ஞான பதிவுகள்

இரண்டு குரு

இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :-

எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார் வழி காட்டுகிறாரோ-இவ்வுலக வாழ்க்கையை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ-இறைவன் இத்தன்மையன்,நீ இத்தன்மையன்-நீ எப்படி அதுவாக வேண்டும் என உரைக்கிறாரோ அவர்தான் குரு.

.

குருவாக ஒருவா் வந்துதான் சொல்ல வேண்டும் என்பதல்ல. பல ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம் .அந்நூலாசிரியரே மானசீக குரு ஆகலாம்.ஏதாவதொரு இயற்கை தூண்டுதல் நமக்கு குருவாகலாம்.நூற்களோ,இயற்கையோ,மனிதனோ எப்படியாயினும் சுட்டிக் காட்டிவிட ஒரு குரு தேவை.அவரவா் நிலைக்குத் தக்கபடி அமையும்மெய்ப்பொருள் உணாந்த ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது.”குருவில்லா வித்தைபாழ்’’ என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க. நாம் பிறந்ததிலிருந்து நமக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குரு உண்டு. முதலில் தாய்,இதுதான் தந்தை எனச் சுட்டிக் காட்டுகிறார்.தந்தை நாம் கல்விகற்க பள்ளியைச் சுட்டிக் காட்டுகிறார்.அரிச்சுவடியை சுட்டிக் காட்டுகிறார் ஒருவா்.படிப்படியாக பல பாடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள் பலா். நம் நண்பா்கள்,வாகனங்கள் ஓட்ட ஒருவா் பயிற்றுவிக்கிறார். இப்படி பலபலவும் பற்பலராலும் சுட்டிக் காட்டப்பட்டு உணர்ந்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி காட்டுபவை.

தீயபழக்க வழக்கமுடையவனோடு சோ்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீயவாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.இவா்களெல்லாம் குரு அல்ல.மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை சுட்டிக் காட்டுபவரே உண்மை குரு.அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசைபடுத்தபட்டுள்ளது.மாதா பிதாவை எல்லோரும் அடைந்திருக்கிறோம் குரு என்று ஒருவரை பற்றினால்தான் அவா் இறைவனை சுட்டிக்காட்ட நாமும் உணா்ந்து தெய்வமாகலாம். இன்றைய மனிதன் மனிதனாகவா வாழ்கிறான்!அன்றைக்கே சித்தா்கள் பாடிச் சென்றுள்ளனா். எப்படி என்றால் மனிதரில் பறவையுண்டு, மிருகம் உண்டு,நீர் வாமும் பிராணி உண்டு,நாய்,பேய் உண்டு,மனிதரிலும் மனிதனுண்டு,தேவனுண்டு,தெய்வமுண்டு என பலவாறாக கொண்டுள்ள குணத்திற்குத் தக்கவாறு மனிதன் இருக்கிறான் என்கின்றனா் அவனுக்கு குரங்கு புத்தி-ஏண்டா நாய் மாதிரி அலையுறே-அவனுக்கு பேய்க்குணம் -அவனைப்பாரு பண்ணி மாதிரி- இப்படி பலா் பலவாறாக பேசுவதைநாம் அன்றாடம் கேட்கத்தானே செய்கிறோம். என்ன இருந்தாலும் இவ்வளவு துன்பத்திலும் அவன் நம்மை கஷ்டப்படுத்தவில்லையே அவன்தான்யா மனுஷன் இப்படியும் நம்மில் பலரும் பேசுவதையும் கேட்கிறோமல்லவா?

