ஞான பதிவுகள்

திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து

 

எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு.

இறைவனை போற்றியும் , அவன் தன்மைகளை புகழ்ந்தும் , ஜீவர்களுக்கு அருளும் விதத்தை விளக்கியும் ஒன்று , இரண்டு என்ற எண் கணக்கில்  திருமூலர் பெருமான்  சாத்திரங்களின் சிறந்ததான திருமந்திரத்தில்  கடவுள் வாழ்த்தாக பாடியுள்ளார்.

இறைவன் யார், அவன் அருள் எப்படிபட்டது அவனை அடையும் வழி ஆகியவை விரிவாக விளக்கி உள்ளார் திருமூலர் பெருமான். ஒவ்வொருவரும் அறிந்து உணர வேண்டிய பாடல் இது.

இப்பாடலையும் , இப்பாடல் விளக்கத்தினையும் எமது குரு நாதரின் “மந்திர மணி மாலை” (திருமந்திரம் விளக்க உரை ) புத்தகத்தில் இருந்து தந்துள்ளோம்  படித்து பயன் பெருக.

 

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்    தான்ஐந்து 

வென்றனன் ஆறு விரிந்தனன் எழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே

                                                              –  திருமந்திரம் முதல் தந்திரம் கடவுள் வாழ்த்து

 

ஒன்றவன் தானே    –     இறைவன் ஒருவனே. பரமாத்மாவாகிய ஏக இறைவனே ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளிலும் துலங்குகிறார். பரமாத்மாவே ஜீவாத்மா. அணு அளவு ஒளியே நம் ஜீவன்.

இரண்டவன் இன்னருள் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனே இரு விதமாக ஜீவர்களுக்கு அருள் பாலிக்கின்றான். ஒன்று அறக்கருணை , மற்றது மறக்கருணை. நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க்  கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து  ஆட்க்  கொள்வது மறக்கருணை.

நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய விழிகள் இரண்டு.  ஆக இறைவன் அருள் விளங்குவது நமது இரு கண்களில்.

நின்றனன் மூன்றினுள்உடலில் உயிராகி துலங்கும் இறைவன் , சூரிய கலையாக சிவமாக வலது கண்ணிலும் , சந்திர கலையாக கலையாக சக்தியாக இடது கண்ணிலும் . இரு கண்களும் உள்ளே சேரும் இடத்தில் அக்னி கலையாகவும் ஆக முன்று நிலையாக விளங்குகிறார். சர்வ வல்லமை படைத்த இறைவன் முக்காலமும் , மூன்று உலகும் விளங்கும் பரம் பொருளாகும்.

நான்கு உணர்ந்தான் – நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றால் உணர்த்தபடுபவனே இறைவன். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு வழி முறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாகுக்கிறது.   அவைகளை அந்தகரணம்  நான்கு வழி அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் வழி உணர வைத்து முக்தியை தருகிறது.

ஐந்து வென்றனன் இறைவன் பஞ்ச கிர்த்தியம் புரிபவன். படைத்தல் , காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்து தொழிலையும் செய்து உயிர்களை கடைதேற்றுகிறான். மனிதன் ஐம்புலன்கள் வழி சென்றால் துன்பமே. ஐம்புலன்களை இறைவன் வழியில் திருப்பினால் மட்டுமே பேரின்பம் பெறலாம். கண்கள் இறைவன் திரு உருவத்தினையே காண வேண்டும். காதுகள் இறைவன் திரு நாமத்தையே கேட்க வேண்டும். வாய் இறைவன் திரு மந்திரத்தையே துதிக்க வேண்டும். மூக்கு இறைவனுக்காக செய்யும் பூஜையின் தூப தீப நறுமணத்தினையே நுகர வேண்டும். உடலால் இறைவனுக்கு எந்த விதத்திலாவது உழைக்க  வேண்டும்.     நமது பொறி புலன்களை இறைவன் பக்கம் திருப்பினால் மட்டுமே நாம் வாழ்கையில் வெற்றி பெறலாம்.

ஆறு விரிந்தனன் – சிவம் ஐந்து முகத்தோடு ஆறாவது அதோமுகத்துடன்   ஒளியை நெற்றி கண்ணிலிருந்து வெளியாக்கி ஆறுமுக கடவுளானார். நமது உடலில் ஆறு ஆதாரமாகி உடல் இயக்கத்திற்கு காரணமாகிறார். நமது இரு கண்கள் ஆகி வெள்ளை விழி , கருவிழி , கண்மணி என மூன்று இரண்டு ஆறுமுக – இரு கண் ஒளியாகவும் துலங்குகிறார். இரு கண் உள் ஆறு போல ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார். நெருப்பாறு. நமக்கு ஆறாவது பகுத்தறிவாக துலங்குவதும் அந்த இறைவனின் ஒளியே.

எழு உம்பர் சென்றனன் –  ஆறு ஆதரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ரதளத்தையும்  ஊடுருவி நடுவில் துலங்குபவன். ஈரேழு உலகங்களையும் தாண்டி அதற்கு அப்பாலும் எல்லையில்லா பெருவெளியில் பேரொளியாக துலங்குபவன். எழு வகை பிறவிகள் எல்லாவற்றிற்கும் உள்ளிருந்து ஒளிரிந்து அருள் மழை பொழிந்து மோட்சம் அருளும் பிறப்பு இறப்பு இல்லாத பெருந்தகை.

தான் இருந்தான் உணர்ந்து எட்டே – இப்படியாக சர்வ வியாபியான சர்வ வல்லமை படைத்த பேரருளாளன் , “தான்” சிறு ஒளியாக – நம் உயிராக நம் ஒன்பது வாசல் உடலில் இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான். “தான்” ஆகிய இறைவன் “நான்” ஆகி என் உடலில் கோயில் கொண்டுள்ளான். இதை நாம் உணர்ந்து தான் அறிய முடியும். நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி “எட்டேயாகும்”. எட்டு என்றால் எண்ணில் “8” எழுத்தில் “அ” நமது கண்களே எட்டு. அதை நீ எட்ட வேண்டும். எதற்கு? உள் இருக்கும் ஒளியான , ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டிப் பிடிக்கவே.

கட்டிப்பிடி அவன் திருவடியாகிய நம் கண்களை. இறுக பற்றிப் பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை. இறைவன் நம் கண்களில் ஒளியாக துலங்குவதை. உணர்ந்து தவம் செய்தாலே உள்ளே நம் ஜீவனாக அந்த பரமனே இருப்பதை உணர முடியும். திருமந்திரத்தில் மூவாயிரம் பாட்டும் முதிர்ந்த ஞானத்தினையே ஊட்டுகிறது என்பதற்கு இந்த முதல் பாடலே போதுமான சாட்சியாகும். 

 

 

Reader Comments (2)

  1. Badri February 28, 2016 at 7:00 am

    எளிமையாகவும் அழகாகவும் கொடுத்தமைக்கு நன்றி .
    என்னை போன்ற எளியவர்களுக்கு புரியும்படி தந்தைக்கு , மிக நன்றி , வணக்கம்

  2. Nantri April 21, 2016 at 8:20 pm

    ஒளியாக

What do you think?