தெரிந்து கொள்ளுங்கள்

திருவருட்பா – பாத்திரத்தில் சிறந்தது

திருஅருட் பிரகாச வள்ளலார் நமக்கு வழங்கயுள்ள ஞான கோடை “திருவருட்பா”. “பா” திறத்தில் சிறந்த இந்நூலினை பற்றி ஞான சற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா  இயற்றி உள்ள கண்மணி மாலை நூலிலிருந்து:

சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம். தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம் என நமக்கு சுட்டிக்காட்டிய பெருந்தகையோன் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அதுவரை உலகில் தோன்றிய ஞானிகளின் நூற்கள் அனைத்தையும் இனிமேல் வர இருக்கும் நூற்களையும் எல்லாம் வல்ல இறைவன் அருட் பெரும் ஜோதி ஆண்டவர் அருளால் ஓதாதுணரப் பெற்றார். தன் சிறு வயது முதலே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், உள்ளிட்ட அணைத்து ஞானிகளின் நூற்களையும் பாடி பரவினார். சிறுவனாயிருக்கும்போதே பெரிய புராணச் சொற்பொழிவு ஆற்றும் வல்லமை பெற்றிருந்தார் என்றால் அவரின் அறிவுத்திறம் அருள் திறமை எத்தகையது! பிறந்ததும் வளர்ந்ததும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டல்லவா?

விளையும் பயிர் முளையிலே தெரிந்தது. வள்ளலார்  இறை உண்மையை தெளிவுபடுத்தி – எளிமைபடுத்தி – சன்மார்க்க வாழ்வு வாழ்ந்து மேநிலை அடைய வழிகாட்டினார். அதற்காக சன்மார்க்க சங்கம் அமைத்தார். சத்திய ஞான சபை உருவாக்கினார். தை பூச இச் திருநாளில் ஜோதி விழாகண்டவர். மரணமிலா பெருவாழ்வை மற்றவர்களுக்கு போதித்ததோடு தானும் அடைந்தார்.

சன்மார்க்கத்திற்கென தனிக்கொடி ஏற்படுத்தினார். இன்னும் எத்தனையோ சிறப்புக்கள் பெற்றவர். சீர்திருத்தம் புரிந்தவர். இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்று எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் முதல் பிள்ளையாக பெருமை பெற்ற திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் கருத்து கருவூலம்  தான் திருவருட்பா. இதுவரை வந்த அனைத்து மகான்களின் கருத்துகளையும் தொகுத்து வழங்கிய பெருமை, உண்மை பொருளை உலகர் அறியச்செய்த பெருமை வள்ளலாரின் திருவருட்பாவையே சேரும்.  வள்ளலாரே தன் கூற்றில் இனி ஞான சித்தர்கள் காலம் என கூறுகிறார். எனவே ஞானிகள் பெருகட்டும்.

திருவருட்பா பாத்திரத்தில் சிறந்தது. “பா” திறத்தில் மிக மிகச் சிறந்தது இது. சுமார் 6000 பாடல்களைப் பாடிய வள்ளலார் எந்தப் புலவரிடமும் பயிலாதவர், அருட்கவி. கற்க வேண்டியவைகளை இறைவனிடமே கற்றார். எல்லாவித இலக்கண நெறிக்கு உட்பட்டதும் – மிக மிக உயர்ந்த நடையை உடையதாகும். இலக்கணம் படித்தவர் இதனை கண்டு வியப்பர். சாதாரண மனிதன் இப்படி எழுத முடியுமா? திருவருட்பா எல்லா ஞானிகளின் கருத்து சாறு என்றால் திருவருட்பாவின் ஞானரசம் வள்ளலாரால் அருட்பெரும் ஜோதி அகவலில் திரட்டபட்டுள்ளது. இதனை படித்து வியக்காத பண்டிதனே கிடையாது. இனி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை எல்லாம் எந்த அருட்பெருஞ் ஜோதி அகவல் ஒன்றிலே உள்ளது. இப்படி “பா” வாகிய பாடல்களில் திறத்தில் மிக மிக உயர்ந்தது திருவருட்பா என்றால் மிகையாகாது.  “பாத்திரத்தில் சிறந்ததாகும்” – அதாவது இறைவன் நம் உடலில் காரியப்பட்டுள்ள சற்பாத்திரத்தின் திறனை நயம்பட உரைத்தப்பாங்கு.  பாத்திரத்தின் இடம், தன்மை, செயல்படும் விதம், முடிவு எல்லாம் விளங்கக் கூறுவதால் – இது பாத்திரத்தின் சிறப்பை விளங்க வைப்பதால் பாத்திரத்திலும் சிறந்தது என்றாகிறது. இப்படி “பா” திறத்தாலும் , பாத்திரத்தை உணர்த்தும் பான்மையாலும் மிகச் சிறந்தது திருவருட்பா என்றால் அது யாராலும் மறுக்க முடியாததாகும். எனவே பாத்திரத்தில் சிறந்தது திருவருட்பாவேயாகும்.