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.அதற்கு நம் முன்னோர் அறிவுறுத்திய அறவழி நடக்க வேண்டும் . கீழான எண்ணங்கொண்டு செயல்படும்போது மக்களால் தூற்றப்படும் மனிதன் தன் குண மேம்பாட்டால் தேவனாகவும், முடிவில் தெய்வமாகவும் தன்னை வளா்த்துக் கொள்ள வேண்டும்.மாந்தருள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் நம் தாய்க்கு நம்மை பெற்ற பொழுதைவிட ஊரெல்லாம் நம்மை சான்றோர் என போற்றி வணங்கும் நிலையே பெரும் ஆனந்தம் தருவதாகும். கண்கண்ட தெய்வம் தாய் தந்தையா் மகிழ உத்தமனாக வாழ்ந்து வெளியிலே கண்ட தெய்வத்தை-அல்ல தன் அகத்திலே கண்ட தெய்வத்தை ,கண்மூலமாக கண்ட பரம்பொருளை அடைவதே நாம்பெறும் பேறுகளில் மிகமிகச் சிறந்தது ,தலையானது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒருமுறை சென்னை திருவொற்றியூரில் குடிகொண்டுள்ள தியாகராச பெருமானையும் வடிவுடை மாணிக்க அம்மையும் வழக்கம்போல் தரிசிக்கச் செல்கிறபோது,ஒரு தெருவில் திகம்பர சாமியார் ஒருவா் நின்று கொண்டு வருவோர் போவோரையெல்லாம் நாய் போகிறது,கழுதை போகிறதுஎனக்கூறிக் கொண்டிருந்தவா் தெருமுனையில் வள்ளலாரை பார்த்ததும் தன் உடலை கையால் மறைத்துக்கொண்டு அதோ ஒரு உத்தமா் வருகிறார் எனக் கூறினார். வள்ளலார் அன்றே அந்த சாதுவால் உத்தமராக மாமனிதனாக உலகுக்கு அடையாளம் காட்டப்பாட்டுள்ளார்கள். இந்த மண்ணிண் மைந்தரை இறைவனால் நாமுய்யும் பொருட்டு வந்தவரை வள்ளலாரை சற்குருவாக ஏற்று அவா் சுட்டிக் காட்டும் வழி நடந்தால் நாமும் அன்னாரைப் போல் மரணமிலா பெருவாழ்வு அடையலாம்.

இதுவரை தோன்றிய அனைத்து ஞானிகள் கூற்றையும் ஒருங்கே செம்மைப்படுத்தி நமக்கு எளிதாக மேனிலை அடைய வழிகாட்டுவதில் வள்ளலார் முதன்மையானவராகிறார். வாடிய பயிரைக்கண்டு வாடிய அந்த இரக்கத்தின் திரு உருவம், ஜீவா்களாகிய நாம் மரணமிலா பெருவாழ்வு அடைய வேண்டும் என சதா காலமும் இறைவனிடம் மன்றாடினார்.வெறும் உபதேசம் மட்டும் செய்யவில்லை. தானும் மரணமிலா பெருவாழ்வு நிலையடைந்து உலகா்,அனைவருக்கும் நம்பிக்கையூட்டினார் வள்ளலார். வாழையடி வாழை என வந்தத் திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவனன்றோ என்று அவரே தன்னைப் பற்றிக் கூறியதை நாம் உணா்வோமாக! இந்த’ கண்மணி மாலை’ யில் ஆரம்பம் முதல் கடைசி வரை திரும்பத் திரும்ப மெய்பொருள் சுட்டிக் காட்டப்பட்டடுள்ளது. வள்ளலாரின் இரக்க குணத்தின் கடுகு அளவு என்னிடமும்புகுந்து அதனால் உண்மை விளக்கங்கள் எந்த இரகசியமுமில்லாமல் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது.என் ஆக்கத்திற்கு ஊக்கம் நல்கி என்னுள்ளிருந்து வெளியிடுபவரும் அவரே .இந்நூலைக் கண்ணுறும் ஒவ்வொருவரும் மரணமிலா பெருவாழ்வு அடைய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் அருளும், சற்குரு இராமலிங்க சுவாமிகள் ஆசியும் நல்குவா் !உறுதி!

.

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவா்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே முட்டாத பூசையென் றோகுருநாதன் மொழிந்ததுவே. “என பட்டினத்தாருக்கு குரு மெய்ப்பொருளை உபதேசித்துள்ளார்.

