எங்களைப்பற்றி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

வந்தனம். சாதி, மதம், மொழி, இனம், நாடு முதலிய எந்த பாகுபாடுமின்றி உலக மக்கள் அனைவர்க்கும் எங்கள் பணிவான வணக்கங்கள்.

உலக மக்களுக்காக உண்மை ஞானத்தை எந்தவித ரகசியமுமின்றி, வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தி எல்லோரும் சத்தியத்தை – ஞானத்தை – இறைவனை உணர ஞானிகளின் ஆசியால் வெளிவந்ததே இந்த தங்க ஜோதி ஞான சபை .

இன்றைய உலகம் எதனை நோக்கி போய் கொண்டிருகிறது? மனிதனை மனிதன் வஞ்சித்து, தானும் கெட்டு பிறரையும் கெடுத்து சீரழிந்து போகிறான். சூழ்நிலையினால் கெட்டு போனேன் என்று சொல்பவன் முட்டாள்!உணர்சிக்கு அடிமையாகாமல் பொறுமையாக நிதானமாக செயல்படுபவனே நல்ல மனிதன். இன்றைய சீரழிவுக்கு முக்கிய காரணம் ஆன்மிக கல்வி இல்லாதது தான்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு,பேடு நீக்கி பிறத்தல் அரிது. அதனினும் அரிது ஞானமும் , கல்வியும் நயத்தல் அரிது. அதனினும் அரிது தானமும் ,தவமும் தான்
செய்தல் அரிது. தனமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி திறந்திடுமே.” ஔவையார் அருளிய ஞான அமுத வாக்கு இது.

மனிதனாக எக்குறையுமின்றி பிறந்த நாம் ஞானக் கல்வியை கற்பதே முக்கியமானது. பள்ளிக்கூட படிப்பு ஏட்டுச்சுரைக்காய். பணம் சம்பாதிக்க மட்டுமே உதவும். நாம் பிறந்தது பணம் சம்பாதித்து ஆடம்பரமாக சுகபோகமாக கண்டதை தின்று வாழ அல்ல.

நான் யார் ? ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்? எது நல்ல வாழ்க்கை? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தான் “ஞான கல்வி”. நாம் பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்காகவா?

அதை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வைப்பவர் தான் “குரு” . கண் கண்ட தெய்வமாக மாத, பிதாவிற்கு பிறகு நமக்கு அறிவூட்டி ஞானம் பெற வைப்பவர் தான் குரு.

“குருவில்லாத விதை பாழ்”.
“குரு பார்க்க கோடி வினை தீரும்”.
“குரு பிரம்மா! குரு விஷ்ணு! குரு மகேஸ்வரா! குரு சாட்சாத்ச் பரப்ரம்மம்” !

குரு ஒருவரை மனிதனாக பிறந்தவன் கண்டிப்பாக பெற வேண்டும். குருவை பெற்றவனே மனிதனாவான்.

“குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவாய் நிற்கும் சிவம்”.
இது ஔவையார் கூற்று.

குருவிற்கு காணிக்கை கொடுக்க மறந்தேனோ, குருவை
வணங்க கூசி நின்றேனோ என குருவின் மகத்துவத்தை வள்ளலார் கூறுகிறார்.

முதலில் நமக்கு தேவை நல்லொழுக்கம். எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல் தூய்மையானவனாக விளங்க வேண்டும்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் “

என திருவள்ளுவர் கூறும் ஒழுக்கதின் மேன்மையை உணர்ந்து வாழ வேண்டும்.

அடுத்து நல்ல உணவு. சுத்த சைவ உணவே மனிதகுல உணவு. சைவ உணவு சாப்பிடுபவனுக்கே இறைவன் அருள் கிட்டும். மாமிச உணவு உண்பவன் மனித மிருகம். எல்லா உயிரையும் தன் உயிர் போல் நேசி என்று தான் அனைத்து  ஞானிகளும் உபதேசித்து உள்ளனர். புகை பிடித்தல், மது அருந்துதல் கூடவே கூடாது. பஞ்சமா பாதகமான பொய், கொலை, களவு, கள், காமம் புரியாதவனே சிறந்த மனிதன்.

இவ்வாறு மனிதனாக வாழ்பவனுக்கு தான் ஞானக் கல்வி கிட்டும். ஞானக் கல்வியை ஒரு குருவின் மூலமாக தான் பெற வேண்டும் .

இந்த ஞான கல்வியே சாகா கல்வியாகும்.