திருவருட்பாவின் பல பாடல்களும் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் மகத்துவமும் எங்கள் குரு நாதர் திரு சிவா செல்வராஜ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள எல்லா நூற்களிலும் பல பல இடங்களில் காணலாம். இம்மகானை போற்றுவதும் அவர் தம் செந்நெறியை உலகோருக்கு உணர்த்துவதும் எங்கள் கடமையல்லவா?  எங்களால் இயன்ற அளவு செவ்வனே செய்து வருகிறோம். திருவருட்பா உரைப்பது இங்கே காணலாம்.

கண்ணின் உண்மணி யாயநின்தனைக்
கருதிடாதுழல் கபடநேற்கருள்                    
–  திருவருட்பா – பாடல் 133

இறைவா கண்மணியான உன்னை கருதாமல் உழல்கின்ற கபடனான எனக்கு அருள்வாயாக.

மணியே அடியேன் கண்மணியே மருந்தே – திருவருட்பா 183

இறைவனே என் கண்மணியாக இருப்பவனே என் பிறவிப் பிணிக்கு நீயே மருந்து என கூறுகிறார்.

என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ   – திருவருட்பா 231

என் கண்ணே இறைவனே நீ கண்ணிலே  அமர்ந்த அழகை கண் குளிர காண வேண்டும் என்கிறார்.

காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ – திருவருட்பா 278

கண்மணியில் நினைவை செலுத்திச் செலுத்த கண்களில் ரத்த ஓட்டம் மிகுந்து காவி கண்ணாகும். சந்நியாசியானவன் காவி கட்ட வேண்டும் என சொல்வது இதை தான். காவி உடைகள் தரிதவனெல்லாம்  சந்நியாசி அல்ல. இப்படிப்பட்ட காவி ஏறிய கண்ணிலேயே வசிக்க வேண்டும். மனம் தங்க வேண்டும் கண்மணியின் ஒளியை இறைவனை துதிக்க வேண்டும் என வள்ளலார் கூறுகிறார்.

பரமன் ஈன்ற கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்    – திருவருட்பா 300

பரமனாகிய இறைவன் ஈன்ற பிள்ளையாகிய  ஜீவனாகிய கண்ணே உன் தணிந்த நிலையாம் அமைதி-அருள் நிலையை காண வேண்டும் எனக்கு அந்நிலை வர வேண்டும் என்கிறார்.

என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி – திருவருட்பா 550

என் இரு கண்களில் உள்ள கண்மணியில் ஒளியாக நிற்கும் இறைவனை போற்றுகிறேன் என உரைக்கிறார்.

கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்து – திருவருட்பா 1049

இறைவா உன் கழற் பதத்தை என் கண்ணினால் காண வேண்டும் என்பதனை மறந்து திரிகிறேன் என்கிறார்.

சொல்ஆர்ந்த விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
கண்மணியை நெஞ்சே கருது–     திருவருட்பா 1278

விண்மணியான இறைவனை, என் உயிரை என் மெய்பொருளை  என் உடலில் தலையில் கண்மணியில் மனதை ஒற்றியிருந்து சாதனை புரி என்கிறார். மெய் பொருளாம் இறைவன் உயிராகி நம் கண்மணியில் ஒற்றி இருக்கிறார்.

கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்   –    திருவருட்பா 1371

கண்-நுதலே, கண்ணிலே இருக்கும் இறைவனே, ஒளியே உன் அடியார்களை போற்றி அவர்களுக்கு பணி செய்யவும் அறிந்திலேன். கண்மணி மாலை – இரு கண்மணியை பற்றி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கனிந்து நிற்கவும் இல்லை என்கிறார் (இந்நூலாகிய கண்மணி மாலை)க்கும் கனிந்து நில்லேன் என்று நாம் பாடுவது போல பாடப்பட்டுள்ளது பொருத்தமாக உள்ளது அல்லவா? வள்ளல் பெருமானே இந்நூலுக்கு (கண்மணி மாலை) வழங்கிய சிறப்பு பாடலாகவே இதனை கருதுகிறோம்.

தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே –    திருவருட்பா 1383

நம் உள்ளகத்தே ஒளியாக இறைவன் இருப்பதை காண அந்த இறைவனே ஜீவனை இருக்கும் – எல்லாமாய் இருக்கும் – கண்மணியை கண்டு கொள்ள வேண்டும் என்கிறார்.

கண்ணேஅக் கண்ணின் மணியே

மணியில் கலந்தொளிசெய் விண்ணே –    திருவருட்பா 1392

இறைவன் கண்ணில் – கண்மணியில் உள்- ஆகாயத்தில் ஒளியாக உள்ளான். இப்படியாக எல்லா பாடல்களிலும் கண்ணில்-மணியில் ஒளியில் இறைவன் இருப்பதை நமக்கு கூறுகிறார். எவ்வளவு எளிமையாக உள்ளது. இதற்கு விரிவான விளக்கமே தேவை இல்லை. பாத்திரத்தின் தன்மையை , இறைவன் தங்கிய கண்ணாகிய பாத்திரத்தை இங்ஙனம் விளக்குகிறார் வள்ளலார்.

கண்ணின் மணி போ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
னெண்ணி யறி நீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ  –    திருவருட்பா 1796

திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இங்கித மாலை என்னும் தலைப்பில் இது போல் 100 பாடல்கள் உள்ளது. இங்கிதமாக சொன்னது. இதனை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

சிந்திப்பவர்களுகே விடை கிடைக்கும். திருவொற்றியூரில் குடி கொண்ட சிவன் பிச்சை எடுக்க வருகிறாராம். அப்போது ஒரு பெண்ணுக்கும் அவருக்கும் நடந்த உரையாடலாக இப்பாடலை வள்ளலார் புனைந்துள்ளார். எவ்வளவு உயர்ந்த ஞான விளக்கம். கற்பனை வளம். தமிழ் புலமை. நம்மை வியப்படைய வைக்கிறது. இதனை கற்றுணர்வது ஞானம் பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். திருவருட்பாவின் “பா” திறமைக்கு இதுவும் ஒரு சான்று. பாத்திரத்தை விளக்கும் தன்மைக்கு இது சான்றே. கண்மணி போல் இங்கு நிற்கும் கள்வராகிய இவர் ஊர் திருவொற்றியூர். கண்மணி போன்ற திருவொற்றியூர் சிவன். இனிய குரல் உடைய பெண்ணே நீ எனக்கு ஒரு பறவை தா என்றார். பிச்சை கேட்க வந்தவன் பறவை தா என சொன்னது எதை? சிந்தியுங்கள். பெண்ணே எனக்கு அன்னம் தா – சாப்பாடு தா என்கிறார். அன்னம் ஒரு பறவையின் பெயரல்லவா? அதை தான் வள்ளலார் அங்ஙனம் எழுதினார். அவளும் அன்னத்தை கொடுத்தாள். அதை பெற்று கொண்ட சிவன் மீண்டும் இங்கிதமாக , சிலேடையாக நீ ஒரு பறவையதாய் வாழ்வாய் என வாழ்த்தினார். கிளிக்கு இன்னொரு பெயர் சுகம். சுகமாய் வாழ்வாய் என வாழ்த்தினார். எவ்வளவு கற்பனை வளம். தமிழ் வளம். அறிவுடையோரே புரிந்து கொள்வர்.