வெட்டாத சக்கரம் -வெட்டி வட்டமாக்கப்பட்ட சக்கரம் அல்ல நமது கண்மணி.அது வெட்டப்படாததும் ஆகும் .பேசினால்தானே மந்திரம் பேசாவிட்டால் மெளனம்.கண் பேசாது அது தான் மெளனம்.நமக்கு மந்திரம் கண்மணியே.வேறொருவா்க்கும் எட்டாத புட்பம் நம் கண்மலா்.நம்மைத் தவிர வேறொலருவராலும் எட்ட முடியாதல்லவா? கண்ணிலே இறைக்கப்படாமல் நீர் உள்ளதல்லவா ? நினைக்க நினைக்க வற்றாத கங்கைபோல் பெருகுமல்லவா?இது தான் இறையாத தீர்த்தம்.இனி முடிந்து கட்டாதலிங்கம்.திருமூலர் கூறிகிறார் .தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் என்று . ஜீவன் கண்ணில் ஒளியாக உள்ளது என ஏற்கனவே கண்டோமல்லவா?கண்ணே இனி முடிந்து கட்டாத லிங்கம்.கருதாத நெஞ்சம்-எதையுமே கருதாமல் ஆனால் எல்லாவற்றிக்கும் மூலமான ஜீவ ஒளியானது நம் நினைவுகள் புறப்படும் இருதயம் -இரு உதயம்- நெஞ்சம் ஆக உள்ள கண்ணில் தான் உள்ளது.

எல்லோர் கருத்துக்கும் எட்டாத இந்த சாதனையை என் குருநாதன் மொழிந்தான் என்கிறார். இவ்வண்ணமே சிவ பூஜை செய்ய வேண்டும்என இயம்புகிறார் சிந்தித்து உணா்க.

இதுபோலவே எல்லா ஞானிகளும் ஒளியை பற்பல பெயா்களில் கண்மணியில் துலங்குவதை இயம்பினார் திருவடி -மெய்பொருள்- மூலம் -மௌனம் -புருவமையம்-கருநெல்லி-வெட்டாத-சக்கரம்-பூரணம்-அண்டஉச்சி-உந்தி-கமலம்இன்னும் பற்பல பெயா்களில் கண்ணையேகுறிப்பிடுகின்றனா். சலனமில்லாது சிந்தித்து தெளிந்து உறுதி கொள்ளுங்கள்.

விஷ்னு ஆலயங்களில் சடாரி சார்த்துதல் என்றோரு வழக்கம் உண்டு. தலையில் அணியும் கிரீடம் ஒன்று கொண்டு போகின்ற பக்தா்கள் தலையில் தொட்டு எடுப்பார்கள் .அதன் மேல்பகுதியில் இரு பாதுகைகள் செதுக்கப்பட்டிருக்கும்.இறைவனுடைய திருவடி எனச் சொல்வர்.அதை ஏன் நம் தலையில் வைக்கிறார்கள்?இறைவனின் இரு திருவடிகள் நம் தலையில் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்வதேயாகும்!அதாவது இரு கண்களே இரு திருவடிகள் என்பதனை குறிப்பால் உணர்த்துவர். இதற்கே இந்த சேவையை ஏற்படுத்தினர்.

மூலம் என்றால் எல்லாவற்றிக்கும் மூலமானது-முதன்மையானது-ஆதிகா்த்தா-இறைவன் எனப்படும். நம் உடலில் மூலம் கீழே என்பா் .அது உடம்பாகிய வீட்டின் புழக்கடை வாசல் பின்வாசல் .இறைவன் வீட்டின் பின்னாலா இருப்பார்,முன்னால்தானே? எல்லோரும் பார்க்கும்படியாக அம்பாலமாக தலைக்கு முன்னால் கண்ணில் ஒளியாக ஆடிக் கொண்டிருக்கிறான். மூலகா்த்தா அவன்தானே!அவன் ஆடும் இடமே மூலம் .

