ஞான பதிவுகள்

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது

இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில்.

அவர்கள் நமக்கு அருளியுள்ள நூல்களின் “குருவினை” பற்றி அவர்கள் கூறியுள்ள கருத்தினை பாப்போம். மெய்ஞ்ஞான விளக்கங்கள் எங்கள் குருநாதர் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் வெளியிட்டுள்ள புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

போலி குருவை எப்படி அடையாளம் காண்பது?

பல நூறு ஏக்கரில் ஆசிரமம் காட்டுபவன் நல்ல குரு இல்லை. பல ஆயிரம் கோடி பணம் சேர்த்து வைப்பவன் குரு இல்லை. பெண்ணாசை கொண்டவன் நிச்சயம்  குரு இல்லை.

மூவாசை விட்டொழி என்றும் இறைவனை அடைய தூய நல்லொழுக்கத்தை கடைபிடி – சுத்த சைவ உணவினை உட்கொள் என போதிக்க வேண்டிய சாமியார்கள் , மண்ணாசையால் ஏக்கர் கணக்கில் ஆசிரமம் , பொண்ணாசையால் கோடி கணக்கில் பணம் , பெண் ஆசையால் தவறான செயல்பாடுகள் , நீ எப்படி வேண்டுமானாலும் இரு என் ஆசிரமத்தில் சேர்ந்தால் போதும் என்கிறார்கள். நீ மாமிசம் மீன் முட்டை சாப்பிடலாம் யோகா மட்டும் செய் என ஆசிரமத்தில் கூட்டம் சேர ஆட்டம் போடுகிறார்கள்.
உன் கண்ணை மூட சொல்பவன் உண்மை குரு அல்ல. உன் கண்ணை திறப்பவன் தான் சற்குரு.

இவர்களை குருவாக கொள்பவர்கள் உருப்படாமல் தான் போவார்.

கீழ்கண்ட திருமந்திர பாடலில் போலி குருவை பற்றி திருமூலர் பெருமான் எச்சரிக்கிறார்

“குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே” – திருமந்திர பாடல் 1680

வினை வழி வந்த மனிதரில் பலர், அறியாமையால் குருடாயிருக்கும் நம் கண்களை திறக்கும் சற்குருவை அறியமாட்டார்கள் அடையமாட்டார்கள். நம் கண்களை வினைத் திரையால் மூடப்பட்டு , நாம் கண்ணிருந்தும் குருடராகவே இருக்கிறோம்!? நம் கண்ணிலிருக்கும் வினைத்திரையை விலக்கி கண்மணி ஒளியை தூண்டி உணரச் செய்யும் ஒரு நல்ல ஞான சற்குருவை பெற வேண்டும்.

போலிச் சாமியார்களை நம்பி பணத்தை மானத்தை இழப்பவர்களே அதிகம். தமது கண்கள் குருடு என்பதை அறியாத போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர். நம் கண்களை திறப்பவனே உண்மை குரு. நம் கண்ணில் ஒரு மறைப்பு உள்ளது என காட்டி அதை அகற்ற , தவம் செய்யச் சொல்லித் தருபவரே உண்மை ஞான சற்குரு . முதலில் புறக்கண்ணை திறக்கத் சொல்பவனே, இமைகளை திறந்து தியானம் பண்ணச் சொல்பவனே உண்மை குரு.

அந்த உண்மை, மெய்ஞ்ஞான சற்குரு அருளாலே, கண்மணி ஒளியை தூண்ட வழி கிட்டி , நாம் தவம் செய்தாலே முதலில் புறக்கண் திறக்கும். பின் அகக் கண்ணும் திறக்கணும்.

இப்படிப்பட்ட குருவை பெற வேண்டும். இந்த கண் குருட்டு விபரம் அறியாதவன் குருவே அல்ல. அவனுக்கும் ஞானத்துக்கும் சம்மதமே இல்லை. இப்படி சம்பந்தமே இல்லாத சம்பந்தரை குருவாக பெற்றவர்கள் குருடர்களே! ஏனெனில் குருவே குருடன் மறைப்பறியாதவன். பின் சீடனானவன் எப்படி உண்மை அறிவான். சீடனும் முழுக் குருடனே. இந்த குருவான குருடனும் குருட்டு குருவை பெற்ற குருட்டு சீடனும் எங்கேயாவது போக முடியுமா? வழி தெரியுமா? விழியின் மகத்துவம் தெரியாதவனுக்கு எப்படி வழி துலங்கும்? யானையை பார்த்த குருடன் கதை தான். மேடு பள்ளம் அறியாமல் விழுகின்ற குருடனைப் போல , இந்த குருட்டு குருவும் குருட்டு சீடனும் உண்மை அறியாமல் , உணராமல் உன்மெய் அறியாமல் , மெய்ப்பொருள் அறியாமல் சுடுகாட்டு குழியிலே தான் விழுவர்.