மேலும் இதன் ஞான விளக்கமாவது , நம் உடலில் மறைந்திருக்கும் இறைவன் – கள்வர் என கூறியது இதனால்தான்.  ஜீவனாகிய பெண்ணிடம் – நாம் சாப்பிடும் ஆகாரமாகிய அன்னத்தை பிச்சையாக பெறுகிறார். பின் சுகமாய் வாழ்வாய் என உடலை கொண்ட ஜீவர்களுக்கு உரைத்ததாகும். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணி அறிய வேண்டும். சிந்தித்து தெளிய வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். இறைவன் நம் உடலில் கண்ணில் மணியாக மணியின் ஒளியாக நிற்கிறார் என்று வெட்ட வெளிச்சமாகக் கூறுகிறார். எல்லா பாடல்களிலும் இப்படியே கவிநயம் உவமைநயம் வெளிப்பட ஞான விளக்கம் கொடுத்துள்ளார்கள். திருவருட்பாவிற்கு நிகர் திருவருட்பாவே. திருவருட் பிரகாச வள்ளலாருக்கு நிகர் திருவருட் பிரகாச வள்ளலாரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த மாபெரும் ஞானியை போற்றுவதே அவர் தம் திருவருட்பாவை ஆய்ந்து உணர்தலுமே நாம் உருபெற ஒப்பற்ற வழியாகும்.

திருவருட்பா முன்றாம் திருமுறையில் திருவடி புகழ்ச்சி பாடலில் கண்ணாகிய இறைவனை திருவடியை எப்படி எல்லாம் எடுத்து இயம்புகிறார். அணைத்து பரிபாசை சொற்களும் வெளிபடுகின்றன. சின்மயம், பூரணம், மௌனம், ஜோதிமயம் இப்படியாக திருவடியின் பெயர் மெய் பொருளின் பெருமை உரைக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பக்கலி வெண்பாவில் தமிழகத்திலுள்ள அணைத்து சிவாலயங்களையும் போற்றுகிறார். நெஞ்சறிவுறுத்தல் பகுதியில் நமக்கு உரைக்கும் உபதேசம் பின் வருமாறு:

“பற்றற்றான் பற்றினையே  பற்றியிடல் வேண்டுமது பற்றற்றால் அன்றி பலியாது.” – என்றும்

“சாதுக்கள் சங்கம் சார வேண்டும் என்றும்

கொல்லா விரதமது கொள்ளாரை காணிலொரு

புல்லாக எண்ணிப் புரம்பொழிக” என்றும் உரைக்கிறார்.

பற்றற்றான் ஆகிய கண்ணை பற்ற வேண்டும். அதன் மூலம் மேனிலை அடைய வேண்டுமானால் உலக பற்றை நாம் விட வேண்டும் என்கிறார். பற்றற்றான்-கண் – இறைவன் என ஏற்கனவே பார்த்தோம்.

சாதுக்கள் – இறைவன் அடியார்கள் – சாதுவான குணம் உடையோர். சத்தான விஷயமான இறைவனை பற்றிய விஷயத்தை  பேசும் சங்கத்தோடு மட்டுமே சேர வேண்டும் என்று கூறுகிறார்.

கொல்ல விரதம் கொள்ளதவர்களை கண்டால் புல்லை போல அவர்களை கருத வேண்டும். அதாவது உயிர் கொலையும் புலை புசிப்பும் உடையவர்களை கண்டாலே நாம் ஒதுங்கி சென்று விட வேண்டும் என்கிறார். வள்ளல் பெருமான் எல்லா உயிர்களின் மீதும் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு சான்று.  ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.

கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே    –  திருவருட்பா 2096

இறைவனே கண்ணாய் கண்மணியாய் ஒளியாய் கண்ணினுள் கலந்து நிற்கிறான் என்கிறார்.

அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே    –  திருவருட்பா 2113

மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றை இறைவனை – அண்டமெல்லாம் கண்ணாக கொண்டாலும் அணு அளவு கூட காண முடியாது என வேதங்கள் அலறி புலம்புகிறது என்றும் கண்டம்- கண்ட வடிவத்திலே உள்ள கண்ணிலே அகண்டமாய் – உலகு எங்குமாய் விரிந்து பரந்து நிற்கும் தனிப் பெருங்கருணை அருட்பெரும் ஜோதியே இறைவன் என்றும் – என் இரு வினைகளை அற்று நான் மேனிலை அடைய எனக்கு சின்மயம் எனப்படும் கண்ணை காட்டுகின்ற சற்குருவே சிவகுருவே சாந்தமாக விளங்கும் கடவுளே எனக் கூறுகிறார்.

