ஞான பதிவுகள்

ஞானக்கடல் பீர்முஹம்மது

திரிகூட ராசப்ப கவிராயர் இயற்றியது “குற்றால குறவஞ்சி” யாகும். ஞானரத்தினக் குறவஞ்சி இயற்றிய நபி அருள் பெற்ற நாதர் ஷெய்கு பீர்முஹம்மது ஒலியுல்லா அவர்கள் குற்றால மலையருகே தென்காசி நகரிலே சிறுமலுக்கூர் என்னும் அருளாளருக்கு மகவாக பிறந்தார்கள். தாயார் பெயர் ஆமீனா.

ஹிஜ்ரி 800 க்கும் 1100 – க்கும் இடைப்பட்ட காலம் என சரித்திரம் கூறும் விந்தை! அதாவது நமது பீர்முஹம்மது அவர்கள் சுமார் 300 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தார்கள்! சாதாரண மனிதன் 100 வருடம் வாழ்வதே அபூர்வம். ஞானிகள் 300 வருடம் வாழ்ந்தார் என்பது அதிசயமல்ல! சாதாரண விஷயமே!

“விட்டகுறை தொட்ட குறை” பிறவியிலேயே ஞானம் நிரம்பபெற்ற பீர்முஹம்மது தனிமையை நாடினார். உலக மாயையில் சிக்காமல் அல்லாவின் பேரருளையே நாடி நின்றார்கள். காடுகளிலும் மலைகளிலும் தவம் தொடர்ந்து செய்தார்.  கேரளமாநில வடகிழக்கு மலைபகுதியே பீர்முஹம்மது தவம் புரியும் புனித தலமாயிற்று. ஆணை மலையில் 25 ஆண்டுகள் தவமிருந்து வாழ்ந்தார்கள். பீர்மேடு என இன்று அழைக்கப்படும் பகுதி பீர்முஹம்மது பலகாலம் தங்கி தவமியற்றியதால்தான் அப்பெயர் பெற்றது என்பர்.

இது நடுவில் ஏகப்பட்ட அற்புதங்களையும் இயற்றினார். இதையெல்லாம் நாங்கள் இங்கு தரவில்லை (புத்தகத்தில் உள்ளது). சிறிது காலத்திற்கு பின் தக்கலையை தேர்ந்தெடுத்து பீர்முஹம்மது அவர்கள் அங்கயே வசிக்கலானார்கள்.

பீர்முஹம்மது அப்பா அவர்கள் ஆற்றிய இறை ஞானம் இலக்கியம் இரண்டிலும் சுமார் 18000பாடல்கள் என்பர் ஆன்றோர். முதன் முதலில் இனிய தமிழுக்கும் இஸ்லாமிய இறையியலுக்கும் இடையில் பாக்களால் பாலம் அமைத்தவர் ஷெய்கு பீர்முஹம்மது ஒளியில்லா என்றால் அது மிகையாகாது!

அப்பா அவர்கள் ரஜப் மாதம் பூரணப் பதினான்கு வெள்ளிகிழமை இரவு பூதவுடல் நீத்து புகழுடல் எய்தினார்கள். பீரப்பா வாழ்வே ஒரு அற்புதம்! அற்புதம் ஆற்றிய அற்புதமோ ஏராளம்! பீரப்பா பாடல்கள் சிந்தைக்கு விருந்து! நோய்க்கு மருந்து! உணர்ந்தவர்க்கோ பேரின்பம்!

ஞானக்கடல் பீர்முஹம்மது அப்பா அவர்களின் தர்கா குமரிமாவட்டம் தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ளது. பீர்முஹம்மது அப்பா அவர்களின் பேறு கொண்டவிழா சமயநெறிவிழா சன்மார்க்க விழாவாக இயங்கி வருகிறது. கேரளம் – தமிழ்நாட்டு மக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் விடுமுறை தந்து உள்ளது. பல சமய மக்களும் பல பிரிவினரும் நித்தம் நித்தம் பீரப்பா தர்காவுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

எங்கள் குரு நாதர் ஞான சற்குரு சிவ. செல்வராஜ் எழுதிய “ஞானக்கடல் பீர்முஹம்மது” என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து கொடுத்திருக்கிறோம். அடுத்தடுத்த தினங்களில் பீர் முஹம்மது அவர்களின் பாடல்களை யும் பதிவோம். அந்த பாடல்களில் இருந்து நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும் ஞானிகளுக்கு மதமும் இல்லை ஒன்றும் இல்லை என்று மேலும் அவர்கள் இறைவனை அடைந்த வழியும் ஒன்றுதான் என்று!

Reader Comments (1)

  1. Prasad October 5, 2013 at 5:57 pm

    Namaste,
    I’d like to get a copy of “Gnanakkadal Peer Muhammadhu”. Kindly let me know how much does it cost ? I’d like to as well get a copy of “Gnana pugalchi” book my Peer Muhammadhu. Can you kindly let me know where can I get it ?

What do you think?