தவம் என்றால் மந்திர ஜபமல்ல, தவம் பூஜை செய்வது யாகம் வளர்ப்பது அல்ல, தவம் என்பது பிராணாயாமம் வாசியோகம் இன்னும் பிற யோகங்கள் அல்ல, குரு தீட்சை பெற்று திருவடி மேல் - கண்மணி ஒளி மேல் மனதை வைத்து உணர்வை பெருக்கி கண் திறந்து தவம் செய்ய வேண்டும்! தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்பவது, கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை தட்டி எழுப்புவதே ஞான சாதனை! ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி. ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்! இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம். இதுவே தவம். மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.