“சாகா கல்வி” – சாகாத நிலை பெற்றவர்கள் உபதேசித்தது. ஞானிகள் என்பர். சித்தர்கள் என்பர். சராசரி மனிதர்கள் அடைய முடியுமா? ஆம் முடியும். சாவா நிலை பெற்ற சிரஞ்சீவியானவர்கள் நம் மீது கருணை கொண்டு உபதேசித்து உள்ளனர்.

இது வரை இவுலகில் தோன்றிய எல்லா மகான்களும் , எல்லாம் வல்ல இறைவனை பற்றியே , அவரை ஜீவன்கள் எவ்வாறு அடைவது என்பது பற்றியே பகர்ந்துள்ளனர்.

இறைவன் பேரொளியானவன். மனோ, வாக்கு, காயத்திற்கு அப்பார்பட்டவன். நம்மை உணர்ந்த பின்னே தான் இறைவனை உணர முடியும். விஞ்ஞானத்தை கொண்டு இறைவனை விளக்க நினைப்பவன் முட்டாள்.

நம் உயிர் (ஜீவான்மா) இறைவனின் சிறு அம்சமே. நம்  உடலில் உயிர் இருப்பது நம் தலையின் உள் நடுவில். அந்த உயிர் துலங்குவது நம் இரு கண்களில் – கண் ஒளியாக. கண்களே இறைவனின் திருவடி. கண்களின் மூலமே நாம் நம் உள் சென்று (கடத்தினுள் சென்று) நம்மை உணர முடியும்.

“தன்னை உணர்ந்தவனே தலைவனை உணர்வான். “ தன்னை உணர தவம் செய்ய வேண்டும்.விழியின் வழியாக. இதை உபதேசித்து விழியில் உணர்வை கொடுத்து தவம் செய்ய கற்று கொடுப்பவரே உண்மை (உன்-மெய்) குரு.

எங்கள் குருநாதர் திரு. சிவ செல்வராஜ் அவர்கள் வள்ளல் பெருமான் அருளால் இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீக்ஷை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறார்.  அவர் பணி தொடர
ஒன்பதுசீடர்களுக்கு குரு பீடம் கொடுத்து உள்ளார்கள். கன்னியாகுமரியில் மட்டும் திருவடி உபதேசம் தீட்சை கொடுக்கப்பட்டு வந்தது,குருவின் அருளால் மேலும் ஒன்பது இடங்களில் கொடுக்கப் படுகிறது.

2014 தை பூச நன்னாளில் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமானின் அருளால் தனது 9 சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார்கள். இந்த ஒன்பது குருமார்கள் உள்ளிளிலிருந்து தற்போது வள்ளல் பெருமான் திருவடி தீட்சை வழங்குகிறார்கள்.

தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்

ஞான சற்குரு சிவ கிருஷ்ணமுர்த்தி , சென்னை
ஞான சற்குரு சிவ யுவராஜ், காஞ்சிபுரம்
ஞான சற்குரு சிவ விமல்ராஜ் , வடலூர்
ஞான சற்குரு சிவ பாபு, கடலூர்
ஞான சற்குரு சிவ சரவணன், திருச்சி
ஞான சற்குரு சிவ சுயம் ஜோதி, கன்னியாகுமரி
ஞான சற்குரு சிவ அரவிந்தராஜ், ஓசூர்
ஞான சற்குரு சிவ விஜயன், பெங்களூர் & கும்பகோணம்
ஞான சற்குரு சிவ பாலு, பெங்களூர் & கோயம்புத்தூர்

குருபீடத்தில் அமர்ந்துள்ள ஒன்பது குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான் தான் தீட்சை வழங்குகிறார்.

குருவினால் குருபீடத்தில் அமர்த்தப்பட்ட ஒருவர் மூலமாக தான் தீட்சை ஞானிகளால் வழங்கப்படும். இந்த ஒன்பது குருமார்கள் தவிர யாரும் திருவடி தீட்சை வழங்க இயலாது.

பாமர மக்கள் நேரடியாக வள்ளல்பெருமானை பார்க்கும் ஆன்ம பலம் இல்லாததால் ஸ்துல தேகத்தில் உள்ள குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான்  தீட்சை வழங்குகிறார். 

வாருங்கள். விழியில் உணர்வு பெறுங்கள். தவம் செய்ய கற்று கொள்ளுங்கள்.
ஞானம் கிட்டும்.

அன்பர்களின் கவனத்திற்கு : தங்க ஜோதி ஞான சபை தீட்சை பெறாத எவரிடமும் நிதி வசூலிப்பது இல்லை. தங்க ஜோதி ஞான சபையின் பெயரிலோ அல்லது குருவின் பெயரிலோ யாராவது நிதி கேட்டால் புறக்கணித்து விடுங்கள்.

“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”

தங்க ஜோதி ஞான சபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

கன்னியாகுமரி