ஞான பதிவுகள்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014

ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் 2014 தைபூசம் அன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார். (தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்அப்போது தங்க ஜோதி ஞான சபை அன்பர்களுக்கு அவர் கொடுத்த மெய்ஞான உபதேசம்..

இந்த உரையை வீடியோவாக பார்க்க கிளிக் செய்யுங்கள் 

நமது நாட்டில் நிறைய சித்தர்கள், ஞானிகள் உள்ளனர். சித்தர்களை வழிபாடு செய்பவர்களுக்கு, தேவதைகளை வழிபாடு செய்பவர்களுக்கு , அவர்களை  போற்றி  புகல்பவர்களுக்கு அந்த அந்த தேவதைகள் , சித்தர்கள் அருளை வழங்குகிறார்கள்.

ஆனால் வள்ளல் பெருமான் அப்படி இல்லை. நீங்கள் வள்ளலாரை நினைக்கவே வேண்டாம். உண்மையான ஆன்ம தாகம் இருந்தால் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், யாராகா இருந்தாலும் அவருக்கு தேடி வந்து அருள் கொடுத்து வழி காட்டி, மேல் நிலைக்கு அழைத்துச் செல்வார். இது தான் வள்ளல் பெருமானின் தனி பெரும் கருணை. இந்த மாதிரி கருணை சித்தர்களுக்கும் இருக்கும் ஆனால் அதை விட அதிக படியான ஒரு பெரிய நிலையில் கருணையே வடிவாய் தான் வள்ளலார் இருக்கிறார்.

வள்ளலார் அப்படி என்றால் – அகராதியில் விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் “கருணை” என்று தான் சொல்ல வேண்டும். அந்த கருணை அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கு தான் சத்திய ஞான சபை, ஜோதி தரிசனம் எல்லாம். சரி அதை எப்படி எல்லாருக்கும் புரிய வைப்பது? இன்று வள்ளலார் என்றாலே நிறைய பேருக்கு தெரியவில்லை. வள்ளலாரை பற்றியே தெரியாவிடின் அவர் கூறியதை எப்படி புரிந்து கொள்வார்கள். அதுவும் இரகசியம் என்று வேறு நிறைய பேர் மறைகிறார்கள்.

எந்த வித மறைப்பும் இல்லாமல் இன்று நமது தங்க ஜோதி ஞான சபையில் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறோம். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வெளியிடுகிறோம்.

உங்களுக்குள் ஆன்ம ஜோதியாய் விளங்ககூடிய அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எப்படி இருக்கிறார் . நீங்கள் எப்படி அவரை அணுக வேண்டும். இது தான் இந்த உபதேசமும், தீட்சையும்.

இதை எல்லாரும் பெறலாம்.  எந்த விதமான பேதமோ, ஜாதி, மதமோ இல்லை. எந்த தகுதியும் வேண்டியதில்லை. மனிதனாக பிறந்த ஒன்றே இதற்கு தகுதி.

குருவை போற்ற வேண்டும் என்பதற்காக சில சம்பிரதாயங்கள். அதனை பின்பற்றி தீட்சை பெற்று தவம் செய்ய வேண்டும். அவ்வளவே.

எல்லாரும் தவம் செய்யாலாம். தவம் எதற்கு செய்ய வேண்டும்?

நல்லா இருப்பதற்கு தான். இந்த உலகத்தில் மனிதனாக பிறந்திருக்கிறோம். நல்லபடியாக வாழ்வதற்கு தான் பிறந்திருக்கிறோம். எந்த சித்தரும், ஞானியரும் நம்மை காட்டிற்கு போக சொல்லவில்லை,  சன்னியசியாய் போக சொல்ல வில்லை. “ஊரோடு ஒத்து வாழ்”, “எல்லோரோடும் சேர்ந்து வாழ் ” என்றே கூறி உள்ளார்கள்.

சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கம் தான். உன் குடும்பத்தை கவனித்து கொள். சமுதாயத்தில் உனக்கு உள்ள கடமையை செய். நீயும் வாழு, மற்றவர்களையும் வாழவை. இதை தான் எல்லோரும் கூறி உள்ளார்கள்.

நல்ல வாழ்க்கை என்பது எது?