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே    –     திருவருட்பா 2118

எல்லா சமயங்களும் முடிவில் சங்கமிக்கும் கடல் போன்ற இறைவனே – எங்குமாய் – கண்ணாய் பார்க்கப்படுகின்ற இறைவனே – என்கதியே – ஒளியே என கூறுகிறார். எல்லாரும் கண்ணிலே இறைவனை காண்கின்றனர் என்கிறார்.

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே     –    திருவருட்பா 2118

பற்பல கடுமையான விரதங்கள் புரிந்தாலும் மெய்ப்பொருள் அறியாவிட்டால் இறைவனை காண முடியாது என்பதே இதன் கருத்து. யாரிடம் இருக்கிறான் – வெளிபடுகிறான் இறைவன்? மேலாம் சிற்பதத்தில்-சின்ன-பதத்தில்-திருவடியில்-சிற்றம்பலத்தில் சின்மயமாய்-கண்ணில் நிறைந்து ஞானமே உருவான திருவாளர்களிடம் உட்கலந்து இருக்கிறான் என்று இயம்புகிறார்.

மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யே –                     திருவருட்பா 2742

இறைவனே ஜோதி – சுயம் ஜோதி – அவன் நம் கண்ணில் மணியாக உள்ளான் என்கிறார்.

என்னிருகண் காள்உமது பெருந்தவம்

எப் புவனத்தில் யார்தான் செய்வர்   –  திருவருட்பா 2770

வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

மெய்விளக்கே விளக்கல்லால்

வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர்               திருவருட்பா 3028

நம் மெய் எனப்படும் உடம்பில் விளக்கு கண் எனப்படும். இதெல்லாமல் வேறு விளக்கு இல்லை என பெரியோர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் என வள்ளலார் சொல்கிறார். கண்ணே சாரீரத்தின் விளக்கு என இயேசு சொல்வதை கவனியுங்கள்.

இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன்   –                         திருவருட்பா 3051

ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தி  –     திருவருட்பா 3053

இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் –                                          திருவருட்பா 3038

மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்       திருவருட்பா 3074

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
பூணுகின்ற திருவடிகள்                                          திருவருட்பா 3125

எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே                                           திருவருட்பா 3147

உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே               திருவருட்பா 3159

இவ்வாறு வள்ளலார் தாம் ஆத்மானு பூதியில் அடைந்த இறைவனால் அருள் பெற்ற அருள் நிலை பற்றி கூறுகிறார். அவர் பெற்ற பேறுகளில் இருந்து எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார் என நாம் அறியலாம்.

வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
வயங்குசிற் சோதியே  –                                          திருவருட்பா 3554

கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே –   திருவருட்பா 3557

கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி –      திருவருட்பா 3583

இங்ஙனம் கருணை கடலான இறைவன் கண்ணிலே நின்ற தன்மையை உணர்ந்து மகிழ்ந்தார் வள்ளலார்.

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே                திருவருட்பா 3630

திருவருட் பிரகாச வள்ளலார் இறைவன் தனக்கு அருளிய பெரிய பெரும் பேறுகளை எல்லாம் சொல்லி முடியாத அளவு மிகுந்துள்ளது என்றும் இந்த பெரும் பேரின்ப பெருநிலை அடைய அருள்வாயாக என்று ஆண்டவரிடம் மன்றாடுகிறார். உலக மக்கள் அனைவர் மீதும் அவருக்கு அத்தனை அன்பு. அதனால் தான் அருள் வள்ளல் என்று அழைக்கபடுகிறார்.

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குற                                      திருவருட்பா 3760

நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளை நீக்கி கதவை திறக்க அருள்புரி என்றும் பெரும்ஜோதி திரு உருவைக் காட்டு என்றும் என் உடம்பும் உயிரும் உள்ளதையும் ஒளிமயமாக்கு என்றும் வள்ளலார் அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டுகிறார்.

 

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்  

தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்

சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்                                        திருவருட்பா 3910

எனக்கு சாகாத வரம் தந்த அருட்ஜோதி தெய்வம் என் இதய கமலமான என் இரு கண்மணிக்குள் தூண்டாத மணி விளக்காய் துலங்குகிறது என வள்ளலார் கூறுகிறார்.