திருமூலா் கூறுகிறார், “தலையடியாவது உச்சியிலுள்ளது மூலம்”,” எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” சிரசில் முக்கியாமான உறுப்பு கண் தலையில் இறைவன் திருவடியாக ஒளி- கண் உச்சியிலுள்ளது மத்தியிலுள்ளது அதுவே மூலம் .சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறக்கும் .கண்ணே -மூலம் -திருவடி எனப்படுகிறது.

புருவமையம் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் நாம் பொட்டு வைக்கிறோம். புருவமையம் என்றால் எல்லோரும் இதைத்தான் சொல்வா். சிந்தியுங்கள் .இரு புருவமையம் என்றா சொன்னார்கள்? புருவமையம் ஒரு புருவத்தின் மத்தி அதன் கீழே உள்ள கண் இதை குழு உக்குறியாகச் சொல்லி வைத்தனா். காரணம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.சிந்தித்து சிந்தித்து தெளிவுபட வேண்டும்.அப்போதுதான் அங்கே உறுதி பிறக்கும் ,அங்கேதான் ஒளி பிறக்கும் .அதற்காகவே பரிபாஷையாக சொல்லி வைத்தனா். புருவமையம் என்றால் கண் என எல்லா சித்தா்களும் வெளிப்படையாகவே சொல்லி வைத்துள்ளனா்.சித்தா், நூற்களை ஆராயின் அது புலப்படும்.இதை ஏன் வெளியிடுகிறேன்என கேட்கிறீர்களா?

எழுதியவன் ஏட்டை கெடுத்தான்,படித்தவன் பாட்டைக் கெடுத்தான்என்பது போல முறையாக குருவழி அறியதோரும், அறிவில்லாதோரும் ஞானிகளின் நூற்களை முட்டாள் தனமாக அர்த்தம் பண்ணி குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழிவிந்தமாரே என திருமூலர் உரைத்தது போல் பாமரா்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனா்.

மேலும் உண்மை தெரிந்த பெரிய மடாதிபதிகளும் சாமியார்களும் தனக்குப் பின் தன் மடத்துக்கு அதிபதியாகின்றொருவருக்கு மட்டுமே போதித்து மறைபொருளை மறைந்துபோகச் செய்துவிட்டனர். பெரும்பாலான மடாதிபதிகள் மெய்ப்பொருள் அறியாதவர்களாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதே.வெறும் சரியை, கிரியைகளிலேயே காலத்தை ஒட்டி விடுகின்றனர். அவா்களுக்கு மடத்தின் சொத்துக்குகளை,கணக்கு வழக்குகளை நிர்வகிக்கவே நேரம் போதவில்லை ,பின் எங்கே மக்களுக்கு உண்மை உணர்த்துவது? சிலர் சன்னியாசம் பெற்று மடாதிபதியாகின்றனர். உடலெங்கும் தங்கப் பூண் கொண்ட உத்திராட்சம், வைரம் பதித்த ஆபரணங்கள், பட்டுத் துணிதான். காவிவேட்டி பவனிவர ஏஸி கார் ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் எதைத் துறந்தார்கள்?சன்னியாசி என்று சொல்வதற்கு ! மடத்திலே வித விதமான பூஜை,சாமிக்கு படைக்க பலவித பதார்த்தங்கள் சாமியா சாப்பிடுகிறது?ஆசாமிகள்தான் தின்று தீர்க்கிறார்கள். இப்படி தின்றால் எங்கே ஞானம் வரும் ? வயறுதான் பெரிதாகி வரும்.நல்ல ஒரு சாதகன் என்றால் சாதனை செய்யச் செய்ய எலும்பும் உருகுமே!ஊன் உருகி உளம் உருகி உன்மத்தம் பிடித்து என ஞானியர் பாடினார்களே!