அவ்வையார் ஆத்தி சூடியில் கூறி உள்ளதை போல “வைகறை துயில் எழு” , “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, “பெரியோர்களை போற்றி வணங்கு” இதை போல் நிறைய நல்ல நெறிகளை ஞானிகள் கொடுத்து உள்ளார்கள். இந்த மாதிரி நல்ல நெறியோடு நாம் வாழ்கையை ஆரம்பித்து  நல்ல ஒரு குருவை பெற்று உண்மை ஞானத்தினை தெரிந்து கொண்டால் அதுவே நாம் மனிதனாக பிறந்ததன்  நோக்கம்.இலட்சியம்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. “ மனிதராக பிறந்து உள்ளோம். மனித உருவில் தான் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் குணமும் எப்படி இருக்கிறது!? இந்த குணத்தை வைத்து தான் ஒவ்வொரு மனிதருக்கும் சித்தர்கள் பெயர் வைத்தார்கள். ஆகா நாம் மனிதனாக பிறந்து இருக்கிறோம். உண்மையில் நல்ல மனிதனாக வாழ வேண்டும்!!

இது வரை எப்படி இருந்தாலும் சரி. இன்றிலிர்ந்து நாம் நல்லவர்களாக இருப்போம், ஒழுக்கமாக இருப்போம், பெரியவர்கள் சொன்னபடி வாழ்வோம் – அப்படி என்று ஒரு உறுதி எடுத்து கொண்டால் போதும். நேற்று வரை நீங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் பரவாயில்லை. இன்றிலிருந்து நல்லவர்களாக இருப்போம். அருணகிரி நாதர் எவ்வளவு தப்பு செய்தார். அவருக்கு முருக பெருமான் காட்சி கொடுக்கவில்லையா?  தடுத்து ஆட்கொள்ளவில்லையா!?. நமக்கு அப்பா அம்மா எல்லாம் இறைவன் தானே. நாம் என்ன தவறு செய்திருந்தாலும் மன்னித்து அருள் புரிவார். காப்பாற்றுவார். இரட்சிப்பார்.

அந்த இறைவனை நம்பி வள்ளல் பெருமான் சொன்னது போல் வாழ்க்கை அமைத்து கொண்டால் போதும் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதற்கு முக்கியமான தேவை என்னவென்றால் “நாம் யார்” என்று தெரிந்து கொள்வது தான். “நாம் யார்” என்று உணர்வதற்கு தான் இந்த ஜோதி தரிசனம். அந்த இறைவனே, பரப்ரமமே, சாட்சாத் அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஆன்ம ஜோதியாக நமக்குள் விளங்குகிறார், துலங்குகிறார். இதை புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆன்ம ஜோதி, ஆன்மா , உயிர் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அது இருக்கிறது என்றே ஒருவருக்கும் தெரியவில்லை. உயிர் எங்கு இருக்கிறது என்று ஒருவராலும் சொல்ல முடியாது. சொல்லவில்லை. நமது ஆன்மிக வழியில் வந்தவர்கள் தான் அந்த உயிர் ஸ்தானத்தை பற்றி சொல்லி இந்த வழியில் செயல் படுங்கள் என்று சொல்லி உள்ளார்கள். வேறு யாரும் இவைகளை சொல்லவில்லை. விஞ்ஞான புர்வமாக கன்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்க கூடிய விசயமும் அல்ல.

ஆன்மிக நிலையில் தவம் செய்து, நாம் நம்மை அறிய வேண்டியே இந்த உபதேசம். வள்ளல் பெருமான் அதற்கு தான் வழி காட்டி உள்ளார்.

நீங்கள் எல்லாம் இன்று உபதேசம் பெற்று உள்ளீர்கள். இறைவன் எங்கு இருக்கிறார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ..

“நமக்குள் இருக்கிறார்”. எல்லா இடத்திலேயும் இருக்கிறார். கோவிலில் இருக்கிறார். நாம் பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கிறார். இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் இறைவனை எத்தனை இடத்தில் பார்த்து உள்ளீர்கள்? எந்த கோவிலில் இறைவனை பார்த்து உள்ளீர்கள்? எங்கு போனாலும் ஒரு சிலை, ஒரு படம் , ஒரு உருவ வழிபாடு தானே இருக்கிறது!?

கடவுளை யார் பார்த்து உள்ளார்கள்? கடவுள் என்று சொல்லி நம்பிக்கையை ஊட்டி வைத்து உள்ளார்கள் தவிர நாம் பார்த்தது எல்லாம் ஒரு சிலையை தான். அது நமது நம்பிக்கை.  ஒரு சிறு குழந்தைக்கு ஒரு உருவத்தை காட்டி சொல்வது மாதிரி தான் நமது முன்னோர்கள் கோயில் கட்டி வைத்து உள்ளனர். உருவ வழிபாடு வைத்து உள்ளார்கள். இது தான் தெய்வம் என்று.  அது குழந்தைகளுக்கு பக்தி நிலையில்.

