கூடியிருந்து செய்வது சத்சங்கம்! தனித்திருந்து செய்வது சத்விசாரம். ஞானம் என்பது எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். சத்சங்கத்துவே நிர்சங்கத்துவம், நிர்சங்கத்துவே நிர்முகத்துவம், நிர்முகத்துவே நிர்மலத்துவம், நிர்மலத்துவே ஜீவன் முக்தி, இது ஆதி சங்கரர் சொன்னது. அதே தான் வள்ளலார் சொன்னார், சாதுக்கள் சங்கம் சார்ந்தாலன்றி இது சாராது! நீங்க எவ்வளவு தவம் செய்தாலும் இந்த சத்சங்கம் முக்கியம்.
தவம் என்றால் மந்திர ஜபமல்ல, தவம் பூஜை செய்வது யாகம் வளர்ப்பது அல்ல, தவம் என்பது பிராணாயாமம் வாசியோகம் இன்னும் பிற யோகங்கள் அல்ல, குரு தீட்சை பெற்று திருவடி மேல் – கண்மணி ஒளி மேல் மனதை வைத்து உணர்வை பெருக்கி கண் திறந்து தவம் செய்ய வேண்டும்!
தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்பவது, கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை தட்டி எழுப்புவதே ஞான சாதனை! ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி. ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்! இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம். இதுவே தவம். மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.
ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின்தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.
ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்தப்பட்ட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும். சட்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதைத்தான். தீட்சை என்பது அக்னியின் மூலம் ஞானஸ்நானம் பெறுவது, தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான். துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள்.
இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சாம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்க்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது ! குரு பார்த்து தேர்ந்தெடுக்கும் உண்மை சீடனே குருவாவார். அப்படிப்பட்ட மெய் குருவை ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற்றாலே ஞானம் பெற முடியும்!! இறைவன் யார்? நீ யார்? எங்கே இருக்கிறது உயிர்? எப்படி அறிவது? காண தடையாக உள்ளது எது? சும்மா இருப்பது எப்படி? மனம் உதிக்கும் இடத்தில் மனதை நிறுத்துவது எப்படி? இதை தெரிந்து கொள்வது உபதேசம். பிறகு தீட்சை
இறைவன் திருவடி நம் கண்கள். நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே நம் கண்களில் துலங்குகிறது. ஆத்மாவிலிருந்து இறை ஒளி நேரடியாக வெளிப்படும் உடலில் உள்ள இடம் நம் கண்கள். மனம் வெளிப்படும் இடம் அதுவாகும். முக்தி அடைய அல்லது கடவுளுடன் ஒன்றிணைவதற்காக அனைத்து துறவிகள்/சித்தர்கள் தியானம் செய்த இடம் இதுவாகும்.
இறைவன் திருவடியான நம் கண்களை சூரியன் சந்திரன், 8 2, அ உ, சிவம் சக்தி, சங்கு சக்கரம் புருவமத்தி,இருதயம் என்று பரிபாசையாக குறிப்பிடபடுகிறது. கண்ணன், கண்ணம்மா, கிருஷ்ணமணி, ஆலிலை மேல் நாராயணன், சின்மயம் என்று பரிபாசையாக சொல்வது இறைவன் திருவடியாகிய கண்களில் துலங்கும் உயிர் ஒளியே.