி கூண்டு விளக்கு ஏற்றச் சொன்னார்கள். அந்த ஜோதியை ஆராதியுங்கள் என்றார்!

ஆதிகாலங்களில் சுமார் 60 வருடமுன்பு கூட தமிழ் நாட்டில் தெரு விளக்கு, வீடுகளில் சிம்னி விளக்கு இருந்தது. கிட்டத்தட்ட அதை ஒத்துதான் நம் கண்ணாகிய விளக்கும் இருக்கிறது. இதை பைபிள் அழகாக கூறுகிறது! “கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கிறது. நம் கண்  கண் ஒளியுள்ளதாக இருந்தால் உன் சரீரம் முழுமைக்கும் ஒளியுள்ளதாக இருக்கும்! இதை ஏன் சொன்னார் ஏசு பெருமான்? “தேவன் ஒளியாக இருக்கிறார்!   நீங்க ளும் ஒளியிலேநடந்தால் தேவனை தரிசிக்கலாம் ” என்றார்! ஒளியான தேவனை பராமபிதாவை காண முதலில் உன் கண் ஒளியால் உன் உடல் முழுதும் ஒளியாக்கு என்பதே! எவ்வளவு மேலான உயர்ந்த ஞானத்தை இரண்டே வசனங்களில் கூறுகிறது பைபிள்!!

எம்மதமும் எந்த ஞானியும் இதை தவிர வேறு என்ன கூறுகின்றனர்!? இதை அறிவதுதான் அறிவு!தெளிவது தான் பண்பு! உணர்வது தான் ஞானம்! அவனே சன்மார்க்கி ! ஒரே கடவுளைப்பற்றி வெவ்வேறாகவா கூற முடியும்?! பிரித்து பார்ப்பவன் மடையன்! ஜாதி மத இன  மொழி நாடு எனபேதம் பார்ப்பவன் அறிவே இல்லாத முட்டாள்!

கண்ணில் ஒளி துலங்குவதை வள்ளலார் கண்ணாடி கூண்டு விளக்கு மூலம் உணர்த்துகிறார்!கண்ணாடி கூண்டு விளக்கு எப்படி தெரிகிறது? அகல்விளக்கு உள்ளே இருக்கிறது. அந்த கூண்டு கண்ணாடியினால் இருப்பதால் தானே! விளக்கேற்ற தூண்ட எண்னைய் விட கண்ணாடி கூண்டு கதவை திறந்து தானே உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இது போலவே நம் கண் உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இதுபோலவே  நம் கண் உள்ளே இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்திலே ஜீவஜோதி ! கண்ணாடி போல கண் ! கண்மணி மத்தியிலும் ஊசிமுனையளவு ஓட்டை அதிலே ஊசிமுனையளவு மெல்லிய ஜவ்வு ! கண்ணாடி போல துலங்கும் ஜவ்வு.

கண்ணாடி போன்ற ஜவ்வு இருப்பதால்தான் உள் ஒளி கண்ணில் தெரிகிறது ?! மரக்கதவு போன்று ஜவ்வு உள்ளவன் குருடன் ! நாம் தவம் செய்யச் செய்ய மெல்லிய ஜவ்வு உஷ்ணத்தால் உருகி கரையும் ! வாசல் திறக்கும் ! ஒளி உட்புகும் ! ஆத்மஸ்தானத்தை அடையும் ! இதுவே தவநிலை ! ஞானநிலை ! கண்ணாடிபோன்ற மெல்லிய ஜவ்வுதான் எழுதிரைகளாக அனுபவத்தில் காணலாம் ! இதைத்தான் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண ஏழு திரைவிலகும் படி ஏற்படுத்தி நமக்கு ஞானத்தை உணர்த்துகிறார் வள்ளலார் ! சன்மார்க்க அன்பர்களே உணருங்கள் ! புறத்தே ஜோதி ஏற்றி திருவருட்பா பாராயணம் செய்து அன்னதானம் செய்தால் ஞானம் வராது !? அகத்தே தங்கஜோதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துலக்குவதை காண உணர ஞானம் பெற நம்இரு கண்களே வழி என முதலில் உணருங்கள்.

அகவழிபாடு செய்யுங்கள் ! உலகிலே எந்த பேதமும் எதிலும் யாரிடமும் காணாத வள்ளலார் மக்களை இரண்டாக பிரித்தார் ?! எப்படித்தெரியுமா ? அகவினத்தார் புறவினத்தார் என்று ! சத்யா ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான் !! உலக விவகாரங்களில் மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஓட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார் !

அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்யா ஞான சபை ! அங்கே பார் தங்கஜோதியை ! “சத்யா ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன் “ என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா ?

ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்யா ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள் ! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள் ! ஜோதி பாத்தாச்சு , சோறு போட்டாச்சு , அருட்பா பிடிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல !? சத்யா ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே எழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார் ! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி !! சுத்த சன்மார்க்கி ! வள்ளலார் சொன்னதை செய் ! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும் !

இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன ! அவர்கள் அதை செய்யட்டும் ! உன்னால் முடிந்தால் உதவிசெய் ! வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்யா ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய் ! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான் !! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும் ! நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும் ! அதை விடுத்து மதவாதிகளை போல் அவரவர் மதமே உயர்ந்தது என அவரவர்கள் முட்டாள் தனமாக பேசுவது போல் சன்மார்க்கம் தான் உயர்ந்தது என்று நீயும் உளராதே !?

சன்மார்க்கம் என்றால்   என்ன ? முதலில் சன்மார்க்கி சொல்லும் நீ உணர்ந்து கொள் !? “சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!” உலகில் உள்ள எல்லா மதத்தவர்களும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின் , ஒரே இறைவன் தான் உலகுக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே ! நாம் அனைவரும் உலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதரிகளே என அரியச் செய்ய வேண்டும் ! உணரச் செய்ய வேண்டும் !அதுதான் சன்மார்க்கம் !

ஊரோடு ஒத்துவாழ் ! கூடிவாழ் ! என்றெல்லாம் ஞானியர் , கூறியது எதற்க்காக ?!”ஒன்றாக காண்பதுவே காட்சி “இப்படி வாழ்பவன் தான் சன்மார்க்கி ! துவேஷம் காண்பிப்பவன் ஆணவம் கொள்பவன் சன்மார்க்கியல்ல ! விபூதி பூசுவதும் பூசாமலிருப்பதும் சன்மார்க்கமல்ல ! தர்மச்சாலையிலே மேட்டுக்குப்பதிலே பின் எதற்க்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறீர்கள் ?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞானப்பாதையில் பீடு நடைபோடுங்கள் . எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக் கூறுங்கள் ! ஜீவகாருண்யம் என்றால் அன்பு ! மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளிடத்திலும் காட்டும் அன்பு !சாப்பாடு போடுவதும் அதில் ஒன்றுதான் ! சாப்பாடு போடுவது மட்டுந்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமென்று தவறாக கருதிவிடாதீர்கள் !?

பக்தியுடன்  வாழு ! பணிவுடன்  வாழு ! நீதியுடன்  வாழு !
ஞான  தவம்  செய் ! ஞான  தானம்  செய் !

கண்ணைப்பார் ! அதுதான்  திருவடி ! மெய்ப்பொருள் !
குருவைப்பணி ! கண்ணைத் திற  ! சும்மா இரு !

அறிவை  மயக்கும்  போதைக்கு அடிமையாகாதே !
மிருகம்  போல்  மாமிசம்  உண்டு  சாகாதே !
எவ்வித  கெட்ட பழக்க  வழக்கமும்  கூடாது !

எல்லாரும்  எல்லாமும்  பெற  வேண்டும் ! இங்கு
இல்லாமை  இல்லாத நிலை  வேண்டும் !

சாத்திரத்தில்  சிறந்தது  திருமூலரின்  திருமந்திரம் !
தோத்திரத்தில்  சிறந்தது  மணிவாசகரின்  திருவாசகம் !
பாத்திரத்தில்  சிறந்தது  வள்ளலாரின்  திவருட்பா !

சிந்தை  தெளிய  சித்தர்கள்  நூலை பார் !  உணர் !
மனுமுறை  கண்டவாசகம்  படி  அதன்படி  நட !

சன்மார்க்கம்  சகலரும்  சேர்ந்த  ஒரே  மார்க்கமே !
ஜீவகாருண்யம்  சகல  உயிர்களிடமும்  காட்டும்  அன்பே !

ஆன்ம  நேய  ஒருமைப்பாடு  நிலவவேண்டும்  உலகிலே !

உலகமக்கள்  அனைவருக்கும்  உள்ள  ஒற்றுமை  கண்மணி !
ஜீவனை  உணர  கண்ணே – விழியே  ஒரே  வழி !

                                               – ஞான சற்குரு சிவ செல்வராஜ் 

 

What do you think?