அதற்கு அடுத்த நிலைக்கு வரும் போது இது கல் தானே , ஆனால் கடவுள் என்று ஏன் சொன்னான் என்று அடுத்த நிலையில் சிந்தித்தால் அப்போது தான் கல்லான கடவுளை நமக்குள் காண வேண்டும் என்று பெரியோர்கள் சொன்னது புரிய வரும். அது ஞானம்.

LKG பாடம் மாதிரி கோயிலுக்கு போவது , பக்தி செய்வது எல்லாம். அங்கு கடவுளை கல்லாக தானே வைத்து உள்ளார்கள்.. என் கல்லாக வைத்து உள்ளனர்!? சரி நீங்கள் எல்லோரும் சாதாரணமாக கோவிலுக்கு போகிறீர்கள். போனால் என்ன செய்கீறீர்கள்? ஆண்டவா என்று எங்கு சாமி இருக்கீறாரோ அங்கு சென்று எதோ ஒரு சுலோகம் சொல்வீர்கள். பக்தியோடு பாடுவீர்கள், உங்களுக்கு என்ன என்ன வேண்டும் என்று பிராத்தனை செய்வீர்கள்.  ஆனால் நீங்கள் சொல்வது எதையாவது அந்த சாமி கேட்குமா!?

அது தான் கல் ஆச்சே. எப்படி கேட்கும். சரி இப்போ கோவிலுக்கு தான் நீங்க போறீங்க. என்ன பண்றீங்க? நீங்க தானே எதாவது சுலோகம் சொல்றீங்க, பேசிகிட்டே இருக்கீங்க, எனக்கு இது வேணும், அது வேணும் என்று கேட்டு கொண்டே இருக்கீறீர்கள். நீங்களே பேசிகிட்டே இருந்தால், உண்மையிலே அங்கே சாமி இருந்தால் அந்த சாமி என்ன பதில் சொல்லும்!? ஒரு உதாரணம் இப்போ டெலிபோன் இருக்கு, செல்போன் இருக்கு. நீங்க எடுத்து உங்க பிரெண்டுக்கு “ஹலோ” ன்னு சொல்லி நீங்களே பேசிகிட்டே இருந்தால் உங்க பிரெண்டு எப்படி பேசுவாரு. ப்ரெண்ட் பேசணும் என்றால் நீங்க என்ன செய்யணும்? நீங்க நிறுத்தனும் பேசுவதை! நீங்க பேசுவதை நிறுத்தினால் எதிராளி பதில் சொல்வான். அது போல கோவிலுக்கு போய் நீங்க பேசுறதே முதலில் நிறுத்தனும். பொலம்புறதே நிறுத்தனும்.

கோவிலுக்கு போய் அப்போ என்ன செய்யணும்… “சும்மா இருக்கனும்”. இது தான் ஞானிகள் சொன்ன விளக்கம். சும்மா இருந்தால் தான் ஆண்டவன் பேசுவது நமக்கு தெரியும். நீங்களே பேசிக்கிட்டு இருந்தால் அவர் என்ன செய்வாரு. உங்களுக்கு ஒன்னுமே கேக்காதே. கேட்கவும் முடியாதே. நீங்கள் பேசுவதை நிறுத்தினால் ஆண்டவன் பேசுவதை கேட்கலாம்.

ஏன் எல்லா கோவிலிலும் கல்லாக, சிலையாக தெய்வத்தினை வைத்து உள்ளார்கள்? அந்த இறைவனை எங்கேயும் பார்க்கலாம். எந்த கோவிலில் போயும் பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் யாரும் பைத்தியகாரர்கள் இல்லை. முட்டாள்கள் இல்லை. அவர்கள் எல்லாம் காரண காரியத்தோடு தான் எல்லாம் செய்து வைத்து உள்ளார்கள்.

அப்புறம் சிலைகளை – இறைவன் வடிவத்தை கல்லாக வைத்துள்ளார்கள். அதே கல்லையே கடவுளாக பார்க்கலாம். அதற்கும் ஞானிகள் வழி சொல்லி உள்ளார்கள். எப்படி?  நீ கல்லாக இரு. அப்போது கல்லான தெய்வம் பேசும். கோவிலில் போய் நீங்கள் பேசி கொண்டே இருந்தால் அது பேசாமல் இருக்கும். அந்த கல்லுக்கு முன் போய் நீங்க உட்கார்ந்து சும்மா இருங்க. நீங்க கல்லா இருங்க. அப்போ அந்த கல் பேசும்.