.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன

 இங்கார் சுமப்பார் இச்சரக்கை -ஏரகத்து செட்டியாரே

மங்காத சீரகம் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்

தங்காயம் தங்கமென ஆக்குதற்கு “

வெங்காயம் -வெம்-காயம், சுக்கானால்,வெந்தயத்தால் வெந்த-இதயத்தால்,ஆவதென்ன,இங்கார் சுமப்பார் இச்சரக்கை- இங்கு யார் சுமப்பார் இந்த உடலை, ஏரகத்து செட்டியாரே-திருவேகரத்தில் குடியிருக்கும் ஆண்டவனே,மங்காத சீரகம்-ஒளி பொருந்திய சீர்- அகம், தந்தீரேல், வேண்டேன்,பெருங்காயம்-பெரும்-காயம்,தங்காயம்- தம்-காயம் தங்கம் என ஆக்குவதற்கு.இப்பாடலின் பொருள் திருவேரகத்தில் அமர்ந்திருக்கும் இறைவனே என் உடலை தங்கமென மாற்றுவதற்கு எனக்கு ஒளி பொருந்திய உன் சீர் ஆகிய கண்ணை தா என்கிறார். அப்போது என் வெம்மையான காயம் சுக்குபோல் வற்றும் வெந்த இதயத்தால் எனக்கு கேடு ஒன்றும் இல்லை. எனக்கு பெரிய பருத்த உடல் வேண்டாம் என கூறுவதாக உள்ள மிக அருமையான பாடல். எனவேஆன்மாக்களே,உடலை பெருக்காதீர்கள்,மனதை விரிவடையச் செய்யுங்கள். உங்கள் பணியால் மாக்கள் மக்களாக உயரவேண்டும். மக்களோடு ஐக்கியமாகி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணிபுரியுங்கள் இறைவன் அருள்வான் .எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து போய்விடுவீர்கள்.

நல்வழிப்படுங்கள் ,நல்வழிப்படுத்துங்கள்.இங்கு நாம் தெரிந்து கொண்டதை எல்லோரும் அறியட்டுமே என எண்ணியதால் இக் கண்மணி மாலை உருவானது.

இதுவரை நாம் பார்த்தது குருவைப் பற்றி!காரிய குருவைப் பற்றித்தான் !!”காரிய குருவைவிட்டுக் காரண குருவை கண்டு” என கணபதிதாசன் நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு குரு உண்டு. இரண்டாவது குருவைப் பெற்றவன்தான் இறைவனை அடைய முடியும். வேறு வழியே கிடையாது.முதல் குருவைப் பற்றியே- காரியகுருவைப் பற்றியே இதுவரைக் கண்டோம். காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணமான ஆத்மாவைப் பற்றி அறியலாம்!

எவ்வளவுக்கெவ்வளவு சாதனை தீவிரமாக செய்து முன்னேறுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின் தரிசனம் நமக்குக் கிடைக்கும். இத்தூல உடலினுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே நமக்கு இரண்டாவதாக காரணகுரு ஆகிறார்.அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொருஅடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும். காரியகுருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-ஆத்ம தரிசனம். இந்த காரணகுருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார்.காரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.”சூட்சுமத்தில் இருக்குது மோட்சம்” என முன்னோர் கூறுவர். சூட்சும உடலாகி ய ஆத்மாவை அடைந்து அதனால் தான் -அம்மயமாகித் தான்-மோட்சம்-பரகதி-மரணமிலா பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள் பறைசாற்றிச் சென்றதை நாம் உணர்வோமாக!

அன்பர்களே,இன்றைய உலகில் மக்களில் நிம்மதியற்று அலைகிறவர்களே அதிகம் . அவர்களை வியாபார நோக்கில் பல சாமியார்கள்,ஆசிரமங்கள் தியானம் சொல்லித் தருகிறேன் எனக்கூறி பலவாறாக ஏமாற்றி பிழைக்கிறார்கள். ஒரு சிலர் ஓரளவு நல்ல விஷயங்களை கூறுகிறார்கள்.பாராட்ட வேண்டுயதுதான். எப்படியோ சீர்கெட்டு அலையும் மனிதனை ஓரளவு ஆன்மிகம் பற்றி சிந்திக்க வைத்து விடுகிறானே!அதுவே நல்லதுதானே!ஏதாவது வழிகிடைக்காதா என அலையும் மனிதன் அற்ப சித்து விளையாட்டில்,போலி வேஷதாரிகளிடம் வெகு சுலபமாக சிக்கி விடுகிறார்கள்.