 

நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றமொன்றும்

ஆயேன் என்று அந்தோ அணிந்து கொண்டான்.                                           திருவருட்பா 4043

ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல்அணிந்தான்                                           திருவருட்பா 4036

ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான்                                            திருவருட்பா 4045

இறைவன் தான் பாடிய பாடல்களை ஏற்று அருள்புரிந்து நீயே என் பிள்ளை உனது பாட்டே வேதாகமம் ஐந்தொழிலையும் நீ செய் என அருளினான் என்று கூறுகிறார் வள்ளலார். எத்தகு உயர்ந்த நிலை இது. ஞானிகளுகெல்லாம் தலைவர் வள்ளலாரே. உலகம் முழுவதும் மேன்மையடைய வேண்டும் என்பதே வள்ளலார் விருப்பம்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்

 எவ்வுலகமமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

சாதி சமய விகற்பங் களெலாம் தவிர்த்தே

எவ்வுலகமும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்                        திருவருட்பா 4086

என்று எல்லாம் வல்ல ஆண்டவரிடம் வேண்டுகிறார்.

இறைவன் எப்படி நமிடம் இருக்கிறார் தெரியுமா?

 

கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே                                     திருவருட்பா 4108

இதை நன்றாக சிந்தித்து உணர்ந்து பற்றி கொள்ளுங்கள்.

என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி                திருவருட்பா 4180

இறைவன் தனக்கு இந்தப் பிறவியிலேயே அடைய வேண்டிய அனைத்து உயர் நிலையையும் கொடுத்தருளினான் என்று பெருமிதம் கொள்கிறார் வள்ளலார். நாமும் பெறலாம் என உரைக்கிறார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் உள்ளது திருவருட்பா. ஆறாம் திருமுறையில் 63 ஆவது பதிகம் “ஞானோபதேசம்” எனும் பகுதியிலுள்ள 10 பாடல்கள். ஒவ்வொரு ஆத்ம சாதகனும் ஆராய்ந்து அறிய வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று இதுவேயாகும்.

கண்ணே கண்மணியே எனத் தொடங்கி எனக்கு உண்மை உரைத்தருளே  என முடிக்கிறார் வள்ளலார்.

கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே           திருவருட்பா 4687

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே                திருவருட்பா 4745

ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே – வானப்

பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதி அது                                                                           திருவருட்பா 4823

அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னேஇருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய்   சித்தியைக்   கொண்டே   னே                             திருவருட்பா 5116

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு                           திருவருட்பா 5258

பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே              திருவருட்பா 5486

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் – பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து                                                திருவருட்பா 5487

ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி                 திருவருட்பா 5697

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்                      திருவருட்பா 5723

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்                             திருவருட்பா 5803

மெய்ப் பொருளாம் – சிவம் – ஒளி – ஒன்றே உலகமெங்கும் உள்ளது என உணர்ந்த வள்ளலார் அருட்பெரும்ஜோதியை கண்களில் கண்டார். அங்கே கற்றதே சிற்றம்பலக் கல்வி – சாகா கல்வி என்றார். அதனால் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் பெற்றார். அந்நிலையில் அவர் மேனியிலே கற்பூரவாசம் வீசியது. இது இறைவன் அவரோடு கலந்து வெளிப்பட்டு நின்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறது.

திருவருட்பாவின் மகத்துவம் வெளிப்பட இது போல் இன்னும் ஓராயிரம் நூல் எழுதினாலும் முடியாது. அவ்வளவு பெரிய பெருமை வாய்ந்தது.

சாத்திரத்தில் சிறந்த திருமந்திரத்தையும்

தோத்திரத்தில் சிறந்த திருவாசகத்தையும்

பாத்திரத்தில் சிறந்த திருவருட்பாவையும்

     எல்லோரும் கண்டு களி கொண்டு பரகதி அடையுங்கள். படித்தால் மட்டும் போதுமா? அனுபவத்திற்கு வாருங்கள். உழைத்தால் பெறுவீர் உயர்வை.