நாமலே கல்லு, நமக்கு முன் ஒரு கல் வந்திருக்கே. என்னப்பா அப்படின்னு கேட்கும். நீங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு உங்கள் எண்ண அலைகளை இல்லாமே பண்ணிக்கிட்டு சும்மா இருந்தால், கல் பேசும் – எந்த கல்லும் பேசும். இது தான் சின்ன ஒரு விஷயம். சித்தர்கள் ஞானிகள் சொன்ன விஷயம்.

கல்லும் பேசுமா என்றால்? பேசும். நீ கல்லாக இரு. நம்ம தான் என்னவெல்லாமோ பொலம்பிக்கிட்டு இருக்கிறோம்.

“சிந்தையை அடக்கி சும்மா இருப்பதே அரிதினும் அரிது காண்.”

“சும்மா இருப்பதே சுகம் அல்லாமல் வேறு ஒன்றும் துணை இல்லை.”

இப்படி எல்லா சித்தர்களும் பாடி இருக்கிறார்கள் அல்லவா.

சும்மா இருப்பது, சும்மா இரு இது தான் உலகத்தில் உள்ள எல்லா சித்தர்களும் ஞானிகளும் உபதேசம் பண்ணி உள்ளார்கள்.

இந்த உலகத்திற்கே முதல் குரு யாரு?   தட்சிணாமூர்த்தி. ஆதியிலயே சணாகதி முனிவர்களுக்கு , பிரம்ம புத்திரர்களுக்கு வந்து உபதேசம் கொடுத்தாரு. பிரம்ம புத்திரர்கள் சகல வேத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். பிரம்ம புத்திரர்கள் அல்லவா?  எல்லாம் தேர்ச்சி பெற்று எல்லாம் தெரிந்தவர்கள். ஆனால் கடவுள் விளக்கம் உண்மை மட்டும் தெரியவில்லை. “கடவுள் என்றால் யார்? என்ன? எப்படி” என்பது தெரியவில்லை.

அப்போ அவர்களுக்கு முன் தீடீர் என்று ஒரு உருவம் வந்து நிற்கிறது. உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.  நாம் கடவுளை பத்தி தானே யோசித்தோம். நமக்கு முன்னாடி திடீர் என்று ஒரு உருவம் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறதே என்று பார்த்தார்கள். அது பேசாமல் இருந்தது. அப்போ அதுக்கிடே கேட்பதற்கும் வழி இல்லை. சும்மா இருக்கிறது. அப்போ நாம கடவுள் பற்றி தானே நினைத்தோம், அப்போ அது கடவுள் தான். ஆனால் அது ஒன்றும் சொல்லவில்லையே? அப்போ அது எப்படி இருக்கு என்று பார்த்தார்கள். தட்சிணாமூர்த்தி உடைய கோலம். அந்த இருப்பு எப்படி என்று பார்த்தார்கள்.

பரஞ்சோதி மகான் “திருவிளையாடல் புராணத்தில்” எழுதி உள்ளார்.

“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை

               ஆறங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

               பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுவாய் இருந்ததனை

             இருந்தபடி இருந்து காட்டியே

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

            நினைந்து பவத்தொடக்கை வெல்வோம்”

தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அவர் நிலை எப்படி என்பதினை இந்த ஒரு பாடலில் பரஞ்சோதி மகான் சொல்லி இருக்கிறார்.  என்ன என்று பார்க்கலாம்.

சனகாதி முனிவர்களுக்கு முன்னாடி வந்து தட்சிணாமூர்த்தி உட்கார்ந்து இருக்கிறார். ஒரு கையில் அக்னி, இன்னொரு கையில் உடுக்கை. இறைவன் எப்படி இருக்கார் என்பதை விளக்குவது அவரை எப்படி அடைய முடியும் என்பதை விளக்குவது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம்.

இறைவன் எப்படி இருக்கார் என்றால் ஒளி ஒலி. இது தான் விஞ்ஞானனதிற்கும் பேஸ் (அடிப்படை). ஆன்மிகத்திற்கும் ஒளி தான் பேஸ் (அடிப்படை). ஒளியும் ஒலியுமாக இறைவன் இருக்கிறார். சக்தி சிவமாக உயர்ந்திருக்கிறார். அப்படி ஒளி ஒலியாக இருக்க கூடிய இறைவன் அதை பத்தி தான் கையில் ஏடு வைத்து கொண்டுள்ளார். அதாவது எல்லா வேதங்களும் சொல்லுவது இந்த விஷயம் தான். இறைவன் ஒளியும் ஒலியுமாக இருக்கிறான்.