சிலர் சிலகாலத்திலேயே மீண்டு விடுவார்கள். சிலர் கடைசிவரை உருப்படுவதில்லை. செத்தால் தெரியும் செட்டியார் நிலைமை என்றொரு பழமொழி உ ண்டு.இதன் பொருள் -ஒரு மனிதன் முடிவு எப்படி என்பதை நாம்பார்க்க வேண்டும். அதை வைத்து அவர் நிலையை தீர்மானிக்கலாம். எப்படியென்றால் ,பிறந்துவிட்ட மனிதன் இறந்து போகிறானா?எப்படி இறக்கிறான்?அவஸ்தைப்பட்டு-நோய்வாய்ப்பட்டு-துன்பப்பட்டு இறக்கிறானா?சுகமாக சாகிறானா?இல்லை தன் உடலில் உயிரை அடக்குகிறானா?ஒடுங்கி இருக்கிறானா?சமாதியில் சொல்லி இருக்கிறானா?சாகாமல் இருக்கிறானா?என பாருங்கள். மளையாத்தில் இறந்தவர்களை அழகாக சொல்வார்கள் சத்து போயி என்று. அதாவது சத்தாகிய ஜீவன் உடலை விட்டுப்போய்விட்டது,இனி இது சவம் என்று பொருள்!தமிழில் செத்துப் போனான் என்பார்கள். உடல் செத்து சீவன் போனான் என பொருள்.இங்கேதான் ஆன்மீகம் ஆரம்பம். நாம் யாரை மகான் ஞானி சித்தர் குரு என்றெல்லாம் அழைக்கிறோம்?சாகா வரம் பெற்றவர்கள்-இறைவனோடு ஜோதியாக கலந்தவர்களை-ஜீவனை தன் உடலிலேயே அடக்கிய ஜீவன் முக்தர்களை ஆன்றவிந்தடங்கிய பெரியோர்களைத்தான் போற்ற வேண்டும். சித்தர்களை ஞானிகளை சிரஞ்சீவி மான்களைத்தான் வணங்க வேண்டும். இதுதான் அறிவுடைமை.

செத்தவனையெல்லாம் குருவாக கொள்ளாதீர்கள்.சொன்னபடி வாழ்ந்து காட்டிய ஞான வள்ளல்கள் வழிநடப்போம்.ஒப்புயர்வற்ற ஞானமார்க்கம் எது என பகுத்தறியுங்கள்.அப்போதுதான் உங்கள் ஜென்மம் கடைத்தேறும். கடந்த நூற்றாண்டிலே நம்மிடையே வாழ்ந்த ஞானி -இப்போதும் ஒளியுடலாக நம்மோடு சூக்குமமாக இருக்கின்ற ஞான சித்தர்- திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் உபதேசம் புரிந்தார் -வாழ்ந்து காட்டினார். மரணமிலா பெருவாழ்வு அடைந்தனார். அவர் ஞானி. வள்ளல் பெருமான் போன்று ஞான விளக்கம் இவ்வளவு அருமையாக தெளிவாக யாரும் கூறவில்லை.