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆறாம் திருமுறை முழுக்க ஞானக் களஞ்சியமாகவே உருவாக்கித் தந்துள்ளார்கள். இதில் எதை சுட்டி காட்டுவது? எதைத் தவிர்ப்பது என புரியாது தவிக்கின்றேன். எதையும் தவிர்க்க முடியாமல் திகைக்கின்றேன். ஒவ்வொரு பாவும் அப்பப்பா. நினைக்க நினைக்க நெஞ்சில் அமுதுறும் தீந்தமிழ் பாக்கள். ஒவ்வொரு சொல்லும் மெய்பொருள் விளக்கம். மனிதனாய் பிறப்பதற்கே மண்ணில் மாதவம் செய்திருக்க வேண்டும். ஞான நூல்களை அறிந்து மேன்மையடைய விட்டகுறை தொட்டகுறை வேண்டும். அது இருந்தால் தானே வாய்க்கும். திருவருட்பாவை படிப்பவன் , உணர்பவன் மேன்மை அடைவான். ஒரு அன்பர் கூறுகிறார்.

பக்தி வரும் பழவினைகள் பறந்தோடு

   மூலமலப் பகுதி மாயும்

புத்திவரும் புலை கொலைகள் புறம்போகு

   மானந்தம் பொங்குஞ் சாந்த

முக்தி வரும் அழியா நன் மோக்கமுறு

   முதுகடல்சூ ழுலகி வெல்லாச் 

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

   அருட்பாவை சிந்திப் போர்கே

திருவருட்பாவை சிந்தித்து சிந்தித்து உணர்ந்து வாழும் நெறிப்படி

வாழ்பவர் வாழ்வாங்கு வாழ்வர்.  மரணமில்லா பெரு வாழ்வு பெறுவர்.

(மறைந்து கிடைத்த திருவருட்பா)

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

 

 

 

 

 

 

 

 

Reader Comments (10)

 1. G.THIRUMALAIHKUMAR January 3, 2014 at 8:34 am

  Excellent, please upload in full of thiruvarutpa.

  • admin January 6, 2014 at 11:24 am

   Hi G.Thiurmalaihkumar

   You can buy the complete book. Please contact any one in the contact list.

   Best Regards
   Thanga Jothi Gnana Sabai

 2. manthiram January 28, 2014 at 5:24 pm

  kan thiranthamaikku nandri

 3. N. Mohan March 19, 2014 at 2:59 pm

  Today i first time visit the this website it’s very useful for me .
  thank you very much .

 4. M. Sudaramoorthy July 29, 2014 at 8:24 am

  There is no Words to Explain. Each and everybody realize it. Nobody gets empathy that unless God’s blessings

 5. B.shunmugam April 28, 2015 at 4:57 pm

  Please clear right eye. (8) sun. Left eye (2) Chandra’s. how you mean 8 & 2
  Explain to my above mail I’d or SMS to 9791706705
  Shunmugam
  Sunmarka a bar.

  • admin April 29, 2015 at 7:07 am

   Hi

   See the SivaVackiyar song:

   “Valathu Kan(Right Eye) Suriyan Idathu Kan Chandiran(Left Eye).”

   If you need more details attend any satsung and get clarity or talk with any person in the contact list.

   Best Regards
   Thanga Jothi Gnana Sabai

 6. mohamed fayasi October 9, 2015 at 5:30 pm

  💚நாம் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமெண்றால் உலகத்தில் உள்ள எந்த மதத்தினராயினும்,எந்த சமயத்தினராயினும்,எந்த கலாச்சாரம் உடையவராயினும்,எந்த மொழியினராயினும் எந்த ஜாதியினராயினும் ஏல்லோரையும் கடவுளின் பிள்ளைகலாக எண்ணி அன்பு காட்டவேண்டும். மனித வர்கத்தை இனம் பிரித்து துவசிப்பது பாவமாகும்..

 7. mohamed fayasi October 9, 2015 at 5:37 pm

  எல்லாம் இறைவனின் திருவடிகளே என்
  கண்ணே றகுமாணே… எல்லாம் ஒன்றே..
  அருமையான பதிவு வாழ்க வைய்யகம்.
  அல்ஹம்துலில்லாஹ் நன்றி ஐய்யா..

 8. A.G.Ramadoss January 25, 2016 at 4:46 pm

  வணக்கம் ஐயா, அருட்பிரகாச வள்ளலார் உலகிற்கு தந்த ஞான ஒளியை நன்கு எடுத்து உறைத்தீர்கள். இந்த விளக்கம் பலருக்கு ஜோதியாய் இறைஅறிவுபெற வழிகாட்டும். நன்றி.

What do you think?