சரி அந்த இறைவனை எப்படி தெரிந்து கொள்வது. இன்னொரு கையில் சின் முத்திரை. சின் முத்திரையை பிடித்து கொண்டால் இறைவனை பிடித்து கொள்ளலாம். அதாவது வேதங்களில் சொல்லப்பட ஒளியும் ஒலியுமான இறைவன் அவனை பிடிக்க வேண்டும் என்றால் சின் முத்திரையை பிடித்து கொள்ளுங்கள். இதை வாய் விட்டு சொல்லவில்லை. அவருகைய கோலம் – இருந்த கோலம் உணர்த்தியது. சின்முத்திரை என்றால் என்னது?

சின்முத்திரை எப்படி வைக்க வேண்டும்? பெருவிரலால் ஆள்காட்டி விரலின் நுனியை தொடுவது பரத நாட்டிய முத்திரை. சின்முத்திரை அல்ல அது. சின்முத்திரை என்பது ஆள்காட்டி விரலால் பெருவிரலின் மத்திய கோடினை தொடுவது. இது தான் உண்மையான சின் முத்திரை.

சின்முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். இதை சொல்லாமல் இருந்து காட்டி உள்ளார் தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் இந்த சின் முத்திரையை கையில் பிடித்து கண்ணை மூடி  கொண்டு  தவம் செய்வர். அப்படி இருந்தால் ஒன்னும் கிடைக்காது. எத்தனை ஆயிரம் வருடம் இருந்தாலும் ஒரு புரியோசனமும் இல்லை. அப்போ சின் முத்திரையோட பொருள் என்ன வென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம் எப்படி?

“பரசிவம் சின்மயம் பூரணம் ” என்று வள்ளல் பெருமான் பாடியிருக்கிறார். இறைவன் சின்மயமாக இருக்கிறார். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்பதே. நமது கண்ணின் அளவு பெருவிரலின் நுனியில் இருந்து நாடு கொடு வரை. இவ்வாறு சின்முத்திரையை பிடித்து கொண்டு நம் கைகளை பார்த்தல் அது கண் போல் இருக்கும். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்று அர்த்தம். சொல்லாமல் சொன்னவரை – தட்சிணாமூர்த்தி சொல்லவில்லை. உணர்த்தி காட்டி இருக்கிறார். புரிந்து கொள் என்று சொல்லி இருக்கிறார். சனகாதி முனிவர்கள் புத்திசாலிகள் அதனால் புரிந்து கொண்டார்கள்.

அதாவது நாம் கடவுளை நினைத்தோம், ஒரு உருவம் வந்தது அதன் அமைப்பு அதன் மூலம் உணர்த்த பெற்றது இவைகளை புரிந்து கொண்டார்கள் சனகாதி முனிவர்கள். புரிந்து கொண்டு இறைவனை அடைந்தார்கள்.

சரி சின்முத்திரையை பிடி என்றால் கண்ணை பிடித்து கொள்ள வேண்டும் என்று பார்த்தோம். சரி கண்ணை எப்படி பிடித்து கொள்வது?

ஒளியும் ஒலியுமான இறைவன் கண்களில் துலங்குகிறான். அப்போ அந்த கண்களில் உள்ள ஒளியை அறிந்து கொள். குரு மூலமாக உணர்ந்து கொள். தவம் செய் இறைவனை அடைந்து விடலாம். தட்சிணாமூர்த்தி வந்து வாய் விட்டு உபதேசம் செய்திருந்தால் அது பேசுவது அல்லவா. பேசவில்லை அவர்.  அப்போ நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதினையும் உணர்த்தினார். சும்மா இருந்தார். அப்போ கண்ணைபிடிக்கணும் சும்மா இருக்கனும் என்பதினை சொல்லமால் சொல்லி விட்டார்.

சரி எப்படி கண்ணை மூடி கொண்டா இருக்கணும்!? கண்ணை திறந்து கொண்டு இருக்கனும். அரை கண்ணாவது திறக்கணும். முழு கண்ணையும் திறந்தால் “பொவுர்ணமி திருஷ்டி “ என்று பெயர். அரை கண்  திறக்கும்  போது “பிரதம திருஷ்டி” என்று பெயர். கண்ணை முழுமையாக மூடினால் “அமாவாசை திருஷ்டி” என்று பெயர்.

தவம் செய்யும் போது  முதலில் கண்ணை மூடி குருவை வணங்கி விட்டு “பொவுர்ணமி திருஷ்டி “க்கு வர வேண்டும். பவுர்ணமி திருஷ்டியில் இருந்து கண்மணி உணர்வை பெருக்கி கொண்டு பிரதம  திருஷ்டிக்கு வந்து அப்படியே எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் இருக்காலாம். பிரதம திருஷ்டியிலயே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்  இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தினவர் தான் தட்சிணாமூர்த்தி.