இதுவரை வாழ்ந்த மகான்கள் சித்தர்களின் நூல் தொகுப்பே-கருத்துக் களஞ்சியமே வள்ளலாரின் திருவருட்பா ஆகும். இப்பேர்ப்பட்ட திருவருட்பாவை அறியாத சைவர்கள் யாழ்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையில் அன்றே வள்ளல் பெருமானை குறை கூறியும் திருவருட்பாவை பழித்தும் பலவாறாக பேசினார்.சைவ சித்தாந்தம்தான் உயர்ந்தது என்று அறிவிலிகள் அகங்காரத்தில் கொக்கரித்தனர். அப்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செய்குதம்பி பாவலர் என்னும் ஒருமுஸ்லீம் ,திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் அருமை பெருமைகளையும், ஒப்புயர்வற்ற ஒரு ஞானி அவர் என்பதனையும் ,திருவருட்பா அனைத்தும் இறைவன் அருளால் வள்ளலார் பாடிய அருள்பாக்கள்தான் என்றும் தக்க ஆதாரங்களுடன் எடுத்தியம்பினார். இந்தியாவில் -தமிழகத்தில் பிறந்த -ஒளியுடல் பெற்று மரணமிலா பெருவாழ்வு பெற்ற ஒரு மகானை -உத்தம புருஷரை இந்துக்கள் சைவர்கள் என்று கூறி அலையும் இதே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே பழித்தனர் என்றால் இவர்களின் அறியாமையை என்னென்றுரைப்பது? ஆனால் வேறு மதத்தில் பிறந்த ஒருவர் வள்ளலாரை போற்றிப் புகழ்ந்தாரென்றால் அவரின் அறிவுத்திறன் எவ்வளவு உயர்ந்தது பார்த்தீர்களா?சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்கள் பல்வேறு கூட்டங்களில் எதிர்த்து பேசியவர்களின் கொட்டத்தை அடக்கி, தி ருவருட்பாவின் ம கிமையை-அருள் திறத்தை உலகறியச் செய்தார்கள். வள்ளல் பெருமானை அறிந்து கொள்வதற்கே-திருவருட்பாவை படித்து உணர்வதற்கே ஞானம் வேண்டும்! செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஊரில் நானும் பிறந்திருக்கிறேன் என்று எண்ணும்போதே பேரானந்தப்படுகிறேன். வாழ்க அவர்தம் புகழ்!

ஒப்புயர்வற்ற திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அவர்களையே சற்குருவாக-வணக்கத்திற்குரிய ஞானியாக- பின்பற்றுவதற்குகந்த மாபெரும் சித்தராக-தான் சொன்னபடி வாழ்ந்துகாட்டி மரணமிலா பெருவாழ்வு பெற்று ஒளியுடல் பெற்று இறை நேச செல்வராக விளங்கியவரை நாம் ழுழுமனதோடு ஏற்றுக்கொண்டு அவர்காட்டும் பாதையில் நடந்தால் நாமும் பெறலாம் மரணமிலா பெருவாழ்வு!இது சத்தியம்.

Reader Comments (11)

 1. Giridharan Mahadevan March 1, 2013 at 9:54 am

  good. worth. wish to follow

 2. murugesan May 27, 2013 at 10:55 am

  very very good

 3. T Rajarajeswaran June 1, 2013 at 10:50 am

  A Wonderful Eye Opener

 4. SARAVANAN October 20, 2013 at 1:49 pm

  ஐயா .உங்கள் ஞானவழி தொடரட்டும் நாங்கள் சிறுவழியில் வருகிறோம்

 5. Pasupatheeswaran Mylachalam [ AHNILAIYAPPAN ] December 7, 2013 at 2:18 pm

  Request to write more about Pavalar Sheikh Thambi Pavalar.

  • admin December 9, 2013 at 6:55 am

   Hi Pasupatheeswaran
   You can find more information about this in our books “Saagaa Kalvi” (Introduction) and also in “Gnanam Pera Vizhi” which you can buy.

   Best Regards
   Thanga Jothi Gnana Sabai

 6. KARTHIKEYAN MANNARGUDI January 18, 2014 at 3:28 pm

  excellent. very good message.thankyou sir

 7. manthiram January 28, 2014 at 5:10 pm

  arumai arumai arumai

 8. muthumari May 20, 2014 at 12:25 pm

  very very very good sir

 9. GANESAN MANIVEL November 25, 2014 at 11:14 am

  ARUMAI, UNMAI, THEVAI ELLOURKUM INTHA KALVI & ITHU THAAN KALVI

 10. mohammadhu fayas December 2, 2014 at 7:42 am

  masha allah atputhamana varigal…enrum valamudan peruvaalvu vaala nam piraththikinrom…ellam avane…

What do you think?