அகஸ்தியர் பெருமானும் கண் மூடி தியானம் செய்பவர்களை மடையர்கள் என்று சாடுகிறார் .

(அகத்தியர் சொல்லும் மடையர்கள்)

உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட திருமந்திர பாடலில் திருமூலர் பெருமான் எப்போது ஒருவருக்கு உண்மை குரு வாய்ப்பார் என்று கூறி அருள்கிறார்

“சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே” – திருமந்திர பாடல் 2119

சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர் , இது போல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி மாந்தர். அதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார் திருமூலர். இதெல்லாம் பக்தி மார்க்கம்.

இதே போல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் கர்மமார்க்கம்.

இதே போல் பிரணயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் யோக மார்க்கம்.

இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி , கர்ம, யோக மார்க்கங்களில் நீ இறைவனை அறிய முடியாது. எதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும். அது பிரயோஜனமில்லை.

தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தம் திருத்தமாக அடித்து கூறுகிறார்.

“மூர்த்தி தளம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்.

உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞான சற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்.

குரு இல்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது. பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார். குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே ராமன் , கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினார்.

“காட்டும் குருவின்றி காண வொண்ணாதே” ,”குருவில்லா வித்தை பாழ்!” குருவே எல்லாம் எனக்கருதி அவர் பாதங்களில் எவர் ஒருவர் சரணடைகிறாரோ அவரே இரட்சிக்கப்படுவார்.

“குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்”இது ஒளவைக் குறள். குருவை வணங்கி பணிபவனே நல்ல சீடனாவான்.

மேலும் மனிதன் சைவ உணவு உட்கொள்பவனாக இருக்க வேண்டும். எந்த வித கெட்ட பழக்கம் இல்லாதவனாக இருக்க வேண்டும். இறைபக்தி உள்ளவனாக விளங்க வேண்டும். அப்படி பட்ட தூய ஆன்மாக்களே நல்ல ஒரு சற்குருவை பெறுவார். சற்குரு வாயிலாக உபதேசம் மூலமாக மெய்ப்பொருள் நம் கண்கள் தான் என தெளிந்து , தீட்சை பெற்று, கண்மணியில் உணர்வை பெற்று அதிலேயே நின்று நிலைத்து தவம் செய்பவரே ஞானம் பெறுவார்.

குருவாக – மெய்குருவாக இருப்பவர் யார் தெரியுமா?

குருவால் நியமிக்கப்படுபவனே! ஒரு குருவுக்கு ஆயிரம் சீடர்கள் தகுதியுடையவராய் இருக்கலாம். அத்தனை பேரும் குருவல்ல. அந்த குரு பார்த்து தேர்ந்தெடுக்கும் உண்மை சீடனே குருவாவார். வேறு யாரும் குரு ஆகா முடியாது. இவ்வாறு குருவான ஒருவரே அவர் குருவருளால் உண்மைஞானம் உணரப் பெறுவார். அப்படிப்பட்ட மெய் குருவை ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற்றாலே நீவிரும் ஞானம் பெற முடியும்!!

“குருவை வணங்க கூசி நின்றேனோ?” “குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ ?” என மனுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமானே குருவின் மகத்துவத்தை கூறுகிறார். அதுமட்டுமா? ” தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்” எனவும் திருவருட்பா வசன பாகத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் கூறுகிறார். குரு வழியே ஞானம். குரு விழி வழியே ஞானம் துலங்கும்.

குருவை பிடி. முதலில் ஸ்தூலம். பின்னர் சூட்சமம். குரு உன் உள்ளே இருக்கிறார். அதை அடைய உணர வெளியே ஞான சற்குரு ஒருவரை சரணடை . ஞானி ஒருவர் அருள அருள்பவர் தான் ஞான சற்குரு.

நாம் மனதில் நிறுத்த வேண்டியது :

“இந்தியாவில் குருமார்களுக்கு பஞ்சமேயில்லை நல்ல சீடன் ஒருவனை பார்ப்பது அரிது”- சுவாமி விவேகானந்தர் நல்ல குருவை தேடும் முன் நல்ல சீடனுக்கு உள்ள பண்புகளை வளர்த்து கொள்ளுங்கள். ஒழுக்கமாக , நீதி நெறியாக வாழுங்கள். சைவ உணவை உண்பவனே ஞானம் பெற தகுதி உடையவன். இறைவனிடம் பக்தி செய்து நல்ல குருவை காட்ட வேண்டுங்கள்.

எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.

திருச்சிற்றம்பலம்

What do you think?