“சும்மா இரு” என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். “சொல்லாமல் சொன்னவரை” – உணர்த்தி காட்டி உள்ளார், இருந்து காட்டி உள்ளார். “இருந்ததனை இருந்தபடியே இருந்து காட்டிய” இது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம். அவரை நாம் “நினையாமல் நினைக்கிறோம்”.

“நினையாமல் நினைப்பது” என்பது எப்படி? ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது. நினையாமல் நினைக்கணுமாம்! நினைக்கிறோம் என்றாலே எண்ணங்கள் வந்து விடுகிறது அல்லவா? நினைவு என்றால் எண்ணம் தானே. அப்போ எண்ணம் வந்தால் சும்மா இருக்க முடியாதே!? புரிந்து கொண்டீர்களா! நினைப்பு அப்படி என்றால் ஒரு எண்ணம் தானே. எண்ணம் என்று ஒன்று வந்து விட்டால் அப்புறம் எப்படி சும்மா இருப்பது? எண்ணம் செயல் படுமே. எண்ணம் விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் எப்படி செயல் படுவது?

“நினையாமல் ”  இதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அந்த ஒரு வார்த்தைக்கு எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள்! “நினையாமல் நினைக்கணும்” – அப்போ நினைக்க கூடாது. ஆனால் நினைக்கணுமாம். எதை? இப்போ நாம காலில் அடிபட்டு விட்டது என்று வையுங்கள் அதாவது கால் விரல் கிழிந்து இரத்தம் வருகிறது. அப்போ வேறு யாரவது பேசினாலோ அல்லது வேறு எதிலோ நமது மனம் போகுமா!? போகாது. எங்கே வலி இருக்கோ அந்த இடத்தில் மட்டும் தான் நினைவு இருக்கும். நாம் அந்த இடைத்தை நினைக்கவா செய்கிறோம்? இல்லை! உணர்கிறோம். அந்த வலியை உணர்கிறோமே தவிர நினைக்கவில்லை. “நினையாமல் நினைப்பது” என்பது இது தான்.

மெய்பொருளில், திருவடியில் கண்களில் குரு கொடுக்கிற அந்த தீட்சை என்பது அந்த உணர்வு தான். அந்த உணர்வை நீங்கள் – உணர்வை மட்டும் பிடித்து கொண்டால் போதும். நீங்கள் நினைக்க வேண்டாம். கண் இருக்கு , மெய்பொருள் இருக்கு , பாப்பா இருக்கு அதை எல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம். அதில் உணர்வு இருக்கு பார்த்தீர்களா அந்த உணர்வினை மட்டும் பிடித்து கொண்டால் போதும். இது தான் நினையாமல் நினைப்பது.

தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அமைப்பே இது தான். ஞானம். இதை இந்த உலகத்திலே ஒருத்தர் கூட சொல்லி கொடுக்க வில்லை. தங்க ஜோதி ஞான சபை தான் இதை சொல்லி கொடுக்கிறோம். வேறு எங்காவது சொல்லி கொடுக்கிறார்களா? வேறு எங்காவது நீங்கள் கேட்டு உள்ளீர்களா?  சரி இப்போ நான் சொன்னது எல்லாம் சரி தானா? நான் சொன்னது எல்லாம் சரி தான் என்பதை முருக பெருமான் வந்து அக்செப்ட் பண்றாரு. எப்படி? சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்த இறைவன் அருணகிரி நாதருக்கு முருக பெருமானாக வருகிறார். என்ன உபதேசம் செய்தார்!?

“சும்மா இரு சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.”

“பெம்மான் முருகன் பிறவான் இறவான்”.

தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திருக்கு உணர்த்தின “சும்மா இரு” ஞானத்தினை , அருணகிரி நாதருக்கு முருக பெருமான் நேரடியாகவே வந்து “சும்மா இரு” என்று சொல்லி விட்டு போய்விட்டார். அப்போ சரி தானே. அப்போ நான் சொல்லவில்லை இறைவனே சொல்லி இருக்கிறார். இது தான் உண்மை.

தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு உணர்த்தியதை முருக பெருமானாக வந்து உபதேசம் செய்து விட்டு’ போய்விட்டார். இன்று எவ்வளவோ ஆசிரமம் , எவ்வளவு குருமார்கள் என்னவெல்லாமோ சொல்லி விட்டு திரிகிறார்கள். அங்கு இருக்கிறான் இறைவன், இங்கு இருக்கிறான் இறைவன் அதே பண்ணுக இதே பண்ணுங்க மூச்சை பிடியுங்கள் வாசி யோகம் பண்ணுங்க அப்படி  என்னவெல்லாமோ சொல்லி கொண்டு  இருக்கிறார்கள். கடவுள் சொன்னதை பின்பற்றுவீர்களா அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொன்னதை பின்பற்றுவீர்களா!? தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு சொன்னாரு முருக பெருமானா வந்து அதனை உறுதி படுத்தினாரு.

சும்மா இரு. இதற்கு மேல் ஒரு உபதேசம் வேண்டுமா!? இது தான் ஞானம். அந்த சும்மா இருக்கிறது எப்படி “நினையாமல் நினைந்து” – இறைவன் எப்படி நம் கண்களில் – திருவடியில் துலங்குகிறாரோ அதை உணர்ந்து  நினையாமல் நினைந்து கிட்டு  சும்மா இருந்தால் போதும். நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். இறைவனுக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம். சும்மா இருந்தால் போதும். இது தான் உலகத்தில் மிக உயர்ந்த ஞானம்.

இந்த ஞானம் எங்கு இருக்கிறது என்றால் இந்தியாவில் தான் இருக்கிறது. இது இந்து மதம் இல்லை. அதையும் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சனாதான தர்மம். சனாதான தர்மம் என்றால் ஆதி காலத்தில் இருந்து துலங்ககூடிய மனிதன் மனிதனாக வாழ கூடிய வாழ்க்கை நெறி. இந்த உலகத்தில் உள்ள எல்லாருமே இறைவனுடைய பிள்ளைகள் தானே. அப்புறம் என்ன இந்து தான் பெரியவன், முஸ்லிம் தான் பெரியவன், கிறிஸ்டியன் தான் பெரியவன் என்று சொல்ல என்ன இருக்கிறது. ஒன்னுமே இல்லை. எல்லாருமே இறைவனுடைய பிள்ளைகள் தான். எல்லாருமே இறைவனுடைய பிள்ளைகள் என்கின்ற போது எல்லாருக்கும் அந்த சக்தி இருக்கு. எல்லாருக்கும் அருள் புரிவார். எப்படி? இப்படி தான் (மேல் கூறியவாறு தான்). இதை உணர்ந்து கொண்டால் போதும். அப்போ மனிதன் மனிதனாக வாழும் போது அவர்கள் எல்லாருக்குமே இது ஒன்று தான்.

இப்போ திருக்குறள் இருக்கு 1330 திருக்குறள் இருக்கு. இன்று திருக்குறளை படிக்காதவர்கள் இல்லை. போட்டி வைக்கிறார்கள். திருக்குறள் அறிஞர்கள் நிறைய பேர் இருகிறார்கள். பெரிய பெரிய வித்துவான்கள் இருக்கிறார்கள். ஒரு திருக்குறளுக்கு அர்த்தம் தெரிந்தால் போதும். ஞானம் கிடைக்கும்.

“ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மரணமில்லா பெரு வாழ்வு பெறுவான்.  மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் – செத்து போவான்.

அப்போ மரணமில்லா பெரு வாழ்வு அடைய வேண்டும் என்றால் , உயிர் வாழ வேண்டும் என்றால் ஒத்தது அறியணும். ஒத்தது எது? கண்கள் தான். கண் தானம் யார் வேண்டும் என்றாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் அல்லவா! யார் கண்ணை யாருக்கு வேண்டுமென்றாலும் எடுத்து வைக்கலாம் அல்லவா! அப்போ உலகத்தில் உள்ள அனைவர்க்கும் கண் தானே ஒன்று போல இருக்கிறது.  ஒத்து இருக்கிறது. வேறு எதாவது இருக்கிறதா.

உலகத்தில் உள்ள 720 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை , ஒன்று போல இருப்பது கண்கள் மட்டும் தான். அந்த கண்கள் ஒன்று போல் இருக்க கூடிய கண்களில் தான் இறைவன் துலங்குகிறார். ஒளியாக. ஆன்ம ஜோதியாக துலங்குகிறார். உள்ளே இருக்கிறார். கண்களில் துலங்குகிறார். கண்களில் இறைவன் இல்லை. கண்களில் துலங்குகிறார். உள்ளே இருக்காரு. சிரசின் நடுவில். உள்ளுக்குள் ஆத்மா ஜோதியாக இருக்கிறார். அதன் துலக்கம் நம் கண்களில். இதை தெரிந்தவன் உயிர் வாழ்வான். தெரிந்தவன் அதற்கு கைங்கரியம் பண்ண தெரியனும் அல்லவா. தெரிந்து இருப்பான் அல்லவா. உயிர் வாழும். இதை தான் வள்ளல் பெருமான் மரணமில்லா’ பெருவாழ்வு என்று சொன்னாரு. இதை தான் சொல்லி கொடுத்தாரு.

எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இதை தான் சொன்னார்கள். அனால் எல்லாரும் பரிபாசை, இரகசியம் என்று மறைத்து விட்டார்கள். இதனை சொல்லுவதை விட்டு வேறு எதை எல்லாமோ சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இறைவன் எங்கு இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ அப்படி போய் பார்ப்பது தானே புத்திசாலித்தனம். அதை விட்டு காற்றை அடித்து கொண்டு , அங்கு போய் இங்கு போய் சுற்றி கொண்டு இருந்தால் ?

எண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம். சிரசில் தான் இறைவன் இருக்கிறார். அந்த சிரசில் இருக்கும் இறைவனை அடைவதற்கு முதுகு தண்டிற்கு கீழிருந்து வர வேண்டுமாம்? இறைவன் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறார் (சிரசில் நடுவில்) , அவரை தேடி எங்கேயும் அலைய வேண்டாம். கைலாயம், அங்கு இங்கு என்று ஒரு இடமும் சுற்ற வேண்டாம். கூப்பிடு தூரத்தில், கைக்கு எட்டும் தூரத்தில் எளிமையாக இறைவன் துலங்குகிறார். அவரை அடைவதற்கு சிரமமே இல்லை. கொஞ்சம் முயற்சி வேண்டும்.

இன்றைக்கு சாதாரணமாக ஒரு டீ குடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா. என்ன எல்லாம் வேண்டும்.  பால் வேண்டும், டீ வேண்டும். சரி டீ இருந்தால் மட்டும் போதுமா? சமையல் அறையில் சென்று அடுப்பை பற்ற வைக்க வேண்டும். யாரவது ஒரு ஆள் ஐந்து நிமிடம் அதை சூடாக்கி இருத்தி தரணும்.

ஒரு டீ குடிப்பதற்கு இவ்வளவு சிரமம் பட வேண்டும் என்றால் இறைவனை அடைவதற்கு கொஞ்சமாவது சிரம பட வேண்டாமா?சும்மா மந்திரத்தில் மாங்காய் விழுவது மாதிரி இறைவன் வர வேண்டும் என்றால் எப்படி வருவார்!? சிரமம் பட வேண்டும். கஷ்டப்பட்டால் தான் வேலை செய்தால் தான் கூலி. சும்மா கிடைக்காது ஒன்னுமே இந்த உலகத்தில்.

இன்று அரசாங்கம் டிவி , கிரைண்டர் , மிக்சி எல்லாம் சும்மா குடுக்கிறான். எப்படி குடுக்கிறார்கள். நம்ம கொடுக்கிறோம் வரி பணம்.  அதனை ஒரு கம்பெனிக்கு கொடுக்கிறது அரசாங்கம். யாருக்கோ பணம் கொடுத்து , யாருக்கோ செய்து எப்படியோ தான் வந்து சேருகிறது நம்மிடம். ஒன்னுமே சும்மா வருவது இல்லை. எதுவுமே சும்மா கிடைக்காது. கொஞ்சம் உழைக்கணும். பாடு படவேண்டும்.

“அத்ம ஞானத்திற்கு” கண்டிப்பா பாடு பட்டே ஆகா வேண்டும். “சும்மா இருக்கணும்” . சும்மா இருக்கிறது என்பது வேறு, பாடு படுவது என்பது வேறு. உழைக்கிறது என்பது வேறு. உழைக்கணும் சும்மா இருப்பது தான் பெரிய உழைப்பு. அந்த மாதிரி உழைத்தால் எல்லாம் கிடைக்கும்.

வணக்கம்.

Reader Comments (5)

 1. Good message about life. March 3, 2017 at 4:43 pm

  Everyone should know about god as above explained.

 2. M. Eswaran September 7, 2018 at 4:17 am

  Super

 3. Pushparagam November 5, 2018 at 10:00 am

  அருமை அருமை
  ஆனந்தம் பேரானந்தம்
  வாழ்க வளர்க

 4. Velayudham December 5, 2018 at 1:10 am

  Kannai,kannanai katiah Sri baluvirkku anandakoti namaskarankal.

 5. Velayudham December 5, 2018 at 1:11 am

  Really he opened our Eyes.

What do you think?